- தாவரங்கள், விலங்கினங்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்துவதன் மூலம் மட்டுமே சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க முடியும். ஆனால் பெரும்பாலான ஈரக்காடுகள், பசுமை மாறாக் காடுகள், புல்வெளிகள், சமவெளிக் காடுகள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவற்றில் பெருகி வரும் அந்நிய நாட்டுத் தாவரங்கள் காரணமாக சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- 3,58,000 ச.கி.மீ. இந்திய காட்டுப் பகுதியை உள்ளடக்கிய 20 மாநிலங்களின் 1,58,000 சதுர கிலோமீட்டர் பரப்பை, லாந்தனா காமாரா, ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா, குரோமோலேனா ஓடோராட்டா போன்ற 11 வகை அந்நிய இன தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு கூறுகிறது.
- இந்தியாவின் 31% வெப்பப் புல்வெளிகள், 51% இலையுதிர் காடுகள், 40% இலையுதிர் ஈரக்காடுகள், 29% பசுமை இலைக்காடுகள், 44% பசுமை மாறாக் காடுகள், 33% ஈர புல்வெளிகள் இவற்றை இந்த அந்நிய இன தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
- அந்நிய நாடுகளின் தாவரங்கள் நமது நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. உள்ளூர் இன தாவரங்கள் வளரவும், வனவிலங்குகள் நடமாடவும் அனுமதிக்காத அந்நிய இன தாவரங்களிலிருந்து வெளியேறும் பிசின் போன்ற பொருள் நம் மண்ணை அமிலமாக்குகிறது.
- புதர்ச் செடியான மாகடம்பு (லாந்தனா) போன்ற தாவரங்கள் பல்லுயிர்ப் பெருக்கத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இது போன்ற தாவரங்களால் காட்டெருமை, புள்ளிமான், கடம்ப மான் போன்ற உயிரினங்கள் உணவின்றித் தவிக்கின்றன. அந்நிய தாவரங்கள் புலிகள், சிறுத்தைகள் போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளின் வாழ்வையும் பாதிக்கின்றன.
- புலிகள் போன்ற வேட்டையாடும் விலங்குகள் உயிர் வாழ்வது தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை பொறுத்தது. அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களின் பெருக்கம் இந்த நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கிறது. ஆக்கிரமிப்பு தாவரங்கள், சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் மீதும், மனிதர்கள் மீதும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
- புலிகள் போன்ற மாமிச உண்ணிகள், அவற்றின் வாழ்விடங்கள் இவற்றை கண்காணிக்கும் "புராஜெக்ட் டைகர்' திட்டம், அந்நிய தாவரப் படையெடுப்புகள் உயிரினங்களின் வாழ்விடங்களை மாற்றுகின்றன என்றும் உயிரியலில் சிக்கலான சூழலியல் மாற்றங்களை உருவாக்குகின்றன என்றும் கூறுகிறது.
- அந்நிய தாவரங்களால் ஏற்படும் இத்தகைய உயிரியல் படையெடுப்பு இந்திய பொருளாதாரத்தில் 182.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 15,20,055 கோடி) வரை செலவை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
- கடந்த காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்பட்ட புல்வெளிகள், ஈர காடுகளின் பெரும்பகுதி யூகலிப்டஸ், பிசின் தரும் வாட்டல் போன்ற அந்நிய தாவரங்களின் தோட்டமாக மாற்றப்பட்டதன் விளைவாக வரையாடுகளின் வாழ்விடம் அழிக்கப்பட்டுவிட்டது. அந்நிய இன தாவரங்களால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், காட்டெருமைகளின் உணவான தாவரங்களை அழித்ததால் இப்போது காட்டெருமைகள் உணவு தேடி அடிக்கடி நகரத்திற்குள் வருகின்றன.
- மத்திய, தென்னமெரிக்கப் பகுதிகளிலிருந்து சுமார் 50 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த வெப்பமண்டல தாவரமான லான்டானா கமாரா என்ற செடி இந்தியாவில் 5,74,186 ச.கீ.மீ. பரப்பளவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள அந்நிய தாவரமாகும். சணல் கொடி (அமெரிக்கக் கயிறு) எனப்படும் அஸ்டெரேசி குடும்பத்தை சார்ந்த வெப்பமண்டல தாவரமான மிகானியா மைக்ராந்தா, இந்தியாவில் 1,48,286 ச.கி.மீ. பரப்பளவில் வளர்ந்துள்ளது. 13% நிலத்தில் வளர்ந்துள்ள இத்தாவரமே அந்நிய தாவரங்களில் இந்தியாவின் மிகக் குறைந்த பரப்பளவில் வளர்ந்துள்ள தாவரம்.
- 2,54,880 ச.கி.மீ. நிலப்பரப்பின் 72%-ஐ 11 ஆக்கிரமிப்பு தாவரங்களில் ஒன்று ஆக்கிரமித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆக்கிரமிப்பு தாவரங்களின் வளர்ச்சி, வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிகளில் அதிகமாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. பெரும்பாலான அந்நிய தாவரங்கள் சுற்றுச்சூழலுக்கும், காலநிலைக்கும் உகந்த இடங்களில் வளர்கின்றன.
- மெக்ஸிகோவை தாயகமாக கொண்ட சீமைக் கருவேலம் (ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா) என்ற அந்நிய தாவரம் 94% உலர்ந்த புல்வெளிகளிலும் உலர்ந்த இலையுதிர் காடுகளிலும் பரவியுள்ளது. அவரையனையன (சென்னா டோரா), மருளூமத்தை (சாந்தியம் ஸ்ட்ரூமரியம்), சீன புதினா (மெசோஸ்பேரம் சுவேயோலென்ஸ்) போன்ற தாவரங்கள் வறண்ட சவன்னாக்களிலும் இலையுதிர் காடுகளிலும் அதிகம் காணப்படுகின்றன.
- அதேசமயம் கசப்பு கொடி (மைகானியா மிக்ராந்தா), வட்டிக்கண்ணி கொடி (அஜெரடினா அடினோபோரா) ஆகியவை ஈரமான புல்வெளிகளிலும், பசுமையான காடுகளிலும் அதிகம் உள்ளன.
- லான்டானா கமாரா, ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா, குரோமோலெனா ஓடோராட்டா ஆகிய அந்நிய தாவரங்களின் அதிக பாதிப்புக்குள்ளான இடமாக (ஹாட் ஸ்பாட்) மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் இருக்கிறது. தென்கிழக்கு தொடர்ச்சி மலைகளின் நிலப்பரப்புகளில் ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா, லான்டானா கமாராவின் ஆகிய தாவரங்கள் அதிகம் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.
- அதீத அழிவு திறன் கொண்ட ஆக்கிரமிப்பு தாவரங்கள் இந்தியாவின் இயற்கை வளம் சூழ்ந்த 22 சதவீத பகுதிகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்நிய தாவரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும்போது வெப்பநிலை கூடுகிறது என்றும், மழைப்பொழிவும், பருவகால தாவர இயல் வளர்ச்சியும் குறைகின்றன என்றும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
- ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பெருகிவிட்ட பல அந்நிய தாவர இனங்களை படிப்படியாக அகற்றி பூர்விக தாவர இனங்களை நடுவதன் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தலாம் என்பது சூழலியலாளர்களின் கருத்து.
நன்றி: தினமணி (26 – 10 – 2023)