TNPSC Thervupettagam

அதிகரிக்கும் கடன் சுமை!

August 19 , 2024 101 days 115 0

அதிகரிக்கும் கடன் சுமை!

  • மத்திய அரசும் மாநில அரசுகளும் எவ்வளவு கடன் வைத்திருக்கலாம் என்பதை நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை நிர்வாக சட்டம் வரையறை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நாட்டின் ஜிடிபியில் அரசாங்கத்தின் பொதுக்கடன் 60 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். அதில் மத்திய அரசின் கடன் 40 சதவீதத்துக்குள்ளும் மாநில அரசுகளின் கடன் 20 சதவீதத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
  • அதேபோல், ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதம் வரை இருக்கலாம். மேலும் கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜிடிபியில் 4.5 சதவீதம் வரை நிதிப் பற்றாக்குறையை இந்திய அரசு அனுமதித்தது. தற்போதைய பட்ஜெட்டில் 4.9 சதவீதம் வரை நிதிப் பற்றாக்குறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கடன் நிலவரம்:

  • 2020-ம் ஆண்டில் மத்திய அரசின் கடன் ரூ.105 லட்சம் கோடியாக இருந்தது. இது ஜிடிபியில் 52.3 சதவீதம் ஆகும். கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் 2021-ல் இது ரூ.122 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஜிடிபியில் கடனின் அளவு 61.4 சதவீதமாக உயர்ந்தது 2023-24 நிதி ஆண்டில் மத்திய அரசின் கடன் ரூ.171.78 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில், 2024-25 நிதி ஆண்டில் கடன் ரூ.185 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச நிதி நெருக்கடிகள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்தியாவின் கடன் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டுவந்த நிலையில், 2027- 28 ஆண்டு வரை இந்தியாவின் ஜிடிபியில் கடனின் அளவு 80 சதவீதமாக இருக்கும் என்று கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் கணக்கீடு செய்துள்ளது.

அதிக கடனால் ஏற்படும் சிக்கல்:

  • நிதிப் பற்றாக்குறை என்பது அரசாங்கத்தின் மொத்த வருவாயைக் காட்டிலும் மொத்த செலவினங்கள் அதிகமாக இருப்பது ஆகும். பொதுவாக நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தேவைப்படும் நிதியை மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் கடனாக பெறும்.
  • அரசிடம் இருந்து பத்திரங்களை ஈடாக பெற்றுக் கொண்டு ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு கடனாக வழங்கும். இந்தக் கடனுக்கு வட்டி எதுவும் கட்ட வேண்டியது இல்லை.
  • இரண்டாவதாக, மத்திய அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணச் சந்தையில் கடன் வாங்கும்.
  • இந்தக் கடன்களை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கும்போது புதிய நோட்டுகளால் பணவீக்கம் ஏற்படும் என்றும் சந்தையில் கடன் வாங்குவதால் இந்தியாவின் பொது கடன் அதிகரித்து அதிக வரி விதிப்புக்கு வித்திடும் என்றும் விமர்சனங்கள் செய்யப்படுவது உண்டு.
  • ஆனால் வாங்கப்படும் கடன்கள் உற்பத்தி பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படும்போது பணவீக்கம் ஏற்படாது. எனினும், கடன் அதிகமாக வாங்கப்படும்போது வட்டி அதிகமாகி வருமானத்தில் பெரும் பகுதியை வட்டியை செலுத்துவதற்கே பயன்படுத்த வேண்டி இருக்கும். கடன் தருபவர்களும் மேற்கொண்டு கடன் தர மாட்டார்கள். அதனால்தான் நிதிப் பற்றாக்குறையை விட முதன்மை பற்றாக்குறையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
  • முதன்மை பற்றாக்குறை என்பது நாட்டின் நிதி பற்றாக்குறையிலிருந்து அரசு கடன் மீது செலுத்துகின்ற வட்டியை கழித்தது போக மீதி உள்ள பற்றாக்குறையை குறிக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் அரசின் உண்மையான கடன் நிலவரத்தை முதன்மை பற்றாக்குறை மூலம் புரிந்து கொள்ள முடியும்.

கடன் - ஜிடிபி விகிதம்:

  • ஒரு நாடு வாங்குகிற கடன் மற்றும் அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்துகிற வலிமை ஆகியவற்றை சுட்டிக்காட்டும் அளவீடாக கடன் - ஜிடிபிவிகிதம் இருக்கிறது. அரசு வாங்கியுள்ள மொத்த கடனை நாட்டின் ஜிடிபியால் வகுத்தால் கிடைப்பதே கடன் - ஜிடிபி விகிதம். குறைவான கடன் - ஜிடிபி விகிதம் உள்ள நாடு தனது கடன்களை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை உள்நாட்டு உற்பத்தியின் மூலமே ஈட்டுகிறது என்பதை காட்டும்.
  • அதிக கடன் - ஜிடிபி விகிதம் உள்ள நாடு கடன்களை திருப்பி செலுத்துவதற்கு சிரமப்படுவதோடு அதிக வட்டியையும் கட்ட வேண்டி உள்ளதை குறிக்கிறது. நாட்டின் மொத்த கடன் சுமையை மிகத் தெளிவாக கடன் - ஜிடிபி விகிதம் எடுத்துக்காட்டுகிறது. தவிர, அதன் மூலம் நீண்டகால அளவில் கடன் சுமையை சமாளிக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும். பிற நாடுகளுடன் ஒப்பிட்டு நமது நாட்டின் நிதி நிலைமை எந்த அளவில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

பாதிப்பை ஏற்படுத்தும் சிக்கன நடவடிக்கை:

  • கடன் நெருக்கடியை தவிர்க்க சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் செலவினங்களை குறைப்பதும் வரிகளை உயர்த்துவதும் மேற் கொள்ளப்படுகின்றன. மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை அதிகரிப்பது, வட்டி விகிதங்களை அதிகரிப்பது, மானியங்களை குறைப்பது, வரி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்பனை செய்வது, சம்பளங்களை குறைப்பது மற்றும் வளர்ச்சிக்கான செலவினங்களை குறைப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகள் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்கவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • ஆனால் இந்த நடவடிக்கைகள் வேலையின்மை, ஏற்றத்தாழ்வு மற்றும் பொது அதிருப்தி போன்ற எதிர்மறையான சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

தெளிவான திட்டமிடல் அவசியம்:

  • சிக்கன நடவடிக்கைகளை படிப்படியாக குறைந்த அளவில் மேற்கொள்ள வேண்டும். கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுச் செலவுகள் அதிக அளவில் செய்யப்பட வேண்டும். கரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியினால் வளர்ச்சி முழு வேகம் அடைய முடியாத சூழ்நிலையில் நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக செலவுகளை குறைப்பது என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • கடன் - ஜிடிபி விகிதத்தை குறைக்கும் முயற்சிகள் தெளிவான திட்டமிடல் இல்லாமல் வெற்றி பெற முடியாது. பாரபட்சமற்ற அரசியல் பார்வையோடு நிதி நிலைப்புத் தன்மை மற்றும் சமுதாய நலன் இரண்டையும் மனதில் கொண்டு கடன் ஜிடிபி விகிதத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்