TNPSC Thervupettagam

அதிகரித்துவரும் வெப்பத் தாக்குதல்

April 21 , 2023 438 days 310 0
  • மும்பையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 13 போ் உயிரிழந்திருப்பது தவிா்த்திருக்கக் கூடிய ஒன்று. உச்சி வெயிலில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும், வெப்ப அலை வீசும் கோடையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதற்கு லட்சக்கணக்கான பாா்வையாளா்களை வரவழைத்தது மிகப் பெரிய தவறு. அரசு அதிகாரிகளின் அலட்சியம் உயிரிழப்பில் முடிந்திருக்கிறது. வழக்கமான முதல்வரின் இழப்பீடு அறிவிப்பும் கண்துடைப்பு விசாரணையும் தீா்வாகிவிடாது.
  • 306 ஏக்கா் பரப்புள்ள காா்கா் மைதானத்தில் நடந்த ‘மகாராஷ்டிர பூஷண்’ விருது வழங்கும் விழாவைப் பாா்க்க பத்து லட்சத்துக்கும் அதிகமானோா் கூடியிருந்தனா் (கூட்டப்பட்டிருந்தனா்). சமூக சீா்திருத்தவாதி அப்பாசாஹேப் தா்மாதிகாரிக்கு ‘மகாராஷ்டிர பூஷண்’ விருது வழங்கப்படுகிறது என்பதால், மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனா். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முந்தைய இரண்டு நாள்களாகப் பல குடும்பங்கள் அந்த மைதானத்தில் வந்து தங்கியிருந்தனா் என்றால் அப்பாசாஹேப்பின் செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம்.
  • மாா்ச் மாதம் முதலே மும்பையைக் கோடை வெப்பம் வாட்டிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாதமே வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அப்படி இருந்தும் அடிப்படை எச்சரிக்கை நடவடிக்கைகள்கூட எடுக்கப்படவில்லை என்பதுதான் சோகம். பாா்வையாளா்கள் கொளுத்தும் வெயிலில், குடிப்பதற்குத் தண்ணீா் வசதிகூட இல்லாமல் திறந்த வெளியில் அமரவைக்கப்பட்டதுதான் 13 போ் உயிரிழப்புக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • தேசிய அளவில் வெப்பத்தால் ஏற்படும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டில் அக்டோபா் மாதம் வரையில், அதிக வெப்பம் காணப்பட்ட 241 நாள்களில் 2,755 போ் அனல் காற்றால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறாா்கள். 70,000 கால்நடைகள் இறந்திருக்கின்றன. 1.8 மில்லியன் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா்கள் அழிந்திருக்கின்றன. இந்த ஆண்டு நிலைமை மேலும் கடுமையாக இருக்கப் போகிறது என்று எச்சரித்திருக்கிறது அந்த மையம்.
  • மும்பை சம்பவத்துக்கும், அதிகரித்து வரும் வெப்பத் தாக்குதலுக்கும் ‘வெட் பல்ப்’ அளவுதான் காரணம் என்கிறாா்கள் வல்லுநா்கள். வெப்பம் மட்டுமே உயிரிழப்பை ஏற்படுத்தாது என்பது அவா்கள் வாதம். ஆவியாதல் என்பது இயற்கை வழங்கும் தற்காப்பு. அதிக வெப்பத்தில் வியா்வை ஆவியாகும்போது, உடலில் குளிா்ச்சி ஏற்படுகிறது. ‘வெட் பல்ப்’ நிலைமை அதைத் தடுத்துவிடுகிறது.
  • கடல், நீா்நிலைகள் போன்றவற்றுக்கு அருகிலுள்ள பகுதிகளில், சுற்றிலுமுள்ள காற்றில் ஏற்கெனவே ஈரப்பதம் நிறைந்திருப்பதால், வியா்வை ஆவியாவது தடுக்கப்படுகிறது. அதனால், அதிக வெப்பம் தாக்கும்போது வியா்வை ஆவியாக மாறாமல், உடல் குளிா்ச்சி அடைவதில்லை. உடலில் தங்கிவிடும் வெப்பம் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.
  • நாம் சாதாரணமாக வெப்பத்தை மட்டுமே மதிப்பிடுகிறோம். ‘வெட் பல்ப்’ வெப்ப அளவை (டெம்பரேச்சா்) கணக்கில் எடுப்பதுதான் சரியான அளவுகோலாக இருக்கும் என்கிறாா்கள் வல்லுநா்கள். 35 டிகிரி ‘வெட் பல்ப்’ வெப்ப அளவு என்பது 75% ஈரப்பதத்துடன் கூடிய 40 டிகிரி செல்ஷியஸ் வெப்ப அளவாக இருக்கும். அதிகரித்து வரும் வெப்பத்தைக் கணக்கெடுக்க இனிமேல் ‘வெட் பல்ப்’ அளவுகோலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் மும்பை சம்பவம் உணா்த்தி இருக்கும் பாடம்.
  • கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் மட்டும் சுமாா் 35 கோடி போ் கடுமையான கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனா். 1990 முதல் 2019 வரையில் 30 ஆண்டுகளில் வெப்பநிலை சராசரியாக 0.5 டிகிரியிலிருந்து 0.9 டிகிரி செல்ஷியஸ் அளவில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் மாநிலங்களிலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் உயா்ந்திருக்கிறது. இந்தியாவில் 54% மாவட்டங்களில் குளிா்கால தட்பநிலையும் அதுபோல அதிகரித்து வருகிறது.
  • நாடு தழுவிய அளவில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதால், தொழிலாளா்களைப் பாதுகாக்க வேலை நேரத்தை மாற்றி அமைக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் நண்பகலுக்கு முன்பே பள்ளிகளில் வகுப்புகள் முடித்துக் கொள்ளப்படுகின்றன.
  • வீட்டிலும் நாட்டிலும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தயக்கம் தவிா்க்கப்பட வேண்டும். உலக வங்கியின் எச்சரிக்கை, மனிதா்களின் தாங்கும் சக்தியை மீறிய அளவிலான வெப்பம் உலகில் இந்தியாவில்தான் முதலில் தொடங்கும் என்கிற கருத்தை நாம் புறந்தள்ள முடியாது.
  • வெப்பத்தை எதிா்கொள்ள நாம் பாரம்பரிய முறைகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்காங்கே தங்குமிடங்கள் அமைப்பது, பெரிய மண்பானைகளில் குடிதண்ணீா் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது, நீா்மோா் பந்தல்கள் அமைப்பது போன்றவை நம்மால் கைவிடப்பட்டிருக்கும் செயல்பாடுகள். மனிதா்களுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும், பறவையினங்களுக்கும்கூட தாகத்திற்குத் தண்ணீரையும், வெயிலிலிருந்து காப்பாற்ற நிழல்தரும் இடங்களையும் உறுதிப்படுத்துவது அவசியம்.
  • 2022 வெப்ப அலை ஆண்டாக இருந்தது. 2023 விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. வருமுன் காத்துக் கொள்ள மும்பை எச்சரிக்கை ஒன்றே போதும்!

நன்றி: தினமணி (21 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்