TNPSC Thervupettagam

அன்றாடமும் இயற்கையும்

September 16 , 2024 122 days 105 0

அன்றாடமும் இயற்கையும்

  • அன்றாடம் என்பதே இயற்கையின் காலப்பரிமாணம் ஆகும். நினைவுச் சேகரம், அறிவுச் சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை மானுடம் உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
  • அன்​றாடம் என்றால் என்ன? அது பூமியின் சுழற்​சி​தான். அதனால் பூமியின் பெரும்​பாலான பகுதி​களில் இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. சூரியன் ஒரு முறை உதிப்​ப​திலிருந்து மறுமுறை உதிப்​பதுவரை ஒரு நாளாகப் புரிந்​து​கொள்​ளப்​படும். பூமி ஒருமுறை சுழன்று முடித்து​விட்டதை அது குறிக்​கிறது. கணிசமான உயிரினங்கள் இருளில் உறங்கும். சூரிய வெளிச்​சத்தில் இயங்கும். மனிதர்கள் குறிப்பாக அவ்விதம் பழக்கப்​பட்​ட​வர்கள். அதற்கு முக்கியக் காரணம், பகலில் வெளிச்சம் இருப்​பதால் இயங்குவது எளிது; இருளில் இயங்குவது கடினம் என்பதாகப் புரிந்​து​கொள்​ளலாம். ஒரு சில உயிரினங்கள் இரவில் அதிகம் இயங்கலாம்; வேறு சில இரவு, பகல் இரண்டிலும் இயங்கலாம் அல்லது இரவுக்கும் பகலுக்​குமான மாறுபாட்டை அறியாமல்கூட இயங்கலாம். நுண்ணுயி​ரி​களுக்கு இந்த வேறுபாடு புலப்​படாமல் இருக்கச் சாத்தியம் உண்டு.

இயற்கையோடு இயைந்த நியதிகள்:

  • மானுடச் சமூகங்​களில் விவசாயமும் வர்த்​தகமும் பெருகி பொருள் சேகரிப்பு என்பது தோன்றிய பிறகு, இருளின் பாதுகாப்பில் பொருள்​களைத் திருடு​பவர்​களும், திருடு​வதைத் தவிர்க்க இரவில் காவல் காப்பவர்​களும் தோன்றினார்கள். அதேபோல உடலுறவு தொடர்பான அந்தரங்​கத்​துக்கும் இருளும், பிறரின் உறக்கமும் அனுசரணை என்று கருதப்​பட்டன.
  • ‘நவராத்​திரி’ திரைப்​படத்தில் சிவாஜி குடித்து​விட்டு, ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம்’ என்று பாடுவார். இப்படியாக இரவினையும் பகலினையும் பகுப்பதில்தான் மானுடத்தின் அன்றாட வாழ்க்கை அடங்கி​யுள்ளது. ‘காலை எழுந்​தவுடன் படிப்பு, பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்​படுத்​திக்​கொள்ளு பாப்பா’ என்று பாரதி கூறும்​போது, எப்படி அன்றாட வழக்கங்​களால் வாழ்க்கை கட்டமைக்​கப்​படு​கிறது என்பது தெளிவாகிறது. அன்றாட வாழ்க்கை நியதிகள் இயற்கை​யுடன் இணைந்தவை.
  • மின்சாரம் புழக்​கத்​துக்கு வந்த பிறகு இரவைப் பகலாக்குவது எளிதாகி​விட்டது. பல அலுவல​கங்கள், தொழிற்​சாலைகளில் இரவும் பகலும் தொடர்ந்து மின்விளக்கு ஒளியில்தான் வேலை நடைபெறுகிறது என்பதால், அதில் வேறுபாடு எதுவும் இருக்​காது. நைட் ஷிஃப்ட் என்று இரவு நேரப் பணிக்கும் ஆட்களை வரவைத்து உற்பத்தி, வேலை தொடர்வதை உறுதி​செய்வது நிகழ்​கிறது. ஆனாலும்கூட இவ்வாறான இரவுப் பணிகளும் அன்றாட வாழ்வின் கட்டு​மானங்​களுக்​குள்தான் நிகழ்​கின்றன. உதாரணமாக, இரவில் உள்ளூர்ப் போக்கு​வரத்து என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கும் அல்லது முற்றிலும் இருக்​காது.

இயற்கைக் கட்டு​மானம்:

  • பெரும்​பாலானோர் இல்லங்​களில் உறங்கும், ஓய்வெடுக்கும் நேரமாக இரவு இருப்​ப​தால், பொதுவெளியில் நடமாட்டம் குறைவாக இருப்​ப​தால், இரவு நேரம் என்பது பெண்கள் பொதுவெளியில் நடமாடுவது இன்றைக்கும் பாதுகாப்​பானதாக இல்லை. ராமராஜ்யம் என்ற லட்சிய சமூகத்​துக்கு வரையறையாக, ‘எங்கே ஒரு பெண், ஆபரணங்கள் அணிந்து நடுநிசியில் அச்சமின்றிச் செல்ல முடிகிறதோ அதுதான் ராமராஜ்யம்’ என்று கூறப்​பட்டது. இன்றைக்கும் அப்படி இல்லாததால் நகரங்​களில் பெண்ணுரிமை இயக்கங்கள், ‘இரவைத் திரும்ப எடுத்​துக்​கொள்​ளுதல்’ (Take Back the Night) என்பது போன்ற நிகழ்வுகளை ஒருங்​கிணைக்​கின்றன.
  • எதற்காக இரவு, பகலைப் பற்றி இவ்வளவு கூறுகிறேன் என்றால், எத்தனையோ மாற்றங்​களுக்குப் பிறகும் பூமியின் அன்றாடச் சுழற்சி அமைக்கும் இயற்கைக் கட்டு​மானத்​தில்தான் நமது வாழ்க்கை நிகழ்ந்​து​கொண்​டிருக்​கிறது என்பதைக் கூறத்​தான். நமது உடலின் இயக்கங்​களும் சமூக இயக்கங்​களும் பெருமளவு இதனை அனுசரித்​துதான் அமைகின்றன.
  • மானுடம் இதற்கு வேறொரு பரிமாணத்தை வழங்கு​கிறது. அது என்னவென்றால் நாள்கள், கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் என அன்றாடத்தைத் தினசரி​யாக்கிக் காலக்​கோட்டில் தொகுக்​கிறது. பூமியின் சுழற்சி தொடர்ந்து நடைபெறும். ஆனால் செப் 12, 2024 என்ற தேதியும், இதை நான் தட்டச்சு செய்யும் காலை 10 மணி 3 நிமிடமும் மீண்டும் வராது. இந்தக் கணக்கீட்டில் நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் காலம் நேர்க்​கோட்டில் ஓர் அம்பு​போலப் பயணிக்​கிறது. சுழற்சி மறுதலிக்​கப்​படு​கிறது. அதிலும் குறிப்பாக, ஆண்டு​களுக்கும் எண்களைக் கொடுத்து, பொது ஆண்டு என்று ஒன்றைத் தேர்ந்​தெடுத்து (ஏசு கிறிஸ்து பிறப்பு) பொது ஆண்டுக்கு முந்தைய ஆண்டு, பொது ஆண்டு என்று ஒரு மானுட வரலாற்றுக் காலத்தை உருவாக்கி, இதனைக் குழந்தை​களுக்கும் பயிற்று​விக்​கிறோம். பொது ஆண்டு 2024இல் வாழும் நாம் 5,000 ஆண்டு​களுக்கு முன்வரையிலான மானுட வாழ்க்கைத் தடயங்​களைச் சேகரித்து வரலாற்றுக் காலமாகப் பயில்​கிறோம்.
  • இந்த வரலாற்றுக் காலங்களை உருவாக்கு​வதில் ஒட்டுமொத்த மானுடமும் இணைந்து பயணிக்க​வில்லை. ஆங்காங்கே விவசாயம், வர்த்​தகம், தொழில், அரசர்கள் என்று உருவான மையங்கள் காலப்​போக்கில் அச்சுத்​தொழில், பெருகும் வர்த்தகப் பரிமாற்றம், அறிவியல் தொழில்​நுட்ப வளர்ச்சி, இயந்திரங்​களின் பெருக்கம் என மாற்றம் கொள்ள, உலகின் பல பகுதி​களில் காடுகள், மலைகள், பாலைவனங்கள் போன்ற​வற்றில் பல மனித இனக்குழுக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்விலேயே தொடர்ந்தன. 20ஆம் நூற்றாண்டில் நவீன சமூக மனிதர்கள், அவ்வாறு இயற்கையோடு இணைந்​திருந்த ஆதிவாசி இனக்குழுக்​களிடையே சென்று அவர்கள் வாழ்க்கை முறையை ஆராய்வது மானுட​வியல் என்ற துறையாக அறியப்​பட்டது. இரண்டு விதமான காலப் பரிமாணங்​களின் சந்திப்​பாகவும் அந்த ஆய்வு​களைப் பார்க்​கலாம். ஒன்று வரலாற்றுக் காலம், மற்றொன்று அன்றாடம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்