- நம்மைச் சுற்றி நிகழும் பெரும்பாலான குற்றங்களை இயல்பானவையாக ஏற்றுக்கொள்ள நாம் பழக்கப்படுத்தப் பட்டுவிட்டோம். பாலினப் பாகுபாடு தொடங்கி, பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் இயல்பு என நம்புகிறவர்கள் நம்மைச் சுற்றி அதிகம். அதேபோல்தான் பெண்களும் குழந்தைகளும் கடத்தப்படுவதும் அவர்கள் பண்டங்களாக விற்கப்படுவதும் ஆண் மனதின் வக்கிரங்களுக்குப் பலியாக்கப்படுவதும் பலரை அசைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
- பண்டங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் போல்தான் ஆள் கடத்தல் வலைப்பின்னலும் செயல்படுத்தப்படுகிறது. முதலில் சம்பந்தப்பட்ட ஆணோ பெண்ணோ குழந்தையோ வாங்கப்படுகிறார்கள் அல்லது கடத்தப்படுகிறார்கள். வாங்கும் விதம் நபரையும் நாட்டையும் பொறுத்து வேறுபடலாம். சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்குப் பணம் கொடுத்து நேரடியாக வாங்கலாம் அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ வெளியூரில் பள்ளியில் சேர்த்துவிடுவதாகவோ மோசடி செய்து கடத்தலாம். போலியான திருமணங்கள் மூலமும் பலர் கடத்தப்படுகிறார்கள். சிலர் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மனிதர்களைக் கடத்துவது உண்டு. சாலையில் திரியும் குழந்தைகளைக் கடத்துவது, பல நாடுகளில் எளிதான செயலாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் அரசாங்கமே ஆள் கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கும் கொடுமையும் நடக்கிறது. ஆள் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், பாலியல் தொழில் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இது பணம் கொழிக்கும் பெரும் வியாபாரமாக இருப்பதால் பல நாடுகள் இதைக் கண்டுகொள்வதில்லை.
திட்டமிடப்பட்ட குற்றங்கள்
- ‘மகாநதி’ திரைப்படத்தில் நாயகனின் மகள் கடத்தப்படுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டது ஆள் கடத்தல் சமுத்திரத்தின் துளி மட்டுமே. காணாமல் போன மகளைத் தேடிக் கண்டுபிடித்து மீட்பது போன்ற சாகசமெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். காரணம், ஒருவர் கடத்தப்பட்டுவிட்டால் அவரை எளிதில் கண்டுபிடித்து மீட்க முடியாத அளவுக்கு மர்மமான, உறுதியான வலைப்பின்னல் கொண்டது ஆள்கடத்தல் மாஃபியா. இதில் ஏராளமான படிநிலைகள் உண்டு. உள்ளூரில் ஒரு குழந்தையையோ பெண்ணையோ கடத்துகிறவரின் பணி அதோடு முடிந்துவிடும். அடுத்த அவர்கள் யார் கைக்கு மாற்றப்படுவார்கள், எந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், எங்கே அடைத்து வைக்கப்படுவார்கள் என்கிற விவரமெல்லாம் முதல் நிலை ஆளுக்குத் தெரியாது. அதேபோல்தான் கடைநிலை ஆளுக்கும் எதுவும் தெரியாது. அந்த அளவுக்குத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகிற குற்றமாக ஆள் கடத்தல் இருக்கிறது.
- கடத்தப்படுகிற அனைவரும் ஒரே நோக்கத்துக்காகக் கடத்தப்படுவதில்லை. சிலர் நவீனக் கொத்தடிமைகளாக வீட்டு வேலையிலும் பண்ணை வேலையிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உடல் உறுப்புத் திருட்டுக்காகவும் பலர் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்படுவோரில் பெரும்பாலான பெண்களும் குழந்தைகளும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் பாலியல் தொழிலுக்கென இருக்கும் பிரத்யேகப் பகுதிகளில் விடப்படலாம் அல்லது பாலியல் சந்தைகளில் விற்கப்படலாம். அல்லது போர்னோகிராபி எனப்படும் வல்லுறவுப் படங்களில் காட்சிப்படுத்தப்படலாம். பல ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்றுவரும் ’பாலியல் சுற்றுலா’வில் பயணிகளுக்கு இரையாக்கப்படலாம்.
பணமும் அதிகாரமும்
- மனிதர்களை விற்பது, வாங்குவது, பரிசாக அளிப்பது, வாடகைக்கு விடுவது, கடனாக வழங்குவது என உலகின் அவ்வளவு கீழ்த்தரமான செயல்களும் இந்தப் பாலியல் சந்தைகளில் அரங்கேறும். பெரும்பாலும் குழந்தைகளும் வளரிளம் பெண்களுமே இந்தச் சந்தையில் விரும்பி வாங்கப்படுகிற பண்டங்களாக இருக்கிறார்கள். “பாலியல் சந்தைகளில் விற்கப்படும் பாலியல் அடிமைகளின் எண்ணிக்கை, பொ.ஆ.
- (கி.பி) 1500 முதல் 1800 வரை அடிமைகளாக விற்கப்பட்ட ஆப்ரிக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகம். உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 13 லட்சத்து 90 ஆயிரம் பெண்களும் குழந்தைகளும் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர்” என்கிறார் லிடியா காச்சோ. மெக்சிகோ நாட்டுப் பத்திரிகையாளரான இவர், ஆள் கடத்தல் குறித்தும் இதில் ஈடுபட்டுவரும் சர்வதேச மாஃபியா குறித்தும் புலனாய்வு செய்து அந்தத் தகவல்களைப் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் (பெண் எனும் பொருள், தமிழில்: விஜயசாய், விடியல் பதிப்பகம்). ஆள் கடத்தல் தொடர்பாக 175 நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் முதலாளித்துவத்தின் பலவீனத்தையும் வல்லரசு நாடுகளில் பொருளாதாரச் சட்ட திட்டங்களில் மலிந்திருக்கும் ஏற்றத்தாழ்வையும் பிரதிபலிப்பதாக லிடியா குறிப்பிடுகிறார்.
- பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்படுவது குறித்து ஐ.நா. தொடர்ந்து கவலை தெரிவித்துவரும் நிலையில் இந்தியா உள்படப் பல்வேறு நாடுகள் ஆள்கடத்தலுக்கு எதிரான செயல்களில் மிகத் தீவிரமாக இறங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளன. நாடுகள் இவ்வளவு ’தீவிரமாக’ச் செயல்பட்ட பிறகும் ஆள் கடத்தல் ஏன் குறையவில்லை? காரணம், பணம். இந்த வர்த்தகத்தில் கிடைக்கிற பணமும் அதிகாரமும் போதையும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களை ஊக்குவிக்கின்றன. பல்வேறு நாடுகளில் அரசு அமைப்பில் மலிந்திருக்கும் லஞ்சமும் ஊழலில் சர்வதேசக் கடத்தல் கும்பலுக்கு அசைக்க முடியாத துணிவைத் தருகின்றன.
- புத்தகத் திருவிழா, கோயில் திருவிழா என நாட்டுக்கு ஏற்ற வகையில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஜெர்மனி, தென்னாப்ரிக்கா, அமெரிக்கா, இந்தோனேஷியா, இங்கிலாந்து, போலந்து உள்படப் பல நாடுகளில் ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழா என்ன தெரியுமா? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2024)