TNPSC Thervupettagam

அன்பைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவோம்!

November 24 , 2024 5 days 34 0
  • வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கியபோது, அதை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் தன் சகா ஜான் கோமினிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்: ‘நமது செயலியில் விளம்பரங்களுக்கு இடமில்லை. விளையாட்டுகளுக்கு இடமில்லை. வீண் வித்தைகளுக்கும் இடமில்லை. நம் நோக்கம் நல்ல தகவல்களின் பரிமாற்றத்துக்கே’. ஆனால், வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தையும் தாண்டி இன்று வன்மத்தை, புரட்டுகளைக் கட்டவிழ்த்துவிடும் இடமாக மாறிவிட்டது.
  • சமூக ஊடகங்கள் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் பயனர்களின் வசதிக்காகவும் தேவைகளுக்காகவும் உருவாக்குகின்றன. சில பயனர்கள் அதை வன்மத்துக்காகவும் வக்கிரங்களுக்காகவும் பயன்படுத்துவது இப்போது அதிகரித்துவிட்டது. முதன்முதலில் சமூக ஊடகங்களில் தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளைப் புனைந்து தயாரிக்கும் பணியைச் சில அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருந்தன. இப்போது அவர்களுடைய புரட்டுப் பிரச்சாரங்களுக்கு இணையாக வன்மங்களை, புனைவுத் தகவல்களை உருவாக்கவும் பரப்பவுமான கலாச்சாரம் சாதாரண மக்களிடம் பரவிவிட்டது.
  • மனிதர்களுக்கு உளவியல்ரீதியான குணம் ஒன்று உண்டு. அவர்களுக்கு எப்போதும் இரண்டு அணிகள் தேவைப்படுகின்றன. ஒன்றுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்திச் சொற்போர் நடத்துவது நமக்குப் பிரியமான பொழுதுபோக்கு. தொலைக்காட்சி அலைவரிசைகளைத் திருப்பிக்கொண்டே வரும்போது ஏதோ ஒரு அலைவரிசையில், ஏதோ இரண்டு அணிகள் கால்பந்து ஆடிக்கொண்டிருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.
  • அவை எந்த நாட்டைச் சேர்ந்த அணிகள் என்பதுகூடத் தெரியாமல் போகலாம். ஒன்று, சிவப்புச் சட்டை அணி மற்றது வெள்ளைச் சட்டை அணி என்று வைத்துக்கொள்வோம். தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தால், பதினோராவது நிமிடம் ஏதோ ஒரு அணியை நம் மனம் ஆதரிக்க ஆரம்பித்துவிடும். அதற்கு அவர்கள் போட்டிருந்த சட்டையின் நிறம், அவர்களின் முகம் என ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். ஆனால், நிச்சயம் அப்படி ஒரு ஆதரவாளனாக மாறிவிடுவோம்.
  • அதன் பிறகு, அதற்கு எதிராக விளையாடும் அணி தோற்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள் நம்மை அறியாமல் தோன்றிவிடும். இந்த மனநிலையைத்தான் நம்மிடம் ஆதாயம் பெற நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தக் கட்சிக்கு எதிராக அந்தக் கட்சி, இந்த நடிகருக்கு எதிராக அந்த நடிகர், இந்த விளையாட்டு வீர்ருக்கு எதிராக அந்த விளையாட்டு வீர்ர் என்று இரண்டு தரப்பை நம்முன் திட்டமிட்டு நிறுத்துகிறார்கள். இந்த விளையாட்டில் நம்மை அறியாமலேயே நாம் சிக்கிக்கொள்கிறோம். எதிர்நிற்றலின் பலிபீடங்களாக சமூக வலைதளங்கள் ஆகிவிட்டன. பலியாவது நாம் என்று தெரியாமல் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டு இருக்கிறோம்.
  • அறிவியல் வீட்டுக்குள் நுழையத் தொடங்கிய பின்னர், மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவாகப் பிரிந்து போயினர். அவர்களுக்குள் பெரும் இடைவெளி உருவாகி. சமூக ஊடகங்கள் பெருகி எவரும் எழுதலாம் என்கிற நிலை வந்த பிறகு, ஒருவருக்கு எதிராக இன்னொருவர் சேற்றினை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டனர். திரைப்படங்களில், வலைக்காட்சித் தொடர்களில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகளைவிடக் காழ்ப்பு கொப்பளிக்கும் தகவல்களில் வன்முறை வரன்முறையின்றிக் கிடக்கின்றது.
  • வாட்ஸ்அப் செயலிக்கான பெயர் வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் கதாபாத்திரமான பக்ஸ் ஃபன்னி அடிக்கடி பயன்படுத்தும் ‘வாட்ஸ்அப்?’ (what’s up) என்கிற வசனத்தின் பாதிப்பில் உருவானது எனச் சொல்லப்படுகிறது. ‘என்ன நடக்கிறது?’ அல்லது ‘என்ன ஆச்சு?’ என்கிற நலம் விசாரிப்புக்கான சொற்பிரயோகம் அது. உண்மையில், சக மனிதர்களின் மீதான அன்பில், அக்கறையில் பகிர்ந்துகொள்ளவேண்டிய செய்திகளுக்காகத்தான் இச்செயலிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்று வாட்ஸ்அப் முழுக்க வன்மங்கள், காழ்ப்புகள். என்னதான் ஆயிற்று இந்த மனிதர்களுக்கு?

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்