TNPSC Thervupettagam

அதிகாரத்தின் வெளிப்பாடான பாலியல் அத்துமீறல்கள்

September 2 , 2024 136 days 139 0

அதிகாரத்தின் வெளிப்பாடான பாலியல் அத்துமீறல்கள்

  • பெண்​களுக்குப் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்​கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய மிகவும் துரதிர்​ஷ்ட​வசமான காலக்​கட்​டத்தில் நாம் வாழ்கிறோமோ எனத் தோன்றுகிறது. சமீப காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதி​களிலும் அன்றாட நிகழ்​வாகப் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் வெவ்வேறு வடிவங்​களில் அரங்கேறிக்​கொண்​டிருக்​கின்றன. சிறு குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் சீண்டல்களுக்கும் வல்லுறவு​களுக்கும் ஆளாக்​கப்​படு​கிறார்கள்.
  • இக்குற்​றங்​களில் ஈடுபடு​பவர்கள் - சிறுவர்கள் தொடங்கி முதிய​வர்கள் வரை எந்தப் பேதமும் அற்றவர்களாக இருக்​கிறார்கள் என்பதும் நம்மை அதிர்ச்​சிக்​குள்​ளாக்கு​கிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள், விளையாட்டு வீராங்​கனைகள், மருத்​துவர்கள், பயணிகள், திரைத் துறைப் பெண்கள் என எந்தத் தரப்பினரும் இங்கு விட்டு வைக்கப்​பட​வில்லை. பெண்கள் விரட்டி விரட்டி வேட்டை​யாடப்​பட்டுக் கொண்டிருக்​கின்​றார்கள். பெண்கள் மீதான மதிப்பும் மரியாதையும் மனித மாண்பு​களும் விழுமி​யங்​களும் என்னவாயின?

அதிர வைத்த ஹேமா அறிக்கை:

  • நம் அண்டை மாநிலமான கேரளத்​தில், ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவினர் 2019இல் அளித்த அறிக்கையின் ஒரு பகுதி கடந்த வாரம் வெளியிடப்​பட்டது. அந்த ஒற்றை அறிக்கை மலையாளத் திரைத் துறையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அந்த அறிக்கை முழுமையாக வெளியிடப்​பட​வில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • 2009ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரையுலகில் பெண் நடிகர்​களும் தொழில்​நுட்பக் கலைஞர்​களும் சந்தித்த பாலியல் துன்புறுத்​தல்கள், அது குறித்து அவர்கள் அளித்த புகார்கள் அனைத்தும் இந்த அறிக்கையின் வழியாக வெளிவந்​துள்ளன. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், மேலாளர்கள் எனப் பலராலும் பாலியல்​ ரீ​தியிலான துன்பங்​களுக்கு ஆளாக்​கப்​பட்​ட​தாகப் பல நடிகைகள் ஒருமித்த குரலில் அடுக்​கடுக்கான புகார்​களையும் பல்வேறு குற்றச்​சாட்டு​களையும் தெரிவித்து வருகின்​றனர்.
  • இதன் எதிரொலியாக மலையாளத் திரையுலகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தென்னிந்​தியத் திரையுலகும் பெரும் அச்சத்தில் இருக்​கிறது என்றால் மிகையில்லை. கேரள உயர் நீதிமன்​றமும் தேசியப் பெண்கள் ஆணையமும் ஹேமா குழுவின் அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்​கொண்​டிருக்​கின்றன.
  • மலையாளத் திரையுலகில் 1970களில் முன்னணி நடிகை​யாகத் திகழ்ந்த விஜய தற்கொலை செய்து​கொண்டு தன் வாழ்க்கையை முடித்​துக்​கொண்​டார். ஒட்டுமொத்தத் திரையுலகில் நிகழ்ந்​த​தாகப் பதிவான முதல் தற்கொலையும் அதுவே. அதன் பின்னர், அடுத்​தடுத்துப் பல நடிகைகள் மொழி வேறுபாடின்றித் தங்கள் உன்னதமான வாழ்க்கையை முடித்​துக்​கொண்​டார்கள். ஒவ்வொரு தற்கொலை​யின்​போதும் பிரபலமான சிலரின் பெயர்கள் அடிபட்​டாலும் இதுவரை அவர்களில் யாரும் தண்டிக்​கப்​பட​வில்லை; அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்​து​விட​வில்லை.

‘மீ டூ’ இயக்கம்:

  • தமிழ்த் திரைத் துறையிலும் ஒரு சிலர் வெளிப்​படையாக, ‘இவர்​களால் நாங்கள் பாலியல்​ரீ​தியான துன்புறுத்​தல்​களுக்கு ஆளானோம்’ என்கிற குற்றச்​சாட்டை முன்வைத்​திருக்​கிறார்கள். எனினும், ஒன்றும் நடக்க​வில்லை. மாறாகக் குற்றம்​சாட்​டிய​வர்​களுக்குத் திரைத் துறையில் வாய்ப்புகள் குறைந்​ததுதான் மிச்சம். குற்றம் சுமத்​தப்​பட்​ட​வர்​களுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.
  • பளபளப்பாக ஒளிரும் திரைக்குப் பின்னால், இத்தகைய இருண்ட பக்கங்​களும் சேர்ந்தே இருக்கும் என்று சொல்லப்​பட்​டாலும், எவ்வளவு காலத்​துக்குப் பெண்கள் மீது இத்தகைய மறைமுகத் தாக்குதல்கள் தொடரும்? ஹேமா குழு போல ஒவ்வொரு மொழி சார்ந்த திரைத் துறையிலும் குழுக்கள் அமைக்​கப்​பட்டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களிடம் விசாரணை​களும் வினாக்​களும் எழுப்​பப்​படு​மானால், பல்வேறு திமிங்​கிலங்​களும் சுறாக்​களும் சிக்கு​வதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • ‘மீ டூ’ இயக்கம் உலகெங்​கிலும் ஆக்ரோஷத்​துடன் எழுந்த​போது, ‘நாங்​களும் பாதிக்​கப்​பட்​டோம்’ என்று எத்தனை பெண்கள் வலியோடு பேச முன்வந்​தார்கள் என்பதையும் இந்த உலகம் வேடிக்கை பார்த்தது. காலந்​தோறும் இத்தகைய பாலியல் அத்து​மீறல்கள் நடந்​து​கொண்​டுதான் இருந்தன; இருக்​கின்றன என்பதை ‘மீ டூ’ இயக்கம் சொல்லாமல் சொல்லிச் சென்றது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு:

  • பெண்கள், குழந்தைகள், முதிய​வர்கள், பட்டியல் சாதியினர், பழங்குடி​யினருக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து​வருவதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி​விவரங்கள் சொல்கின்றன. ஆண் - பெண் பேதமற்ற பாலினச் சமத்துவம் வேண்டும் என்று வலியுறுத்​தக்​கூடிய நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவது மிகுந்த வருத்தம் அளிக்​கிறது. கல்வி அறிவில் மேம்பாடடைந்து அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகரான நிலையைப் பெண்கள் அடைந்​து​வரும் நிலையில் பாலியல்​ரீ​தியான அடக்கு​முறை​களும் அத்து​மீறல்​களும் ஏன் தொடர்ந்து நிகழ்​கின்றன, அவ்வளவு பாலியல் வறட்சியில் இந்தச் சமூகம் தள்ளாடிக்​கொண்​டிருக்​கிறதா என்ற விடை காண முடியாத கேள்விகள் எழுகின்றன.
  • மாணவப் பருவத்தில் இருக்கும் பதின் பருவத்​தினரும் இத்தகைய கொடும் குற்றச்​செயல்​களில் ஈடுபடுவது எதிர்​காலத் தலைமுறை பற்றிய கவலையை​யும், அவர்களின் எதிர்​காலம் குறித்தான பல்வேறு கேள்வி​களையும் அச்சங்​களையும் விதைக்கிறது. 12 ஆண்டு​களுக்கு முன் நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்​துக்குப் பின் உருவாக்​கப்பட்ட நீதிபதி வர்மா குழு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை​களில் ஈடுபடும் குற்றவாளி​களுக்கு விரைந்து தண்டனை அளிக்கும் வகையில் குற்ற​வியல் சட்டத்தில் திருத்​தங்​களைப் பரிந்​துரைத்தது.
  • பாலியல் வல்லுறவு, பாலியல் வன்கொடுமைகள் போன்றவை உணர்வுரீ​தியிலான குற்றங்கள் மட்டுமல்ல; அவை அதிகாரத்தின் வெளிப்​பாடுகள் என்றும் அது குறிப்​பிட்டது முற்றிலும் உண்மை. ஆண் என்பவன் அதிகாரத்தின் வெளிப்​பாடு; பெண் என்பவள் அடக்கி​யாளப்பட வேண்டியவள் என்கிற கருத்​தாக்​கத்​திலேயே பெரும்​பாலான பாலியல் குற்றங்கள் நிகழ்த்​தப்​படு​கின்றன. இத்தகைய குற்றங்​களுக்குத் தண்டனைகள் அதிகரிக்​கப்​பட்​ட​போதும், குற்றச் செயல்கள் குறைந்​த​பாடில்லை என்பதுதான் இங்கு நகைமுரண்.
  • சட்டங்​களாலோ தண்டனை​களாலோ குற்றங்கள் குறைந்​து​விடாது. நம் சமூகத்தில் ஆண் குழந்தைகள் வளர்க்​கப்​படும்போதே இந்த அதிகாரம் மறைமுக​மாகப் போதிக்​கப்​படு​கிறது. அத்தகைய போதனைகள் முற்றிலும் களையப்பட வேண்டும். அப்படி இருந்​தால்தான் பால் பேதமற்ற சமுதா​யத்தை உருவாக்க முடியும். அதற்கான வித்து நம் வீடுகளி​லிருந்தே ஊன்றப்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொரு​வருக்கும் இருக்​கிறது. ஆணும் பெண்ணும் ஒன்றெனச் சொல்லி, அதை உருவாக்கத் தொடங்​குவோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்