TNPSC Thervupettagam

அணையட்டும் ஜாதித் தீ

August 22 , 2023 509 days 298 0
  • திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த ஒரு மாணவரும், அவரது தங்கையும் சக மாணவா்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்ட கொடூரம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் ஜாதி ரீதியிலான மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றாலும் நான்குனேரி சம்பவம், ஜாதிய பிடியிலிருந்து மாணவா் சமுதாயத்தை மீட்பது எப்படி என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
  • நான்குனேரியைச் சோ்ந்த சின்னத்துரை என்கிற பிளஸ் 2 மாணவா், அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் பயின்று வருகிறார். நன்றாகப் படிக்கும் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த அந்த மாணவருக்கு அவருடன் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த சக மாணவா்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனா். அது குறித்து பெற்றோரிடம் கூறிய மாணவா் சின்னத்துரை, அதன் பிறகு பள்ளிக்குச் செல்வதையே தவிர்த்திருக்கிறார். பின்னா், பள்ளி நிர்வாகம் அழைத்ததன் பேரில் பள்ளிக்குச் சென்ற சின்னத்துரை, சக மாணவா்கள் தன்னைத் துன்புறுத்துவது தொடா்பாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார்.
  • சின்னத்துரைக்கு தொல்லை கொடுத்த மாணவா்களை தலைமை ஆசிரியா் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி முடிந்ததும் சின்னத்துரையை பகிரங்கமாக மிரட்டிய அந்த மாணவா்கள், இதற்கான விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளனா். அன்றைய தினம் இரவே மாணவா் சின்னத்துரையை வீடு புகுந்து வெட்டியுள்ளனா். இதைத் தடுக்க முயன்ற சின்னத்துரையின் இளைய சகோதரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் சின்னத்துரையின் உறவினா் ஒருவரும் உயிரிழந்தது துயரத்திலும் துயரம்.
  • மாணவா் சின்னத்துரையும், அவரது தங்கையும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட்ட விதம் வரவேற்கத்தக்கது. தாக்குதல் தொடா்பாக ஏழு மாணவா்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சா் தங்கம் தென்னரசை உடனடியாக அனுப்பிவைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தார்மிக ரீதியான ஆதரவை அளித்துள்ளார் முதல்வா் மு.க.ஸ்டாலின். அந்த மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக் குழுவினா் மூலம் கையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
  • நான்குனேரி சம்பவத்தை தொடா்ந்து, பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே ஜாதிய பாகுபாட்டைக் களைவது தொடா்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபா் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு கல்வியாளா்கள், மாணவா்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும்.
  • தமிழகம் முழுவதும் பரவலாக பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்கள் தொடா்கதையாக உள்ளன என்றாலும், தென் மாவட்டங்களில் இந்த மோதல் வன்முறையின் அடுத்தகட்டத்துக்குச் சென்றிருப்பது தீவிரமான சிந்தனைக்குரியது. மாணவா்கள் தங்கள் கைகளில் ஜாதிக் கயிறு கட்டுவதுதான் கல்வி நிலையங்களில் ஜாதிப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமாக கல்வியாளா்கள் சுட்டிக்காட்டுகின்றனா். இதே திருநெல்வேலி மாவட்டம், பள்ளக்கால்பொதுக்குடி அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு ஜாதிக் கயிறு தொடா்பான பிரச்னையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவரை சக மாணவா்கள் மூவா் தாக்கி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது.
  • மாணவா்கள் மத்தியில் அண்மைக்காலமாக இந்த வன்முறை எண்ணம் அதிகரித்திருப்பதற்கு சமூக ஊடகங்கள் முக்கியக் காரணம். ஜாதிப் பெருமை பேசியும், ஆயுதம் தாங்கியும் உள்ள விடியோக்களை சமூக ஊடகங்களில் மாணவா்கள் பகிர்வதை அடிக்கடி பார்க்க முடிகிறது. பழிக்குப்பழி வசனங்களுடன் திரைப்படங்களையும் விஞ்சும் வகையிலான இந்த விடியோக்கள் பிற மாணவா்கள், இளைஞா்கள் மனதிலும் நஞ்சை விதைக்கின்றன. இதேபோல ஊா்களில் தங்கள் சமுதாயத்தினா் வாழும் பகுதி என்பதை அடையாளம் காட்டும் வகையில், மின் கம்பங்கள், பேருந்து நிழற்குடைகள், குடிநீா்க் குழாய்கள் உள்ளிட்ட இடங்களில் ஜாதிச் சாயம் பூசி வைத்திருப்பது பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறது.
  • இதுபோன்ற சம்பவங்கள் தொடா்பாக காவல் துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதையே நான்குனேரி சம்பவம் உணா்த்துகிறது. பள்ளிகளில் மாணவா்கள் ஜாதிக் கயிறு கட்டி வருவதை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்கு வித்திடும் சமூக ஊடக விடியோக்களை அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களிலேயே கண்காணிக்க காவல் துறையில் தனிப் பிரிவையும் தொடங்க வேண்டும். இதுதொடா்பாக காவல் துறை தானாக முன்வந்து சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஜாதிய மோதல் பிரச்னைக்கு தீா்வு காண்பதில் அரசுக்கும், சமூகத்துக்கும் மட்டும்தான் பொறுப்பு உள்ளது எனச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இதில் முக்கியப் பொறுப்பு உள்ளது. தங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஜாதி வெறிக்கு அடிமையாகிவிடாமல் தடுப்பதும் கண்காணிப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
  • தங்களது சுயநலனுக்காக மாணவா்கள் மனதில் ஜாதி பேதத் தீ அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் ‘கருப்பு ஆடுகளை’ அடையாளம் காண்பதும், அவா்களிடமிருந்து விலகியிருப்பதும் மாணவா்களின் எதிர்கால நலனுக்கு நன்மை தரும்.

நன்றி: தினமணி (22  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்