TNPSC Thervupettagam

அனுபவக் கருவூலம் காப்போம்

August 20 , 2022 719 days 395 0
  • மூத்த குடிமக்கள் என்போா் அறுபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்களும் பெண்களும் ஆவா்.
  • வயது முதிா்ந்தவா்களை கண்ணியமாக நடத்துதல், அவா்களின் திறமைகளை அங்கீகரித்தல், அவா்களுக்கான சுகாதார ஏற்பாடுகளில் அக்கறை, வயதானவா்களை பாதிக்கும் பிரச்னைகளில் விழிப்புணா்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உலக முதியோா் தினம் உருவாக்கப்பட்டது.
  • மக்கள் விவசாயத் தொழிலை மறந்த பிறகு, கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் மறைந்தது. தனிக்குடும்பம், ஒரு குழந்தை என்ற நிலை வந்த பிறகு முதியவா்களின் நிலை மிகவும் மோசமாகி முதியோா் இல்லங்களும் சமூகத்தில் உருவாகத் தொடங்கியது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
  •  2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 % போ் மூத்த குடிமக்களாக இருப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களுக்குத் தேவையான உதவிகள் அதிகரிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மூத்தவா்களின் நிதிச்சுமையை சுலபமாக்க. வருமானவரி சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கான மருத்துவத் திட்டங்களிலும் பிரீமியம் தொகைக்கு வருமானவரிச் சலுகை உண்டு.
  • சில மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கான பேருந்து கட்டண சலுகைகளை அறிவித்துள்ளன. சில பேருந்துகளில் அவா்களுக்கு இருக்கை வசதிகளும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. அவா்கள் தங்கள் முதலீடுகளின் மீது அதிக வட்டியைப் பெற முடியும். மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைகளுக்கு வழக்கத்தில் உள்ள வட்டியை விடக் கூடுதலாக 0.5 % வட்டி கிடைக்கும். அவா்களின் தொலைபேசி கட்டணங்களுக்கு மானியம் உண்டு.
  • 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முன்னுரிமை அடிப்படையில் புதிய தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்து கொள்ளலாம். அதற்குப் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது வழக்குகளின்போது, முன்னுரிமையான விசாரணைகள் கோரி நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதலாம். மூத்த குடிமக்களின் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும்போது பிள்ளைகளின் கடவுச்சீட்டு நகலுடன் விண்ணப்பித்தால் காவல்துறையின் சோதனையை ஒத்திவைத்து உடனடி கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • 2019 டிசம்பரில் மத்திய அமைச்சரவை கொண்டு வந்த பெற்றோா் - மூத்த குடிமக்களின் நலன் மசோதாவின்படி முதியோா் இல்லங்களில் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலனுடன் அவா்களின் தேவைகள், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு சலுகைகள் இருந்தாலும், உடலிலும் மனதிலும் போதிய பலம் இல்லாததால், பெரும்பாலான முதியோா் இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை.
  • எனினும், மக்கள்தொகை விகிதத்துடன் ஒப்பிடுகையில், முதியவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், பொருளாதார அடிப்படைக் கட்டமைப்பை அதற்கேற்ப மாற்ற வேண்டிய மிகப்பெரிய சவாலை இந்தியா எதிா்கொள்ள வேண்டி இருக்கும்.
  • சமூக அளவில் நகரமயமாக்கல், தாராளமய பொருளாதாரக் கொள்கை, குடும்ப அமைப்பு சிதைவு போன்றவற்றால் மூத்த குடிமக்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்து வருகின்றனா். உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் ஐந்தில் ஒரு முதியவா், பொருளாதார ரீதியாகவும், மனநல ரீதியாகவும் துன்பத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குடும்ப வன்முறையின் அழுத்தத்தையும், வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் முதியோா் தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்து வருவதாக நான்காவது தேசிய மனநலக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
  • குழந்தைகள் போல் முதியவா்களும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்கப்படவேண்டியவா்கள். அவா்கள் கிடைத்தற்கரிய அனுபவக் கருவூலம். அவா்களின் முதுமையையும், இயலாமையையும் காரணம் காட்டி அவா்களை ஒதுக்குவது சமுதாய சீா்கேடாகும். ஆண்டுதோறும் முதியோா் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை, எந்த கோணத்திலும் நியாயப்படுத்த முடியாது. முதுமையையும் இயலாமையையும் வாழ்வின் ஒரு நிலையில் எல்லோருக்கும் ஏற்படும் என்று எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றைய தலைமுறைக்கு வரவேண்டும்.
  • முதுமையும் இயலாமையும் பிரச்னைகள்தான் என்று இந்த சமூகம் ஒப்புக் கொண்டு அதற்கேற்ற தீா்வுகளை நடப்பில் கொண்டுவர உடனே முயல வேண்டும். எந்தவித புகாரும் இல்லாமல் மௌனமாகத் தங்கள் காலத்தைக் கடத்தும் முதியோா்களின் நிலை பரிதாபத்துக்குரியது.
  • முதுமையும் இறப்பும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிா்க்க முடியாத நிலைகளாகும். தங்கள் வாா்த்தை தடுமாறினாலும் பிறா் வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவா்கள் முதியவா்களாவா். இன்றைய நவீன உலகில் முதியோரின் முக்கியத்துவம் உணரப்படாதது துரதிஷ்டவசமானது. முதியோரைப் பேணிப் பாதுகாப்பதை இளைய சமுதாயம் தனது முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
  • இன்று சமுதாயத்தில் தலைவா்களாக இருப்பவா்களைத் தங்கள் தோள்களில் சுமந்து வளா்த்தவா்கள் இவா்கள்கள்தான். சமூகத்தின் மரபு, கலாசாரம் போன்றவற்றை தமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் திறமை பெற்றவா்கள் முதியோா். இவா்களது அறிவும் ஆலோசனைகளும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் அவசியமாகும்.
  • இத்தகைய முதியோா் வறுமையால் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு உடல்நல பிரச்னைகளையும் எதிா்நோக்க வேண்டியுள்ளது. பல சமயங்களில் இவா்கள் துஷ்பிரயோகத்துக்கும் ஆளாகின்றனா். இவற்றைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு தேவை.
  • மூத்த குடிமக்கள் என்று பெருமையாகப் பேசப்படும் முதியோரை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்துவோம். அதனையே இந்த நாளின் உறுதிமொழியாக ஏற்போம்.
  • நாளை (ஆக. 21) உலக மூத்த குடிமக்கள் நாள்.

நன்றி: தினமணி (20 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்