- கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய மும்மடங்கு அதிகரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் மாதிரிக் கணக்கெடுப்பின் முடிவானது, பள்ளிக் கல்வித் துறை உடனடியாக இவ்விஷயத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
- குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான இயக்கம் என்ற அமைப்பு, தமிழ்நாட்டின் 23 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் 818 குழந்தைகளிடத்தில் எடுத்துள்ள இந்த மாதிரிக் கணக்கெடுப்பில், சமூகத்தில் மிகவும் நலிவடைந்த வகுப்பினரிடையே குழந்தைத் தொழிலாளர் முறை மீண்டும் தலையெடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
- பெருந்தொற்றின் காரணமாகக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமைகள் அதிகரித்துள்ளதும் குடும்பரீதியான அழுத்தங்களும் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பின்மையும் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதற்குக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
- இவர்களில் பெரும்பாலானவர்கள் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள். நலிவடைந்த நிலையில் இருக்கும் தங்களது குடும்ப வருமானத்தை ஈடுகட்டுவதற்காக இவர்கள் வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சிறுவர்களில் பெரும்பகுதியினர் பட்டியலின, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
- 2020-ல் செப்டம்பர் முதல் நவம்பர் வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இவை. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 818 சிறுவர்களில் 231 பேர் பெருந்தொற்றுக்கு முன்பே வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பெருந்தொற்றின் விளைவாக இந்த எண்ணிக்கை 650 ஆக உயர்ந்திருக்கிறது.
- பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, இது சற்றேறக்குறைய மும்மடங்காக உயர்ந்திருக்கிறது என்று கொள்ளலாம். இந்தச் சிறுவர்கள் பெரும்பாலும் காய்கறிக் கடைகள், பழுது நீக்கும் கடைகள், பேக்கரிகள் ஆகிய இடங்களில் உதவியாளர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள்.
- வேலைக்குச் சென்ற சிறுவர்களில் சராசரியாக ஐந்தில் ஒருவர், தாங்கள் பணிபுரியும் இடத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்புக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சில சிறுமிகள் தாங்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் கூறியிருப்பது கொடுமையானது. ஊதியம் பெறுகிற மகிழ்ச்சியானது மீண்டும் இவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கும் தடையாக அமைந்துவிடக்கூடும்.
- கணக்கெடுப்பில் கலந்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். அவர்களில் 43% பேரே இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள முயன்றவர்கள். 24% பேர் வகுப்புகளில் கலந்துகொள்வதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டவர்கள்.
- மாதிரிக் கணக்கெடுப்புகள் முழுமையானவை அல்ல எனினும் சூழலின் போக்கைச் சுட்டிக்காட்டும் அவற்றின் முடிவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. கடந்த பத்தாண்டுகளில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 32%-லிருந்து 50%ஆக அதிகரித்துள்ளது என்று நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மாணவர்கள் குடும்ப வறுமைக்காகவும் கல்வியில் நாட்டமிழந்தும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்ற எதார்த்தம் கசப்பானது.
- இதில் கல்லூரி மாணவர்களின் நிலை இன்னும் மோசம். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த குழந்தைகளில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களின் தொழிலில் உதவியாளர்களாக மாறியிருக்கிறார்கள் அல்லது வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
- அடுத்த கல்வியாண்டில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவர பள்ளிக் கல்வித் துறை செயல்திட்டம் ஒன்றை வகுத்து தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
நன்றி: தி இந்து (09 – 03 – 2021)