- இந்த ஆண்டின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பியதன் வாயிலாக, அனைத்து சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
- நாடாளுமன்ற அவைகளைப் போலத் தனி அலைவரிசையை வருங்காலத்தில் உருவாக்கிடவும் அதன் வழியாக ஆக்கபூர்வமான அரசியல் சூழலை வளர்த்தெடுக்கவும் வேண்டும்.
- தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு கால நடவடிக்கைகள் அனைத்தும் மின்னுருவாக்கம் செய்யப்படும் என்ற நிதிநிலை அறிக்கையின் முந்தைய அறிவிப்பும் விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும்.
- பயிர் பாதிப்பு நிவாரணங்களுக்கு நிதி விடுவிப்பு, சென்னை வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.
- அம்மா உணவகங்கள் மூடப்படாது என்ற முதல்வரின் அறிவிப்பு, எளியோர் நெஞ்சில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறு குற்றத்தில் ஈடுபட்டாலும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற முதல்வரின் எச்சரிக்கையை அவரது கட்சியினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- கூட்டுறவுச் சங்கங்களுக்கான நெகிழ்வான விதிமுறைகள் ஊழலுக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அதை நீக்கும் முயற்சியாக இயக்குநர்களின் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்டத் திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது.
- பெருந்தொற்றுக் காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு, கூட்டுறவு முறையைப் பலப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
- இது தொடர்பில், மத்திய உள் துறை அமைச்சரும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். கூட்டுறவுத் துறை சீர்திருத்தங்களைத் திமுக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.
நிர்வாக முறையின் திருப்புமுனை
- நிறைவேற்றப்பட்டுள்ள 13 சட்ட முன்வடிவுகளில் பெரும் பாராட்டைப் பெற்றிருப்பது, தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அதிகார அமைப்புகளுக்குமான ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நியமிக்கப்படுவதற்கான சட்ட முன்வடிவாகும். இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று, இந்தச் சட்ட முன்வடிவு அவையில் நிறைவேற்றப்பட்டது, ஆளுங்கட்சியின் மற்ற அறிவிப்புகளைப் பின் தள்ளி விட்டு, முதன்மையான கவனத்தை ஈர்த்துள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள், மின்வாரியம் ஆகியவற்றில் ஊழியர்களை நியமிப்பதில் அவ்வப்போதைய ஆளுங்கட்சிகள் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதற்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.
- என்ற போதும், திமுக தனக்கான வாய்ப்புகளை மறுத்து அந்நியமனங்களை வெளிப்படையாக நடத்துவதற்கு முன்வந்திருப்பது தமிழ்நாட்டின் நிர்வாகத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
- டிஎன்பிஎஸ்சி வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, இந்நியமனங்கள் அளிக்கப்படவுள்ள அதே வேளையில், முதன்மைத் தேர்வுகளில் விரித்துரைக்கும் வகையிலான விடைத்தாள்கள் திருத்தப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
- அனைத்துக்கும் மேலாக, எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் நேர்காணல் தேர்வில் மதிப்பெண் குறைந்து வேலைவாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 - 01 - 2022)