TNPSC Thervupettagam

அதிர்வுகளை ஏற்படுத்திய அரசியல் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

December 19 , 2024 3 days 39 0

அதிர்வுகளை ஏற்படுத்திய அரசியல் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

  • ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - தமிழ்நாட்டு அரசியல் களத்தின் முக்கிய முகங்களுள் ஒருவராக அறியப்பட்டவர். பெரியாரின் பேரன் – ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் என்கிற இருபெரும் அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். தமிழ்நாடு காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவர்களுள் ஒருவராக இருந்தவர். காங்கிரஸை உயிர்ப்புடன் வைத்திருந்த அவரது மறைவு தமிழக அரசியல் களத்துக்குப் பெரும் இழப்பு.

அரசியல் பயணம்:

  • ஆரம்ப காலம் முதலே அரசியல் காற்றைச் சுவாசித்து வளர்ந்தவர் என்பதால் இளங்கோவனின் அரசியல் பயணம் வெகு இயல்பானதாக இருந்தது. தனது தந்தையின் பாதையில் காங்கிரஸ் உறுப்பினராகி அரசியலில் தீவிரம் காட்டினார். நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், கட்சிக்குள்ளும் சிவாஜி ஆதரவாளராகவே அறியப்பட்டார்.
  • காங்கிரஸின் மாணவரணிச் செயலாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாநிலப் பொதுச்செயலாளர் என்று படிப்படியாக வளர்ந்து, 1984 இல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜானகி ராமச்சந்திரனின் அரசுக்கு ஆதரவாக சிவாஜி நின்றபோது இளங்கோவனும் ஜானகி பக்கமே நின்றார்.
  • காங்கிரஸிலிருந்து விலகி சிவாஜி தனிக்கட்சி தொடங்கியபோது அவருடன் இணைந்த இளங்கோவன், 1989 தேர்தலில் சிவாஜியின் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ வேட்பாளராக பவானிசாகரில் நின்று தோல்வி அடைந்தார்.
  • சிவாஜி தீவிர அரசியலிலிருந்து விலகியபிறகு மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரஸில் இணைந்த இளங்கோவன், அங்கே தீவிரமாகச் செயல்பட்டார். 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்ற இளங்கோவனுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆம், மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ப.சிதம்பரம், ரங்கராஜன் குமாரமங்கலம் போன்ற மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரஸிலிருந்து விலகி, தமாகா, பாஜக, தனிக்கட்சி என்று நகர்ந்தபோது இளங்கோவன் காங்கிரஸ் மாநிலத் தலைவராக்கப்பட்டார்.

அதிரடி அரசியல்:

  • அதன் பிறகு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீதும் அதிமுக அரசு மீதும் விமர்சனக் கணைகளைப் பாய்ச்சி அதிர்வுகளைக் கிளப்பிய இளங்கோவன், மறுபக்கம் காங்கிரஸைப் பலப்படுத்துவதிலும் தீவிரக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸில் இணைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றார். காங்கிரஸ் – தமாகா இணைப்புக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை தமாகாவிலிருந்து வந்த சோ.பாலகிருஷ்ணனுக்கு விட்டுத் தந்துவிட்டு, செயல் தலைவராகச் செயல்பட்டார் இளங்கோவன்.
  • ‘சொல்லின் செல்வர்’ ஈ.வி.கே.சம்பத்தின் மகனான ஈவிகேஎஸ் இளங்கோவன் பயன்படுத்திய சில சொற்கள் அரசியல் களத்தில் சர்ச்சைக்குள்ளாகின. குறிப்பாக, வெளிநாட்டில் பிறந்த சோனியா அண்டோனியோ மெய்னோ இந்தியாவின் பிரதமராகக் கூடாது என்று ஜெயலலிதா பேசியபோது, “சோனியாவின் இயற்பெயரை அரசியல் விமர்சனத்துக்கு ஜெயலலிதா பயன்படுத்தினால், ஜெயலலிதாவை அவரது கோமளவல்லி என்கிற இயற்பெயரைச் சொல்லியே அழைப்பேன்” என்று இளங்கோவன் பேசினார். அந்தக் காலக்கட்டத்தில் அதிமுகவின் முக்கியப் பொறுப்பில் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2004 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் கோபிசெட்டிப்பாளையத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இளங்கோவன், மன்மோகன் சிங் அரசில் ஜவுளித் துறை இணையமைச்சர் ஆனார். மெல்ல மெல்ல திமுகவையும் கருணாநிதியையும் சீண்டத் தொடங்கினார். 2005 பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் எனப் பலரையும் இளங்கோவன் வசைபாடியதாகச் சர்ச்சை வெடித்தது. ஒருகட்டத்தில் இளங்கோவன் வருத்தம் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாத திமுக உடனடியாக கட்சியின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவைக் கூட்டியது.
  • பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, 2004 மக்களவைத் தேர்தலில் இளங்கோவனை ஆதரித்து, கொளுத்தும் வெயிலில் தான் பரப்புரை செய்ததை நினைவூட்டினார். அதோடு, இளங்கோவன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். பிறகு காங்கிரஸ் தலைமை எடுத்த சமாதான முயற்சிகளால் மோதல் முடிவுக்கு வந்தது.

கூட்டணி ஆட்சிக்கான குரல்:

  • 2006 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சியை நிபந்தனையாக வைத்தே திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்றும் பேசியதோடு, “திமுக ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தொண்டன் அடிபட வேண்டுமா?” என்றும் கேள்வி எழுப்பி பரபரப்பைக் கிளப்பினார். அதற்கேற்ப 2006இல் அமைந்த திமுக அரசை ‘மைனாரிட்டி அரசு’ என்று ஜெயலலிதா விமர்சித்தபோது, இளங்கோவனின் கூட்டணி ஆட்சி பேச்சுகள் வேகமெடுத்தன. திடீரென விஜயகாந்தைச் சந்தித்து அவருக்கு இனிப்பூட்டி திமுகவைச் சீண்டினார்.
  • இந்தப் பின்னணியில்தான் 2009 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார் இளங்கோவன். அதன்பிறகும் அவரது ஆவேச அரசியல் தொடர்ந்தது. பிரபாகரனின் மகன் இறந்த செய்தி வந்தபோது, இளங்கோவன் உதிர்த்த வார்த்தைகள் விமர்சனத்துக்குள்ளாகின. ஜி.கே.வாசன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ‘காங்கிரஸ் உருப்பட 10 யோசனைகள்’ என்று பிரபல வார இதழுக்குப் பேட்டி கொடுத்துப் பரபரப்பைக் கிளப்பினார்.
  • 2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜி.கே.வாசன் காங்கிரஸிலிருந்து வெளியேறி மீண்டும் தமாகாவைத் தொடங்கினார். அப்போது மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸுக்குத் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பரபரப்பாகவே காங்கிரஸை வழிநடத்தினார். அதிமுக அரசின் மீது ஊழல் புகார்களைச் சொல்லி எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்தினார்.
  • கருணாநிதி, ஜெயலலிதாவை மட்டுமல்லாமல் ஜி.கே.மூப்பனார், திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் விமர்சிக்க இளங்கோவன் தயங்கியதில்லை. பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும்கூட இளங்கோவனைச் சுற்றி சர்ச்சைக்காற்று சுழன்றுகொண்டே இருந்தது. மோடி – அம்பேத்கர் தொடர்பான புத்தகத்துக்கு இளையராஜா அணிந்துரை எழுதியபோது, அவரைப் பற்றி இளங்கோவன் பேசிய வார்த்தைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகின.

இறுதிக்கட்டம்:

  • 2019 மக்களவைத் தேர்தலில் தேனியில் களமிறங்கிய இளங்கோவன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்திடம் தோற்றுப்போனார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தோல்வியடைந்த ஒரே வேட்பாளர் இளங்கோவன் மட்டுமே. அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து சற்றே விலகியிருந்த இளங்கோவனுக்கு மீண்டும் தேர்தல் களம் காணும் வாய்ப்பு வந்ததன் பின்னணியில் பெரும் சோகம் இருந்தது. 2021 தேர்தலில் ஈரோடு கிழக்கில் வெற்றிபெற்றிருந்த இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா அகால மரணம் அடைந்ததால், அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட நேர்ந்தது.
  • தந்தைக்குப் பிறகு மகன் தேர்தல் களத்துக்கு வருவது வழக்கம். ஆனால், மகனின் மரணத்துக்குப் பிறகு தான் இடைத்தேர்தலில் போட்டியிடுவது வருத்தத்துக்குரியது. என்றாலும், தனது மகன் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வதற்குத் தனக்கு வாய்ப்பு தருமாறு நா தழுதழுக்கப் பரப்புரை செய்தார் இளங்கோவன். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேரை டெபாசிட் இழக்கச் செய்து வெற்றிபெற்றார்.
  • சட்டமன்ற உறுப்பினராக ஆரம்பித்து மாநிலத் தலைவர், மத்திய இணை அமைச்சர் வரை உயர்ந்து, கடைசிக்காலம் வரை சர்ச்சைக்குரிய தலைவராகவே அறியப்பட்ட இளங்கோவனின் அரசியல் பயணம் 2024 டிசம்பர் 14 அன்று முடிவுக்கு வந்தது. உண்மையில், பெரியாரின் பேரன் இளங்கோவனின் மரணம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான இழப்பு!

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்