- மத்திய அரசு 2004-ம் ஆண்டில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (senior citizen savings scheme) அறிமுகப்படுத்தியது. இது மூத்த குடிமக்களுக்கு அவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலத்துக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை வழங்கும் ஐந்து வருட கால திட்டமாகும்.
- நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய நிதி அமைச்சர் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகையின் உச்ச வரம்பை அதிகரித்தார். மேலும் இத்திட்டத்தின் மீதான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
அதிகமான மற்றும் மாறாத வட்டி
- ஏப்ரல் 1, 2023 முதல், இந்தத் திட்டத்தின் வட்டி ஆண்டுக்கு 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி 7.1 சதவீதம், தேசிய சேமிப்புதிட்ட வட்டி 7.7 சதவீதம், மாதாந்திர வருமான திட்ட வட்டி 7.4 சதவீதம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா வட்டி 7.5 சதவீதம் என்பதாக உள்ளது.
- அவற்றுடன் ஒப்பிடுகையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி அதிகமாக உள்ளது. இந்த வட்டி விகிதமானது பெரும்பாலான வங்கிகளின் வட்டி விகிதங்களை விட அதிகம் ஆகும். மேலும் இது மத்திய அரசின் திட்டமாதலால் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.
- இதில் முதலீடு செய்தால், திட்டத்தின் காலம் முழுவதும் வட்டி விகிதம் மாறாது. பொது வருங்கால வைப்பு நிதியில் ஓவ்வொரு காலாண்டும் வட்டி மாறுதலுக்கு உட்பட்டது. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு திட்டம் போன்றவற்றில் வட்டியானது வருடாந்திர ஓய்வுடன் கணக்கிடப்படுகிறது. ஆனால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மீதான வட்டி காலாண்டு இடைவெளியில் கணக்கிடப்படுகிறது. எனவே இதன் ஆண்டு வருவாய் 8.46 சதவீதத்திற்கு ஒப்பாகும்.
டெபாசிட் வரம்பு உயர்வு
- நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் தொகைக்கான உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை முழுமையான பாதுகாப்போடு முதலீடு செய்ய உதவும்.
- பொது வருங்கால வைப்பு நிதியில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் மட்டுமே முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திலிருந்து வரும் வட்டி வருமானம் மற்ற சேமிப்பு திட்டங்களை போலவே வரி விதிப்புக்கு உட்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்த தொகைக்கு வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. நிலுவை தேதிக்கு முன் கணக்கை முடிக்கும் வசதி, அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே கணக்கை முடித்துக்கொள்ளும் வசதி இத்திட்டத்தில் உண்டு.
- கணக்கை ஒரு வருடத்திற்குள் முடித்தால் வட்டி எதுவும் வழங்கப்படாது. இரண்டு வருடத்திற்குள் முடித்தால் ஒன்றரை சதவீதம் வட்டி பிடித்தம் செய்யப்படும். இரண்டு வருடத்திற்கு பிறகு கணக்கை முடித்தால் ஒரு சதவீதம் வட்டி பிடித்தம் செய்யப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் தபால் நிலையங்களிலோ அல்லது நியமிக்கப்பட்ட வங்கிகளிலோ கணக்கை எளிதாகத் தொடங்கலாம்.
- விஆர்எஸ் எடுத்த 55 வயதுடையவர்களும் திறக்கலாம். ஓய்வுபெற்ற 50 வயது முன்னாள் ராணுவ வீரர்களும் திறக்கலாம். வாழ்க்கைத் துணைவருடன் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். வாழ்க்கைத் துணைக்கு வயது வரம்பு இல்லை.
நன்றி: தி இந்து (23 – 04 – 2023)