TNPSC Thervupettagam

அணைகள் பாதுகாப்புச் சட்டம்

April 13 , 2022 846 days 443 0
  • மத்திய அரசு கொண்டுவந்துள்ள அணைகள் பாதுகாப்புச் சட்டம் 2022-ஐ, தமிழ்நாடு அரசு விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடியும் தேவையும் ஏற்பட்டுள்ளது.
  • கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதிலும், நதி நீர் யாருக்குச் சொந்தம் என்ற உரிமைக்குமான போராட்டங்கள் தொடர்கின்றன!
  • மேட்டூர் அணை தமிழ்நாட்டு எல்லைக்கு அருகே, தமிழ்நாட்டு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • காவிரி நீர் புறப்படும் இடம் கர்நாடகத்தின் குடகுவாக இருந்தாலும், பெரும் பகுதியான நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கேரள எல்லைகளில் இருக்கின்றன.
  • காவிரி, கர்நாடகத்தின் வழியே சுமார் 400 கிலோமீட்டர் பயணித்து, தமிழ்நாட்டு எல்லையை அடைகிறது. தமிழ்நாட்டின் மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் நிலை உள்ளது.
  • கேரள எல்லையில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது. முழு பாசனப் பரப்பும் தமிழ்நாட்டில் உள்ளது.
  • ஆனால், அணை இருக்கும் இடம் கேரளத்துக்குச் சொந்தமானதால், கேரளம் சட்டத்துக்குப் புறம்பாக ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. அணைக்கு வரக்கூடிய நீர்ப்பிடிப்புப் பகுதி தமிழ்நாட்டில் உள்ளது.
  • அணை கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு வாடகை செலுத்திவருகிறோம்.
  • அதேபோல கேஆர்பி அணை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் உள்ளது. ஆனால், தென்பெண்ணை ஆறு கர்நாடகத்தில் உருவாகி, அங்கிருந்து ஓடி வருகிறது. கர்நாடகம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி, தண்ணீரைத் தடுத்து வருகிறது.
  • பாலாறு ஆந்திரத்தில் உருவாகி, தமிழ்நாடு வழியே கடலில் கலந்தாலும் வழியில் உள்ள செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்கள் போன்றவற்றில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீர் பாழாகிவிட்டிருக்கிறது.
  • இதனால், பாசனப் பகுதி பாலைவனமாக மாறும். சுமார் 2 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். பாலாற்றில் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி ஆந்திரம் தண்ணீரைத் தடுத்துவருகிறது.
  • ஆக, தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பிற மாநிலங்களை நம்பித்தான் இருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 90% பேர் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்கின்றனர்.
  • காவிரி, முல்லைப் பெரியாறு, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட நதிகளின் நீரை நம்பியே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை உள்ளது.
  • தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், சென்னை உட்பட 15 மாநகராட்சிகளை உள்ளடக்கிய சுமார் 35 மாவட்டங்களில் வாழும் சுமார் 7 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • காவிரி, முல்லைப் பெரியாறு, தென்பெண்ணை, பாலாறு குறித்த உரிமைக்கான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழ்நாட்டுக்கு மேலே இருக்கும் மாநிலங்கள் நடைமுறைப் படுத்த மறுக்கின்றன. இதனால், கீழ்ப் பாசனப் பகுதியான தமிழ்நாடு பின்னடைவைச் சந்திக்கிறது.
  • இது குறித்தான சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
  • அது, உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகச் செயல்பாட்டில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்காக மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் மேற்பார்வைக் குழு அமைக்கப் பட்டிருக்கிறது.
  • பாலாறு, தென்பெண்ணைக்கான வழக்குகள் நடைபெற்றுவருகின்றனவே தவிர, இறுதிக் கட்டத்தை எட்டவில்லை.
  • ஆனால், தொடர்ந்து தடுப்பணைகள் கட்டி, கர்நாடகமும் ஆந்திரமும் தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
  • இந்நிலையில், மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல்செய்தபோது, தமிழ்நாடு உட்பட, பல மாநிலங்கள் அந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
  • ஆனால், மத்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அந்த மசோதாவைச் சட்டமாக்கியுள்ளது. ஓராண்டு காலத்துக்குள் அது நடைமுறைக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் விழித்தெழுமா?

  • இந்தச் சட்டத்துக்கு எதிராக திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்படுள்ளது.
  • இந்நிலையில், கடந்த 08.04.2022 அன்று உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தான வழக்கில், இடைக்காலத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
  • தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் கருத்தை ஏற்று, அணைகள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வர ஓராண்டு காலம் உள்ளதால், அதுவரையில் மேற்பார்வைக் குழுவின் அதிகாரத்தை அதிகப்படுத்தி, உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது.
  • மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை நீர் நிர்வாகம், அணைப் பராமரிப்பு உள்ளிட்ட நிர்வாகச் செயல்பாடுகளில் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் ஏற்று, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • அந்த உத்தரவின் அடிப்படையில் பார்த்தால், ஓராண்டு காலத்துக்குப் பிறகு, அணைகள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் நிலை உள்ளது.
  • எனவே, தற்போதைய சூழலில் அணைகள் பாதுகாப்புச் சட்டம்-2022 என்பது, தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக அமையப்போகிறது.
  • இது தமிழ்நாட்டுக்குச் சாதகமா, பாதகமா? சட்டத்துக்கு உட்பட்டுத் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளைப் பாதுகாக்க இது உதவுமா? முல்லைப் பெரியாறு, தென்பெண்ணை, பாலாறு, காவிரி உள்ளிட்ட நதிகளில் ஓடும் நீர் யாருக்குச் சொந்தம்? பங்கிட்டுக் கொடுப்பது யார்? அணைகள் மட்டும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றனவா? நதிகள் யாருக்குச் சொந்தம்? நீர் நிர்வாக அதிகாரம் குறித்து அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்லப்போகிறது? காவிரி மேலாண்மை ஆணையம் என்ன ஆகப்போகிறது? இதுபோன்ற ஆயிரமாயிரம் கேள்விகள், விவசாயிகள் மத்தியில் எழுந்துகொண்டே இருக்கின்றன.
  • எனவே, நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் அணைகள் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்திருக்கிறார்கள்.
  • உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டுள்ள அணைகள் பாதுகாப்புச் சட்டம், தற்போது உச்ச நீதிமன்றத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு அரசின் தற்போதைய நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அச்சத்தில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளும் இதுவரையிலும் வாய்திறக்கவில்லை.
  • எனவே, தமிழ்நாடு அரசு புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, இச்சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய சாதகபாதகங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது.
  • அதன் அடிப்படையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், முல்லைப் பெரியாறு இடைக்காலத் தீர்ப்பில், அணைகள் பாதுகாப்பு மசோதாவை மேற்கோள்காட்டி மேற்பார்வைக் குழு அதிகாரத்தையே உச்ச நீதிமன்றம் ஓராண்டுக்கு என கால நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து சட்டமன்றத்தில் வெளிப்படையான விவாதத்துக்குத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
  • தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் விவசாய அமைப்புகள் சார்ந்த கூட்டத்தை விரைந்து கூட்டி, வெளிப்படையான விவாதத்துக்கு இந்த விவகாரத்தை உட்படுத்த வேண்டும்.

நன்றி: தி இந்து (13 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்