அன்றாடமும் சமூக ஒழுங்குகளும்
- அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
- அன்றாடம் என்னும் இயற்கையின் காலப் பரிமாணத்தில்தான் மானுடம் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன என்றாலும், மானுடர்களின் நரம்பு மண்டலம் பெற்ற வளர்ச்சியின் காரணமாக அதன் நினைவுசேகரத்தின் ஆற்றல் அதிகரித்தது என்பதும், அதனால் தன்னையே விலகி நின்று பார்க்கும் சுய தன்னுணர்வும், பிற மானுடர்களுடன் அதனைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் கூட்டுத் தன்னுணர்வும் உருவாயின என்பதும் அடிப்படை மானுடவியல் கூறுகள்.
- தனது உயிரியல் மரணத்தை நோக்கிய வாழ்நாள் காலத்தினால் கவலை கொள்ளும் மானுட உயிரி, தனது தன்னுணர்வுச் சுயத்தை அன்றாடத்தின், முடிவிலியான இயற்கையின், அதன் உருவகமான கடவுளின் அங்கமாகக் கருதிக்கொள்வதா அல்லது மானுடக் கூட்டுச் செயல்பாட்டினால் சாத்தியமாகும் வரலாற்றுக்குப் பங்களிப்பதால், தன்னை வரலாற்றுக் காலத்தின் அங்கமாக்கிக்கொள்வதா என்பதே கேள்வி. இந்த இரண்டுக்கும் உள்ள உள்ளார்ந்த தொடர்பும் முக்கியமானது. எப்படி என்று பார்க்கலாம்.
- தன்னுணர்வின் காரணமாக மானுட வன்முறை பல வடிவங்களை எடுக்கலாம் என்பதால், சமூகங்கள் வன்முறையைத் தவிர்ப்பதற்காகப் பல விதிமுறைகளை, ஒழுங்குகளை உருவாக்கிக்கொண்டன. பெண்ணும் ஆணும் எப்படி இணைகளைத் தேர்ந்தெடுத்துப் பிள்ளை பெறுவது, அந்தப் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு யாருக்கு என்பன போன்ற விதிமுறைகள் முக்கியமானவை. மனிதன் மனம் போன போக்கிலே வாழக் கூடாது. சமூக நெறிகளைப் பின்பற்றி, பொது நன்மையை உத்தேசித்து வாழ வேண்டும் என்பதும் சமூக வாழ்வின் முக்கிய அடிப்படை.
- எம்.ஜி.ஆர். நடித்த ‘பணம் படைத்தவன்’ படத்தில் வாலியின் பாடல் ஒன்று பிரபலமானது. ‘கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ என்கிற அந்தப் பாடலின் பாயிர வரிகள் எப்படி நெறிமுறைகளை அனுசரித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துபவை. ‘மனிதன் போன பாதையை’ என்ற சொற்கள் பாடப்படும்போது, காந்தி ஒரு வளைந்து செல்லும் பாதையில் நடப்பது போன்ற ஓவியம் காட்டப்படும்.
- சரி, நெறிமுறைகளை அனுசரித்துப் பொது நன்மைக்காக வாழ்வதன் பலன் என்ன என்று கேட்டால், அது மரணத்துக்குப் பின்னும் நிலைக்கும் நற்பெயர் என்பதே விடை. ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்/ இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்பது அந்தப் பாடலின் இறுதி வரிகள்.
- அந்தப் பாடல் மேல்நாட்டு நாகரிகத்தை விமர்சிக்கும் பாடல் என்பதும் முக்கியம். அதில் எது நாகரிகம் என்ற கேள்விக்கான பதிலாக, ‘முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்’ என்ற பதில் கொடுக்கப்படும். இந்தப் பாடலில் பாதை, பயணம் என்கிற உருவகம் வரலாற்றைக் குறித்தாலும் நாகரிகம் என்பது பாரம்பரியம், அது முன்னோர்கள் சொன்னபடி வாழ்வதுதான் என்றும் கூறப்படுவதைக் காணலாம்.
- இதுதான் மானுடவியலின் முக்கியமான முரண். அன்றாடத்தின் மடியில் சமூக வாழ்வை நெறிப்படுத்த, ஒவ்வோர் இனக்குழுவும் சமூகமும் பல விதிமுறைகளை உருவாக்கிக்கொள்கின்றன. அந்த விதிமுறைகளை வலுப்படுத்த முடிவிலியின் உருவகமான கடவுளின் பேராலும், மதத்தின் பேராலும் நிறுவிக்கொள்கின்றன. அதேவேளை, ஒவ்வொரு நபரின் சுய தன்னுணர்வும் தன் முன் தேர்வுகளைக் காண்கிறது. ஒவ்வொருவரும் சுதந்திரமாகத் தேர்வுகளை மேற்கொள்ள சமூக விதிமுறைகள் குறுக்கே நிற்கும்போது அது பிரச்சினையாகிறது.
- ஆதிகால இனக்குழுச் சமூகங்களிலிருந்து இன்றுவரை விதிமுறைகளை அனுசரிக்காதவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள்; சமூகத்திலிருந்து வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இனக்குழு அல்லது மதத்தினர் தங்கள் விதிமுறைகளையே பிறரும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்கள் மேல் போர் தொடுக்கின்றனர். இவ்வாறாக மனிதர்களிடையே வன்முறையைத் தவிர்க்க உருவாகும் விதிமுறைகளே, இன, மத, மொழி, தேசிய அடையாளங்களாகி ஒட்டுமொத்த வன்முறைக்கு வித்திடுகின்றன.
- ஒரு சமூகம் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள உருவாக்கும் நெறிமுறைகளும்கூட உள்ளார்ந்த சமூக வன்முறையைக் கொண்டிருப்பதாக அமைந்துவிட முடியும். கிரேக்க, ரோமானியப் பண்பாடுகளில் மனிதர்களை அடிமையாக வைத்துக்கொள்ளும் முறை அனுசரிக்கப்பட்டது. மத்திய கால ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவத்தில் விவசாயிகள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டார்கள். மற்றொருபுறம் உயர்ந்த லட்சியங்களான கருணை, பொதுநன்மை, சேவை ஆகியவையும் வலியுறுத்தப்பட்டு வந்தன.
- மானுடத்தால் பிற உயிரினங்களைப் போல முழுமையாக இயற்கையின் அன்றாடத்தில் வாழ முடியாது என்பதால், அது காலாதீத சமூக ஒழுங்குகளைக் கட்டமைக்க முயன்றுகொண்டே இருக்கும் என்பதும் சமூக வாழ்வின் முக்கியமான பரிமாணம்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 11 – 2024)