- இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதிக வெப்பநிலை 2023ஆம் ஆண்டில் பதிவாகியிருப்பதாகவும், தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 2,376 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காலநிலை மாற்றம், எல்-நினோ விளைவுகள் ஆகியவை தொடர்பாக நாம் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
- 1981-2010 காலகட்டச் சராசரியை ஒப்பிட, 2023இல் நிலமேற்பரப்பு வெப்பநிலை 0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகத் தனது வருடாந்திர அறிக்கையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2016இல் இந்த வெப்பநிலை 0.71 டிகிரி செல்சியஸ் என்பது கவனிக்கத்தக்கது.
- இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் 2023ஆம் ஆண்டு அதிக வெப்பநிலை நிலவிய ஆண்டாகவே பதிவாகியிருக்கிறது. இதற்கு எல்-நினோ விளைவு ஒரு முக்கியக் காரணியாகச் சொல்லப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் அதிக வெப்பம் நிலவியதற்கும் எல்-நினோ விளைவுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
- 2023 பிப்ரவரி மாதம், 1901க்குப் பிறகு மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியிருக்கிறது. அதேபோல் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் அதிக வெப்பநிலை நிலவியது. இதன் காரணமாக மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிஷா, பிஹார் போன்ற மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
- காலை-இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலை ‘குறைந்தபட்ச வெப்பநிலை’ என்றும், பகலில் நிலவும் வெப்பநிலை அதிகபட்ச வெப்பநிலை என்றும் அழைக்கப்படுகின்றன. இரண்டுக்கும் இடையிலான ‘சராசரி வெப்பநிலை’ என்கிற அளவில், 2023 டிசம்பர் மாதம்தான் கடந்த 122 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாகப் பதிவாகியிருக்கிறது.
- அதேபோல் 2023ஆம் ஆண்டு தீவிர வானிலை நிகழ்வுகளை இந்தியாவுக்குத் தந்திருக்கிறது. வட இந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களைத் தவிர, பிற பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, 2023 டிசம்பரில் அதிக மழைப்பொழிவைத் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் எதிர்கொண்டன.
- பொதுவாகவே, பருவமழை காலத்துக்குப் பின்னர் சராசரி வெப்பநிலை குறையும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழைக் காலத்துக்குப் பின்னரும் சராசரி வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
- இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிடக் குறைவான குளிர் நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், ஒழுங்கற்ற வானிலை நிகழ்வுகள் இந்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தீவிர எல் நினோ காலகட்டத்தில் தீவிர வானிலை நிகழ்வுகள், வெள்ளப்பெருக்குகள், காலநிலைப் பேரிடர்கள் நிகழும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். காலநிலை மாற்றத்தின் விளைவுகள் கண்முன்னே நிகழ்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு முகங்கொடுக்க அறிவியல்பூர்வமான அணுகுமுறையை அரசுகள் உடனே மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 01 – 2024)