TNPSC Thervupettagam

அனைவருக்கும் அவசியம் ஆரோக்கிய உணவுப் பழக்கம்

May 13 , 2024 66 days 94 0
  • இந்தியாவில் மக்களைத் தாக்கும் நோய்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான நோய்களுக்கு மக்களின் உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையுமே காரணங்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. சரிவிகித உணவுப் பழக்கமும் முறையான உடற்பயிற்சியும் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், இரண்டாவது வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) ஆகியவற்றைத் தடுக்கும் எனத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
  • தொற்றா நோய்களான உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுக்குள் வைக்கவும் மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை உறுதிசெய்யவும் 17 வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்திய மக்களின் உணவுப் பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
  • முறையற்ற உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் சேர்க்கை, அதிக உப்பு - சர்க்கரைப் பயன்பாடு, துரித உணவு, சக்கை உணவு போன்றவை சமூகத்தின் அனைத்துத் தரப்பு வீடுகளிலும் பின்பற்றக்கூடிய உணவுப் பழக்கமாக மாறிவருகின்றன. பெரும்பாலான குடும்பங்களில் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் கொண்ட உணவு வகைகள், உப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவை மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த உணவுப் பழக்கத்தோடு உடற்பயிற்சியின்மையும் சேர்ந்துகொள்ளும்போது, நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. தற்போது பெரும்பாலானோர் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்கிறார்கள். குறைவான உடலுழைப்பு செலுத்தும் இவர்கள், போதுமான அளவுக்கு உடற்பயிற்சியும் செய்வதில்லை. இதனால், உடல்பருமன், நீரிழிவு தொடங்கிப் பல்வேறு வகையான நோய்களின் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள். இள வயது மரணங்களும் நேர்கின்றன.
  • ஒருபக்கம் குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன், ரத்தசோகையாலும் பாதிக்கப்படுகின்றனர். மறுபக்கம் பெரும்பாலானோர் உணவுப் பழக்கம் - வாழ்க்கை முறை தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இந்த இரண்டையும் கணக்கில்கொண்டு, அதற்கேற்ப ஆரோக்கியத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்கிறது.
  • பருப்பு, தானிய வகைகளிலிருந்து பெருமளவு கலோரிகளைப் பெறாமல் விதைகள், காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றிலிருந்து ஊட்டச்சத்துகளைப் பெறலாம் என அறிவுறுத்தியிருக்கிறது. 5 – 9 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 34% உயர் டிரைகிளிசரைடுகளால் தொற்றா நோய்களுக்கு ஆளாவதாகத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • அதனால் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரின் உணவுப் பழக்கத்தில் கூடுதல் அக்கறை தேவை. உப்பு, சர்க்கரைபோன்றவற்றைக் குறைந்த அளவிலும் எண்ணெயை மிதமான அளவிலும் பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக ஒரே எண்ணெயை மட்டும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, வெவ்வேறு எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தலாம்.
  • மக்களின் உடல்நலத்தை நேரடியாகப் பாதிக்கும் உணவுப் பழக்கம் குறித்து சுகாதாரத் துறை கொள்கைரீதியான முடிவுகளை எடுப்பதுடன், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரவலாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இது குறித்து அரசு அறிவுறுத்தலாம்.
  • உணவுப் பழக்கம் என்பது மனிதர்களின் பொருளாதாரம், விருப்பத்தைச் சார்ந்தது என்பதால், தனி மனித விழிப்புணர்வும் அவசியம். பள்ளி மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் இது குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோய்களிடமிருந்து மக்களை விலக்கி வைப்பதற்கான வழிகள். இது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்