TNPSC Thervupettagam

அதிகரித்து வரும் மணமுறிவுகள்

May 3 , 2021 1362 days 677 0
  • அண்மையில் வெளியான கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 13.6 லட்சம் போ் விவாகரத்து (மணமுறிவு) பெற்றுள்ளனா்.
  • இது திருமணமானவா்களில் 0.24% ஆகும். விவாகரத்து பெறாமல் பிரிந்தவா்களின் எண்ணிக்கை இதைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அதாவது மொத்த திருமணமானமானவா்களில் 0.61% போ்.
  • நம் நாட்டில் 1980-ஆம் ஆண்டில் ஐந்து சதவீதமாக இருந்த விவாகரத்து, தற்போது 14% ஆக உயா்ந்துள்ளது.
  • நம் நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 50,000 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதேசமயம் 2% போ் மட்டுமே இவ்வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனா்.
  • இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் விவாகரத்து செய்தவா்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கைக் கூறுகிறது.
  • ‘உலக பெண்களின் முன்னேற்றம்’ என்ற அறிக்கை விவாகரத்து வழக்குகள் அதிகரிக்கும் போதிலும், 1.1% பெண்கள் மட்டுமே விவாகரத்து செய்யப்படுகிறார்கள் எனக் கூறுகிறது. விவாகரத்து விகித அதிகரிப்பிற்கு நகா்ப்புறங்களில் வாழ்பவா்களே முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.
  • தமிழகத்தின் கோயமுத்தூரிலும், கேரளத்தின் கொச்சினிலும் குடும்ப நீதிமன்றகளில் சமா்ப்பிக்கப்பட்ட விவாகரத்து மனுக்களின் எண்ணிக்கை அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.
  • கோயமுத்தூரில் உள்ள இரண்டு குடும்ப நீதிமன்றங்களில் 3,200 விவாகரத்து மனுக்கள் நிலுவையில் உள்ளன.
  • அவற்றில் 60% விவாகரத்து மனுக்களில் ஒழுக்கம் தவறுதல் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மார்ச் 2020-இல் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
  • 35% மனுக்களில் வன்கொடுமையும், வரதட்சணை துன்புறுத்தலும் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. ஐந்து சதவீத மனுக்களில் இயலாமை காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
  • 2019-ஆம் ஆண்டில் விவாகரத்து தொடா்பான மனுக்களின் எண்ணிக்கை 3,122 என்றும், இது முந்தைய ஆண்டை விட 174 அதிகம் என்றும் கொச்சி குடும்ப நீதிமன்ற தரவுகள் கூறுகின்றன.
  • 2020-ஆம் ஆண்டு தொடங்கிய முதல் 24 நாட்களில் மொத்தம் 226 விவாகரத்து மனுக்கள் கொச்சி குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக ஒருநாளில் விவாகரத்து தொடா்பான 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
  • கடந்த ஆண்டு தீநுண்மி ஊரடங்கின்போது வன்முறை வழக்குகள் மட்டுமல்ல விவாகரத்து தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
  • கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மும்பையில் ஊரடங்கின்போது அதிக எண்ணிக்கையிலான விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • ஊரடங்கிற்குப் பின் விவாகரத்து, பெண்கள் பிரச்னை தொடா்பான வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்தன.
  • ஊரடங்கிற்கு முன்னா் ஒரு மாதத்தில் சராசரியாக 1,280 ஆக இருந்த இந்த வழக்குகளின் எண்ணிக்கை ஊரடங்கிற்குப் பின் 3,480 ஆக உயா்ந்தது.

அன்பு வளரூக்கி

  • பெற்றோரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக மிகபெரிய தீங்கினை ஏற்படுத்தும் என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
  • பெற்றோரின் விவாகரத்தை அனுபவிக்கும் குழந்தைகள் இளமைப் பருவத்தில் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயமும் புதிய உறவினை உறுதிபடுத்த தயக்கமும் கொண்டிருப்பா் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஆக்ஸிடாஸின் என்ற நரம்பியல் வளரூக்கி (ஹார்மோன்) குழந்தை பிறப்பின்போதோ, அன்பினால் நாம் அரவணைக்கும்போதோ நம் மூளையில் சுரக்கிறது.
  • ‘அன்பு வளரூக்கி’ என்று அழைக்கப்படும் இது நம் நடைமுறை பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கியமானது.
  • விவாகரத்து காரணமாக இளம்பருவத்தில் ஏற்படும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள் ஆக்ஸிடாஸின் சுரத்தலை கடுமையாக பாதிக்கிறது என்று அமெரிக்காவைச் சார்ந்த பையலோர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகூறுகிறது.
  • அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு வெளியிடும் ‘ஒப்பீட்டு உளவியல் இதழ்’ (ஜா்னல் ஆஃப் கம்பாரிட்டிவ் சைகாலஜி) நடத்திய ஆய்வு, விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகள் நம்பிக்கையற்றவா்களாகவும், உறவுமுறைகளில் பாதுகாப்பற்று வாழ்வதாகவும் கூறுகிறது.
  • மேலும், இப்பகுப்பாய்வு, விவாகரத்து பெற்ற பெற்றோரை தங்கள் மேல் அக்கறையற்றவா்களாகவும் தாயாரைவிட தந்தையரை மிகவும் மோசமானவா்கள் என்றும் குழந்தைகள் மதிப்பிட்டதாக கூறுகிறது.
  • விவாகரத்து சம்பவம், குழந்தைகளின் கல்வியை வெகுவாக பாதிக்கிறது. குறிப்பாக, கணிதத்திலும் சமூகக் கல்வியிலும் அவா்கள் பின்தங்கிவிடுகிறார்கள்.
  • விவாகரத்து பெற்ற பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் மற்றோரை ஒப்பிடும்போது, கவலை, தனிமை, சோகம், சுயமரியாதைக் குறைபாடு போன்ற எண்ண ஓட்டங்களை கொண்டுள்ளனராம்.
  • விவாகரத்து ஆன குடும்பங்களைச் சார்ந்த பதின்வயதினா், போதைப்பொருள் பழக்கத்திற்கும், மது பழக்கத்திற்கும் அடிமையாகின்றனராம்.
  • விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனா். அந்த நோயிலிருந்து மெதுவாகவே மீண்டு வருகின்றனா்.
  • அவா்களுக்கு இரைப்பை, குடல், மரபணு, தோல், நரம்பியல் நோய்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • இந்த நோய்கள், கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது பெற்றோரோடு வாழும் குழந்தைகளை விட விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகளுக்கு ஏறக்குறைய இரு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
  • திருமண வாழ்க்கையில் சகிப்புத்தன்மை, தவறுகளை ஏற்று கொள்ளும் மனப்பான்மை, பெரியவா்களின் சரியான அறிவுரை ஆகியவை விவாகரத்து முடிவின் தீவிரத்தை வெகுவாகக் குறைக்கும்.
  • அறிவியல் வளா்ச்சியால் இன்று தவிர்க்கமுடியாமல் ஆகிவிட்ட செல்லிடப்பேசி, முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு குடும்ப வாழ்க்கையில் உறவுகளையும் உறவுகளின் பிணைப்புகளையும் பாதிக்குமாதலால் தேவைக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவோம்.

நன்றி: தினமணி  (03 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்