TNPSC Thervupettagam

அந்நிய மண்ணில் வாழ்ந்த அசல் தேசப் பற்றாளர்

May 26 , 2023 596 days 526 0
  • அந்நிய மண்ணில் இருந்த படியே இந்திய விடுதலைக்காகப் போரிட்டு உலக மக்களின் ஆதரவைத் திரட்ட முயன்ற அரிதான தியாகிகளில் ஒருவர் செண்பகராமன்.

ஜெய்ஹிந்த்’ முழக்கம்

  • 15 செப்டம்பர் 1891இல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில், நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் செண்பகராமன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவருக்குள் தேசிய உணர்வு வேரூன்றத் தொடங்கிவிட்டது. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை; அதனை நான் அடைந்தே தீருவேன்’ என்னும் பாலகங்காதர திலகரின் முழக்கம் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது.
  • 1906இல் வங்கப் பிரிவினையை அடுத்து, தான் படித்துவந்த பள்ளியிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார். 1907இல் ‘ஜெய் ஹிந்த்’ என்னும் எழுச்சிமிக்க முழக்கத்தை முதன்முதலில் முன்வைத்த பெருமைக்குரியவர் செண்பகராமன்.
  • பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நடவடிக்கை களுக்காகக் கைதுசெய்யப்படக்கூடிய நிலையில் இருந்தார் செண்பகராமன். உயிரியலாளர் என்னும் போர்வையில் ஜெர்மனிக்கு ஆதரவான உளவாளியாகத் திருவனந்தபுரத்தில் உலவிக்கொண்டிருந்த வால்டர் வில்லியம் ஸ்ட்ரிக்லேண்ட் என்னும் ஆங்கிலேயருடன் 1908இல் ஒரு கப்பலில் இந்தியாவிலிருந்து வெளியேறினார்.
  • இத்தாலியிலும் சுவிட்சர்லாந்திலும் உயர் கல்வி கற்க செண்பகராமனுக்கு ஸ்ட்ரிக்லேண்ட் உதவினார். இறுதியாகத் தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்காக ஜெர்மனிக்கு வந்த செண்பகராமன், பொருளியலிலும் பொறியியலிலும் இரட்டை முனைவர் பட்டம் பெற்றார். தன் இறுதிக்காலம்வரை ஜெர்மனியிலேயே வாழ்ந்தார்.

விடுதலை உணர்வைப் பரப்பியவர்

  • பெர்லினில் மாணவராக இருந்தபோதே ‘இந்திய உதவிக்கான சர்வதேசக் குழு’ (Aid India International Committee) என்னும் அமைப்பை உருவாக்கினார். அதில் பல ஐரோப்பிய முக்கியஸ்தர்களும் அங்கம் வகித்தனர். பிற நாட்டவரிடையே இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவு பெருகுவதில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றியது.
  • புரோ-இந்தியா’ என்னும் மாத இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகச் செயல்பட்டார். ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியான அந்த இதழ், இந்தியா குறித்து பிரிட்டிஷ் அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட செய்திகளுக்கும் இந்தியா குறித்துப் பரப்பிவிடப்பட்ட பொய்களுக்கும் மாற்றாக, இந்தியாவின் உண்மை நிலையை ஐரோப்பியர்களுக்கு எடுத்துரைக்கும் பணியைச் செய்தது.
  • முதல் உலகப் போர் தொடங்கியபோது ‘இந்திய சுதந்திரக் குழு’ (Indian Independence Committee), ‘இந்தியத் தன்னார்வலர் படை’ (Indian Voluntary Corps) ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். அந்த வகையில், இந்திய விடுதலைக்கான புரட்சிகர தேசப்பற்று நடவடிக்கைகளில் சுபாஷ் சந்திரபோஸுக்கு முன்னோடியாக அவர் திகழ்ந்தார்.

ஹிட்லருடன் மோதியவர்

  • முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்ட ஜெர்மானிய ராணுவத்தில் இணைந்தார். 1914இல் ‘எம்டன்’ கப்பலில் கமாண்டர் வான் முல்லருடன் பயணித்து, இந்தியக் கடற்கரையை அடைந்தார். 1914 செப்டம்பர் 22 அன்று அன்றைய மெட்ராஸின் மீது எம்டன் குண்டு வீசியது. அதன் பிறகு, பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பிச் சென்றார்.
  • 1931இல், இந்தியாவுக்கு விடுதலை பெற அருகதை இல்லை என்றும், இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிந்தே இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க-பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஹிட்லர் கூறியிருந்தார். இதனால் சினமுற்ற செண்பகராமன், ஹிட்லர் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதோடு, அதற்கு எட்டு நாள் கெடுவும் விதித்தார். அவர் விதித்திருந்த கெடுவுக்கு ஒருநாள் கடந்து, ஹிட்லர் தன் எழுத்துபூர்வ மன்னிப்பை வெளியிட்டார். அதே நேரம், நாஜிக்களின் ‘எதிரிகள்’ பட்டியலில் செண்பகராமன் சேர்க்கப்பட்டார்.
  • அதற்குப் பிறகு நேர்ந்த இன்னல்களைப் பொருட்படுத்தாமல் இந்திய சுதந்திரத்துக்கான பணிகளை அதே வேகத்துடன் தொடர்ந்தார். 1933இல் வியன்னாவில் சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்து உரையாடினார்; பெர்லினில் ஜவாஹர்லால் நேருவையும் சந்தித்தார். 1934 மே 26 அன்று செண்பகராமன் காலமானார். அரசியல் எதிரிகள், உணவில் நஞ்சைக் கலந்து அவரைக் கொன்றுவிட்டதாகக் கூறப்பட்டாலும், மரணத்துக்கு முந்தைய மாதங்களில் மூளையில் ரத்த உறைதலால் அவர் அவதிப்பட்டுவந்தார், அதற்கான சிகிச்சைக்காக இத்தாலிக்குச் சென்றுவந்தார் என்பதும் உண்மை.
  • தேசியக் கொடி பறக்கும் போர்க் கப்பலில் சுதந்திர இந்தியாவில் கால்பதிக்க வேண்டும் என்பது அவருடைய வாழ்நாள் லட்சியமாக இருந்தது. தன்னுடைய அஸ்தி நாஞ்சில் நாட்டில் தூவப்பட வேண்டும் என்பது அவருடைய இறுதி விருப்பம். 1966 இல் ‘ஐஎன்எஸ் டெல்லி’ கப்பலில் அவருடைய அஸ்தி எடுத்து வரப்பட்டதன் மூலம் அவருடைய லட்சியம் பகுதி அளவில் நிறைவேறியது எனலாம்.
  • மே 26: செண்பகராமன் நினைவு நாள்

நன்றி: தி இந்து (26 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்