TNPSC Thervupettagam

அதிர்ந்து கொண்டே இருந்த அரசியல் களம்

December 24 , 2024 2 days 22 0

அதிர்ந்து கொண்டே இருந்த அரசியல் களம்

  • ‘தேர்தல்களின் ஆண்டு’ என்று உலக அளவில் விளிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலும் மாநில சட்டமன்றத் தேர்தல்களும் பல திருப்புமுனைகளுக்கு வழிவகுத்தன. சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், பாஜக தனது பலத்தைப் பறைசாற்றிக்கொண்ட ஆண்டு இது. இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும் மாறி மாறி நிலவிவந்தது அதன் பின்னடைவுக்குக் காரணமானது.

பயணங்​களும் திருப்​பங்​களும்:

  • பிப்ரவரி 27இல் நடந்த மாநிலங்​களவைத் தேர்தலிலேயே தனது வெற்றிக் கணக்கை பாஜக தொடங்கி​யிருந்தது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்​தனர். உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி எம்எல்​ஏக்​களும் காலை வாரினர். மாநிலங்​களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்​பினர்​களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது. 240 பேர் கொண்ட மாநிலங்​களவையின் பெரும்​பான்​மைக்கு (121) இன்னும் நான்கு உறுப்​பினர்​கள்தான் தேவை என்ற நிலைக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்தது.
  • 2023 மே 3இல் தொடங்கிய மணிப்பூர் கலவரத்தின் தீவிரம் 2024ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. அதை மனதில்​கொண்டே தனது ‘பாரத் ஜோடோ’ நீதி யாத்திரையை 2024 ஜனவரி 14இல் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து ராகுல் காந்தி தொடங்​கி​னார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்​கவும் இண்டியா கூட்ட​ணியில் காங்கிரஸின் வலிமையை அதிகரிக்​கவும் இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்​திக்​கொண்​டார். எனினும், இண்டியா கூட்ட​ணியில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவின. ஒருங்​கிணைப்​பாளராக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமாரை நியமிக்க காங்கிரஸ் தயங்கு​வ​தாகப் பேச்சு எழுந்த நிலையில், அவர் ஜனவரி 28இல் இண்டியா கூட்ட​ணியி​லிருந்து விலகி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்ட​ணிக்குச் சென்றார்.
  • ஏப்ரல் 19இல் மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்​பதிவு தொடங்​கியது. ஏழு கட்டங்​களாகத் தேர்தல் நடந்தது. முன்ன​தாகத் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்​தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிப​திக்குப் பதிலாக மத்திய அமைச்சர் ஒருவருக்கு இடமளிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் கொண்டு​வரப்​பட்டது; தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்​கலாம் எனக் கருதப்பட்ட ஆணையர் அருண் கோயல், பதவிக்​காலம் முடிவதற்கு மூன்று ஆண்டு​களுக்கு முன்பே பதவிவில​கியது எனப் பல நிகழ்வுகள் பரபரப்பைக் கிளப்பின.
  • 2018இல் மத்திய அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர முறை தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசமைப்புச் சட்டக்கூறு 19(1)(a) ஆகியவற்றை மீறியிருப்​ப​தாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடைகள் தொடர்பான தகவல்​களைப் பொதுவெளிக்குப் பகிர உத்தர​விட்டது மக்களவைத் தேர்தலில் முக்கியத் திருப்பு​முனை​யானது. இந்த அதிர்​வு​களுக்கு இடையே குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாவதாக மத்திய அரசு அறிவித்தது. 400 இடங்களை இலக்காகக் கொண்டு தேர்தலைச் சந்தித்த பாஜகவுக்கு 240 இடங்களே கிடைத்தன. இண்டியா கூட்டணி 235 இடங்களில் வென்றது.
  • கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்து​விட்​டாலும் பாஜக முன்புபோல அசுர பலத்துடன் நாடாளு​மன்​றத்தில் இயங்க முடியாது என்று பேசப்​பட்டது. ஆனால், அடுத்து நடக்க​விருந்த சட்டமன்றத் தேர்தல்​களில் வெற்றியைச் சுவைத்தால் சமாளித்து​விடலாம் என்று பாஜக கணக்குப் போட்டது. அதைச் செயல்​படுத்​தியும் காட்டியது!
  • இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்பட்ட ஒடிஷா சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதன்​முறையாக வென்று ஆட்சி​யமைத்​திருக்​கிறது. நீண்ட காலமாக முதல்வர் பதவிவகித்த நவீன் பட்நாயக்கின் சகாப்​தத்​துக்கும் முடிவு​கட்​டி​விட்டது. 370 ஆவது சட்டக்கூறு நீக்கப்​பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்​களாகப் பிரிக்​கப்பட்ட பின்னர் நடந்த காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வென்று, அதன் தலைவர் ஓமர் அப்துல்லா முதல்​வ​ரா​னார். ஆனால், கூட்ட​ணியில் போட்டி​யிட்ட 39 இடங்களில் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது, அக்கட்சி மீதான விமர்​சனத்தை மேலும் தீவிரப்​படுத்​தியது.

ஆயுதமான விசாரணை அமைப்புகள்:

  • அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க்​கட்​சிகளை முடக்கத் தவறாகப் பயன்படுத்​தப்​படு​வ​தாகக் கடும் விமர்​சனங்கள் எழுந்தன. ஜார்க்​கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்​யப்​பட்​டார். இதை முன்னிட்டு முதல்வர் பதவியையும் அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது.
  • பிணையில் வெளிவந்த பின்னர் முதல்வர் பதவி அவருக்கு மீண்டும் கிடைத்​தா​லும், இடையில் முதல்​வ​ராகப் பதவியேற்ற கட்சி விசுவாசி சம்பயி சோரனை பாஜகவிடம் பறிகொடுக்க நேர்ந்தது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி​யினர் பலர் ஏற்கெனவே கைதுசெய்​யப்பட்ட நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி​வாலும் கைதுசெய்​யப்​பட்​டார். சிறையில் இருந்​த​படியே முதல்வராக அவர் நீடித்தது விமர்​சனத்​துக்கு உள்ளானது. பிணை கிடைத்து செப்டம்பர் 13இல் வெளிவந்​தார். ஆனால், முதல்வர் பதவியை அமைச்சர் ஆதிஷிக்கு வழங்கி​விட்டு அடுத்த தேர்தலில் அனுதாப வாக்கு​களைப் பெறும் முயற்​சியில் இறங்கி​விட்​டார்.
  • மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவுக்குக் கட்சியின் பெயரும் சின்னமும் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்​பட்​டதுபோல, இந்த ஆண்டில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரிவுக்குக் கட்சியின் சின்னமும் பெயரும் கிடைத்தன. கட்சி நிறுவனரான சரத் பவார் கட்சிக்கு வேறொரு பெயரை வைக்க நேர்ந்தது.
  • ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில், பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படும் எனக் கருதப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 90 இடங்களில் 48ஐ வென்று ஆட்சியைத் தக்கவைத்​துக்​கொண்டது பாஜகவுக்குப் பெரும் உற்சாகம் தந்தது. ஜார்க்​கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைவர்கள் தீவிரப் பிரச்​சாரம் செய்தாலும் ஹேமந்த் சோரனை வீழ்த்த முடிய​வில்லை.
  • ஆனால், மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதி​களில் 235ஐக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி. எதிர்​பார்த்தபடி பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்​வ​ராகி​விட்​டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கிடைக்க​வில்லை. துணை முதல்​வ​ராகி​விட்​டாலும் அவர் விரும்பிய உள் துறை அமைச்​சகமும் கிடைக்க​வில்லை.
  • ஆனால், இதை வைத்து அவர் மீண்டும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசே​னா​வுக்குத் திரும்​புவாரா என்பது சந்தேகம்​தான். அந்த அளவுக்குச் சட்டமன்​றத்​திலேயே உத்தவ் தாக்கரேயை அவர் கடுமையாக விமர்​சித்து​வரு​கிறார். ஆனால், அஜித் பவார் துணை முதல்​வ​ராகப் பதவியேற்ற அடுத்த நாளே ரூ.1,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்தது.

சர்ச்​சைகளும் சவால்​களும்:

  • கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்​துவ​மனையில் பெண் மருத்​துவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்​பட்டுக் கொலைசெய்​யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்​ஜிக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வளவுக்கும் இடையில், இண்டியா கூட்ட​ணிக்குத் தலைமை வகிக்க விரும்​புவதாக மம்தா பானர்ஜி கூறியதும் அதற்கு சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்​ததும் காங்கிரஸுக்குப் பின்னடை​வாகக் கருதப்​படு​கின்றன.
  • தொழில​திபர் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதித் துறை முன்வைத்த குற்றச்​சாட்டை வைத்து நாடாளு​மன்​றத்தில் காங்கிரஸ் களமாட, அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸுடன் காங்கிரஸைத் தொடர்​புபடுத்தி பாஜக பதிலடி கொடுத்தது. மின்னணு வாக்குப்​பதிவு இயந்திரத்தை ஒழித்து​விட்டு வாக்குச்​சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்​திவரும் நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைக் கொண்டு​வரும் இரண்டு மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு. எதிர்க்​கட்​சிகளின் கடும் எதிர்ப்​புக்​கிடையே நாடாளு​மன்றக் கூட்டுக்​குழுவின் பரிசீலனைக்கு இம்மசோ​தாக்கள் அனுப்​பப்​பட்​டிருக்​கின்றன.
  • 2025இல் டெல்லி, பிஹார் சட்​டமன்றத் தேர்​தல்கள் ​காத்​திருக்​கின்றன. ஆக, புத்​தாண்​டிலும் அரசியல் களம் அ​திரும் என்றே நம்​பலாம்!

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்