TNPSC Thervupettagam

அனைவருக்கும் தடுப்பூசி

June 3 , 2021 1334 days 538 0
  • மிகப் பெரிய லாபத்தைத் தருவது எது? ஏழை நாடுகளின் மக்களுக்கு, கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைப் போடும் உலகளாவிய இயக்கம்தான்.
  • இதுவரை அமெரிக்காவும் ஜி-7 குழுவின் நாடுகளும் உலக அளவில் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் உண்மையில் தலைமைப் பண்பை வெளிப்படுத்தவில்லை.
  • அமெரிக்கத் தடுப்பூசித் தேசியம் என்பது தடுப்பூசிகளையும் அவற்றைத் தயாரிப்பதற்கான கச்சாப் பொருட்களையும் அமெரிக்கா பதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாகும்.
  • இதனால், பிற நாடுகளில் தேவையற்ற இறப்புகள் நேர்வதுடன் கரோனாவின் பிடியிலிருந்து அமெரிக்கா விடுபடும் வேகத்தையும் அது குறைத்துவிடும்.
  • “இது ஜி-7 நாடுகளின் மாபெரும் தார்மீகத் தோல்வி. வேறு எதையும் பார்க்க முடியாதவாறு நாம் நமது சொந்தப் பிரச்சினையிலேயே மூழ்கிக்கிடக்கிறோம்” என்றார் நோபல் பரிசு பெற்ற பொருளியலர் எஸ்தர் டுஃப்லோ.
  • ஏழை நாடுகளில் உருவாகும் வேற்றினங்கள் காரணமாக, “இது பெரிய தோல்வி மட்டுமல்ல; இது மறுபடியும் வந்துவிடாமல் நம்மை வாட்டப்போகிறது என்று நினைக்கிறேன்” என்கிறார் டுஃப்லோவின் கணவரும் அவருடன் சேர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளியருமான அபிஜித் பானர்ஜீ.

மனித குலத்தின் செல்திசை

  • இது முதன்மையாக, பணத்தைப் பற்றிய பிரச்சினை இல்லைதான். இது உயிர்கள் தொடர்பானது. மனித குலத்தின் செல்திசை பற்றியது.
  • ஆனால், லாபக் கணக்குக்கு ஏற்ப தங்களின் அறவுணர்வை வெளிப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்காக, பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (International Monetary) புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில எண்களைத் தருகிறது.
  • ஏழை நாடுகளின் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் இப்போது 5,000 கோடி டாலர்கள் முதலீடு செய்து பெருந்தொற்றை முன்னதாகக் கட்டுப்படுத்தினால் 2025-க்குள் அசத்தலான 9 லட்சம் கோடி டாலர் அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் கணக்கிட்டிருக்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டுக்கும் 267% என்று நான்கு ஆண்டுகளுக்கும் இதனால் லாபம் கிடைக்கும் என்று சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
  • இதுவே தனியார் பங்குகள் என்றால் ஆண்டுக்கு 11% லாபம்தான் கிடைக்கும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று கூறுகிறது. உலக அளவில் தடுப்பூசிகளில் செய்யும் இந்த முதலீடானது “நவீன வரலாற்றில் பொதுத் துறையில் செய்யப்பட்ட முதலீடுகளிலேயே மிகவும் அதிகமானது” என்று பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகிறார்.
  • இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 40%, பேருக்கும் 2022-ன் முதல் பாதிக்குள் குறைந்தபட்சம் 60% பேருக்கும் தடுப்பூசி போடுவதுதான் இலக்கு.
  • பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தின் மூலம் செல்வந்த நாடுகளுக்குப் பொருளாதாரரீதியில் அதிக பலன் கிடைக்கும் என்றும், கூடுதலாக ஒரு லட்சம் கோடி டாலர்கள் வரி வருவாயாகக் கிடைக்கும் என்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் கணக்கிட்டுள்ளது.
  • சுருக்கமாகச் சொல்வதென்றால், கூடுதல் வரி வருவாயில் மட்டும் இந்தத் தடுப்பூசி இயக்கத்தால் பல மடங்கு பலன் கிடைக்கும்.

எதிர்கொள்ளும் சவால்கள்

  • நம் இனத்தின் நல்வாழ்வு தற்போது ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. பல தசாப்தங்களாக, மனிதர்கள் கடுமையான வறுமை, கல்வியறிவின்மை, நோய்கள், பார்வையின்மை, பசி பட்டினி போன்றவற்றுக்கு எதிராகக் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தைப் பெற்றிருந்தார்கள்.
  • ஆனால், கரோனா வைரஸ் காரணமாக நாம் மறுபடியும் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம். குறைந்த வருமானப் பிரிவில் உள்ள நாட்டை வைரஸானது சூறையாடும் போது, இளம் பெண்களின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
  • வைட்டமின் ஏ ஊட்டம் தவிர்க்கப்பட்டு அதனால் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு மேலும் அதிகமாகப் பார்வையிழப்பும் இறப்பும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதில்லை என்பதால், அவர்கள் உண்ணும் உணவு அவர்களுடைய உடல்களுக்கோ மூளைகளுக்கோ ஊட்டம் அளிக்காமல் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகளுக்கு ஊட்டம் அளிக்கிறது.
  • இதனால், அவர்கள் சோகையாகவும் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாகவும் ஆகிறார்கள்.
  • பெண்களுக்குக் கருத்தடை சாதனங்களோ மகப்பேறு சிகிச்சையோ கிடைப்பதில்லை; சிலர் பிரசவத்தின்போது இறந்துபோகிறார்கள் அல்லது பிரசவத்தோடு தொடர்புடைய யோனி வாய்ப் புரைப்புண்கள் (fistula) ஏற்படுகின்றன.
  • இது எல்லாமே உலகளாவிய ஏற்றத்தாழ்வை அதிகரித்துவிடுவதாக அச்சுறுத்துகின்றன. “உலகின் பெரும்பான்மைத் தடுப்பூசிகளை உருவாக்கவும் வாங்கவும் செய்யும் சில நாடுகள் ஏனைய நாடுகளின் விதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டேட்ரோஸ் அதானம் கேப்ரியேஸஸ்.
  • “தடுப்பூசியில் காணப்படும் தற்போதைய ஏற்றத்தாழ்வானது மிக மோசமான அநீதியாகும், இது பெருந்தொற்றை மேலும் நீடிக்கச் செய்கிறது. உலகில் உள்ள 75%-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளையெல்லாம் வெறும் 10 நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன” என்கிறார் அவர்.
  • ஜாம்பியா, சூடான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் 1%-க்கும் குறைவானவர்களே குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கான நல்வாய்ப்பு

  • பல நாடுகளின் அதிபர்களும் பிரதமர்களும் தங்கள் குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவது புரிந்துகொள்ளப்படக் கூடியதே.
  • ஆனால், கையிருப்பு அதிகமாகும்போது கரோனாவை எதிர்த்து அமெரிக்கா உலக அளவில் போரிட வேண்டும் – இதுதான் சரி என்பதால் மட்டுமல்ல; அமெரிக்காவின் நலனுக்கும் இதுதான் நல்லது. ஜாம்பியாவில் காணப்படும் வைரஸைப் புறக்கணித்தால் அது பல்கிப் பெருகி அமெரிக்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  • ட்ரம்ப் அதிபராக இருந்தபோது, சிதைந்துபோன நல்லெண்ணத்தையும் மெல்லதிகாரத்தையும் மறுஉருவாக்கம் செய்யும் விதத்தில் தடுப்பூசி முன்னெடுப்பை அமெரிக்கா மேற்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்; இதன் மூலம் நவம்பரில் நடக்கக்கூடிய பருவநிலை மாற்றத்துக்கான ஐநாவின் மாநாட்டில் அமெரிக்காவுக்கு அனுகூலங்கள் ஏற்படலாம்.
  • வெளிப்படையாகவே, பன்னாட்டுச் செலாவணி நிதியம் தரும் எண்கள் மீது எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கை இருக்கிறது. ஏனெனில், அவை மிகவும் கடினமான ஊக மதிப்பிடல்களை அடிப்படையாகக் கொண்டவை.
  • சர்வதேசத் தடுப்பூசி முன்னெடுப்பான கோவேக்ஸ் எங்கெல்லாம் இந்தத் திசையில் முன்னேற்றம் ஏற்படுவது கடினமாக இருக்கிறதோ அங்கெல்லாம் மிகுந்த தீரத்துடன் பணியாற்றுகிறது.
  • தெற்கு சூடான் நாட்டில் 59 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுவதற்கு முன்பே அவை காலாவதியாகி விட்டன.
  • பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் மதிப்பீடுகளுக்கும் நிஜமான பலன்களுக்கும் பெருத்த இடைவெளி இருந்தாலும், 9 லட்சம் கோடி டாலர்களாக இல்லாமல் 90 ஆயிரம் கோடி டாலர்களாக இருக்கும் என்றாலும் – 5 ஆயிரம் கோடி டாலர்களைவிட இது 18 மடங்கு அதிகமாகும். மேலை நாடுகள் இதை இழக்கலாகாது.
  • ஜி-7 நாடுகளில் அமெரிக்காவின் தலைமையை நிலைநாட்டவும் அதன் மூலம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நன்மை ஏற்படவும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பைடனுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்