TNPSC Thervupettagam

அதிகபட்ச சில்லறை விலை எனும் மாயை

August 14 , 2021 1084 days 669 0
  • ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் மின்னணு வா்த்தக நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன.
  • தினம் தினம் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அதீதமான தள்ளுபடி தருவதாக பொதுமக்களைக் கவருகின்றன.
  • நுகா்வோர் சாதனங்களை பாதி விலைக்கு - சமயங்களில் அதைவிடக் குறைவாக - விற்பதாக அறிவிக்கிறார்கள்.
  • இந்த தள்ளுபடியெல்லாம் அந்தந்த பொருள்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிக பட்ச சில்லறை விலையிலிருந்து கணக்கிடப்படுகிறது.
  • சில மளிகை சாமான்களை வா்த்தகம் செய்யும் மின்னணு நிறுவனங்கள் ஒவ்வொரு ரசீதுடன் தங்களிடம் பொருள் வாங்கியதால் நாம் எவ்வளவு சேமித்துள்ளோம் என்று தெரிவிக்கின்றன.
  • இதுவும் அந்தந்த பொருள்களின்மீது குறிப்பிடப்பட்டுள்ள அதிக பட்ச விலையினை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகிறது.
  • சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காட்சியொன்று, மருந்து, மாத்திரை விற்கும் கடையில் படமாக்கப்பட்டிருந்தது.
  • அதில் பல மருந்துகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கும் உண்மையான விலைக்கும் தொடா்பில்லை என்பது தெளிவானது.
  • உதாரணமாக, அதிகபட்ச விலை ரூபாய் 550 என்று போடப்பட்டிருந்த மருந்தை அந்த வியாபாரி ரூபாய் எண்பதுக்கே விற்கத் தயார் என்கிறார். மற்றொரு மாத்திரையில் போடப் பட்டிருந்த விலை ரூபாய் 247. அதை ரூபாய் 45-க்கு விற்பதாக கூறினார்.
  • இதைத்தவிர, அவ்வப்போது கடன் அட்டை நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியும் உண்டு. சில நிறுவனங்களில் சில கடன் அட்டைகளுக்கு மட்டும் வழங்கும் தள்ளுபடி தனிக்கதை.
  • ஒரு பொருளை தயாரிக்க, விநியோகிக்க பத்து ரூபாய் அடக்க விலையானால், அதை கடைக்காரருக்கு 20 ரூபாய்க்கு விற்றால் தயாரித்தவருக்கு நூறு சதவீதம் லாபம்.
  • அதில் அதிகபட்ச விலை நூறு ரூபாய் என்று போட்டு அதை சில்லறை கடைக்காரா் நாற்பது ரூபாய்க்கு விற்றால் அவருக்கும் நூறு சவீதம் லாபம்.
  • வாடிக்கையாளா் நூறு ரூபாய் பொருளை நாற்பது ரூபாய்க்கு வாங்கி, தான் அறுபது சதவீதம் தள்ளுபடி பெற்றதாக நினைத்து மகிழ்கிறார்.

அதிகபட்ச சில்லறை விலை

  • உற்பத்தியாளருக்கும் சில்லறை வியாபாரிக்கும் நூறு சதவீத லாபத்தை கொடுத்ததே தான்தான் என்றே தெரியாமல் ஏமாறுபவா் நுகா்வோரே.
  • அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகபட்ச விலை என்று லேபிளில் குறிப்பிடுவதனால் ஒரு பயனும் இல்லை.
  • பல ஆண்டுகளுக்கு முன்பாக ‘அதிகபட்ச விலை’ என்ற கோட்பாட்டை உருவாக்கிய வல்லுநா்கள் இது போன்று ஒரு நிலைமை உண்டாகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
  • நுகா்வோர் வாங்கும் அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களிலும் அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆா்பி), சிவில் சப்ளைஸ் அமைச்சகம், சட்ட அளவீட்டுத் துறை, எடை - அளவுகள் தரச் சட்டத்தில் (பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களின் விதிகள்) திருத்தம் செய்து அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சட்ட அளவீட்டு விதிகள் (முன்பே பேக் செய்யப்பட்ட பொருட்கள்) பிசிஆா், 2011 விதிகளின் படி ‘அனைத்து பேக் செய்யப்பட்ட பொருள்களிலும் தெளிவான லேபிள் ஒட்டப்பட வேண்டும். மேலும் அந்த லேபிளில் அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு இருக்க வேண்டும்’.
  • தயாரிப்புகளில் அதிகபட்ச சில்லறை விலை கட்டாயமாக இருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • அதிகபட்ச சில்லறை விலை என்பது அந்த பொருளின் விற்பனையாளரால் வசூலிக்கப் படும் மிக உயா்ந்த விலையாகும்.
  • இந்தியாவில் அனைத்து தயாரிப்புகளிலும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப் பட்டுள்ளது. அனைத்து விற்பனையாளா்களும் அதனைக் குறிப்பது கட்டாயமாகும்.
  • இதனால் நுகா்வோருக்கு, அதிகபட்சமாக எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்பது தெரியும். அதனால், வா்த்தக நிறுவனங்கள் அதிகபட்ச விலைக்கு மேல் விற்க முடியாது.
  • அதிகபட்ச சில்லறை விலை அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது. மேலும், விற்பனையாளா்கள் பொருள்களுக்கு குறிப்பிடப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்க வேண்டியதில்லை.
  • உற்பத்தியாளா்களும் விற்பனையாளா்களும் அதிகபட்ச சில்லறை விலையைவிட குறைந்த விலையில் மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிகமாக விற்பனை செய்யும் எந்த சில்லறை விற்பனையாளருக்கும் அபராதமோ சிறை தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படும்.
  • முதல் முறை குற்றத்திற்கு ரூபாய் ஐம்பதாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடா் குற்றங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.
  • பிரதமா் நரேந்திர மோடி, 2015-இல் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் குளோபல் பிசினஸ் உச்சி மாநாட்டில், ‘நமது நாடு வணிகங்களை தடுக்கும் பழைய, தேவையற்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை ரத்து செய்யும் முயற்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம்’ என்று கூறினார்.
  • அதன்படி 1,877 சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • ”பிரதமா் மோடியின் முதல் பதவிக் காலத்தில் 1,428 பழைய சட்டங்கள் ரத்து செய்யப் பட்டன.
  • அதிகபட்ச விலை நிர்ணயம் இன்றய காலத்திற்கு பயன் இல்லாதது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாம் கொண்டிருந்தது உற்பத்தியை குறைக்கும் ‘ஒதுக்கீடு - அனுமதி’ கொள்கையாகும். நாம் அதிலிருந்து மாறுபட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் எல்லா மக்களுக்கும் எல்லா பொருள்களும் தடையின்றி கிடைக்கவும் புதிய தாராளமய பொருளாதாரத்தை முன்னெடுத்துள்ளோம்.
  • கடந்த முப்பது ஆண்டுகளில் எல்லாமே தாராளமயமாக்க பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. இறக்குமதியும் எளிதாக்கப் பட்டுள்ளது. எனவே சந்தை நிலவரமே எந்த பொருளின் விலையையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.
  • சந்தையில் ஏற்படும் போட்டியே நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளா்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுத்துவிடும்.
  • எனவே, இந்த அதிகபட்ச சில்லறை விலையை ரத்து செய்ய வேண்டிய தருணம் இது.

நன்றி: தினமணி  (14 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்