TNPSC Thervupettagam

அதிருப்தி அளித்த அறிவிப்பு

October 19 , 2020 1553 days 653 0
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணம் மற்றும் பயணச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளார்.
  • அமைச்சரின் அந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதைவிட விமர்சனங்களையும் அதிருப்தியையுமே ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த விமர்சனங்களுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. கரோனா காலமாகிய அசாதாரண சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகைக்காக ரூ. 5,675 கோடி செலவு ஆகும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • ஆனால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு பயணச் சலுகையில் 12 சதவீதத் தொகை ஜிஎஸ்டி மூலம் மீண்டும் மத்திய அரசுக்கே திரும்ப செலுத்த வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி நிலைக்கு ஏற்ப விடுப்பு பயணச் சலுகையாக ரூ. 36 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
  • மத்திய அரசு ஊழியர்கள் இந்த விடுப்பு பயணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள நிதி அமைச்சர், இந்த முறை பணத்திற்கு மாற்றாக பொருள்களாக பெறுவதற்கான கூப்பன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
  • பயணச் செலவைப் போல் மூன்று மடங்கு கூடுதல் மதிப்பிலான மற்றும் பயணச் சலுகைக்கு நிகரான மதிப்பு கொண்ட பொருள்களை மார்ச் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் வாங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்சம் 12 சதவீத சரக்கு சேவை வரி கொண்ட பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
  • அந்த வகையில், விடுப்பு பயணச் சலுகைக்காக மத்திய அரசு செலவிடவுள்ள ரூ. 5,675 கோடியைப் போல மூன்று மடங்கு கூடுதலான தொகைக்கு பொருள்கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
  • அதன் மூலம் 12 சதவீத ஜிஎஸ்டி தொகையாக ரூ. 2000 கோடி திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2021 மார்ச் 31-க்குள் சுமார் ரூ. 2000 கோடி ஜிஎஸ்டியாக மத்திய அரசுக்குக் கிடைக்கும் வகையிலேயே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பும் அதிருப்தியும்

  • ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
  • உணவுப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் இந்த அகவிலைப்படி (அடிப்படை ஊதியத்தில் 1 முதல் 7 சதவீதம் வரை) கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
  • 2020 ஜனவரிக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்துவதற்கு கடந்த பிப்ரவரியில் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. ஆனால் கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு, 2020 ஜூலை மற்றும் 2021 ஜனவரி மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வும் கிடையாது என தெரிவித்தது.
  • இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
  • இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும், 38 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 12 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகப் பணிபுரிகின்றனர்.
  • நாடு முழுவதும் கணக்கிடும்போது சராசரியாக 3 கோடி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
  • இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் சுமார் 25 லட்சம் பேரும் பாதிப்புக்குள்ளாவார்கள். 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மத்திய - மாநில அரசுகளுக்கு சுமார் ரூ. 40ஆயிரம் கோடி வரை செலவு குறையும்.
  • ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.1,100 முதல் 6 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 540 முதல் ரூ. 3ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் என தொழிற்சங்கவாதிகள் கூறுகின்றனர்.
  • கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட பண்டிகை கால முன் பணம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பண்டிகை கால முன்பணமாக வழங்கப்படும் ரூ.10ஆயிரம், 10 தவணையில் பிடித்தம் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்தால் மத்திய அரசுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர்.
  • அகவிலைப்படி உயர்வு ரத்து மூலம் ரூ. 40ஆயிரம் கோடி வரை நிதி இழப்பை மத்திய - மாநில அரசுகள் தவிர்த்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகைக்காக ரூ. 5,675 கோடி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் சுமார் ரூ. 2000 கோடி ஜிஎஸ்டி-யாகத் திரும்ப கிடைத்து விடும்.
  • அதேபோல், முன் பணமாக வழங்கப்படும் ரூ. 4 ஆயிரம் கோடியும் 10 மாதங்களில் திரும்ப கிடைத்துவிடும்.
  • ஊதியப் பிடித்தம் மற்றும் ஜிஎஸ்டி மூலம் ரூ. 6000 கோடி திரும்ப கிடைத்துவிடும் நிலையில், அந்த வருவாயைக் கணக்கில் கொள்ளாமல், ரூ. 9,675 கோடி செலவு என மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
  • பொருளாதார சீரமைப்புக்காக ரூ. 20 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டபோது தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. ஆனால், அந்தத் தொகையின் மூலம் தொழில் துறையினர் மற்றும் தொழில் முனைவோருக்கு நேரடியான பலன் கிடைக்கவில்லை என்ற சூழலில் அது விமர்சனமானது.
  • அதேபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த முன்பணச் சலுகை மற்றும் விடுப்பு பயண சலுகை அறிவிப்பும் அதிருப்தியாக மட்டுமே எஞ்சியுள்ளது.

நன்றி: தினமணி (19-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்