TNPSC Thervupettagam

அன்றாடமும் சமூக வாழ்வும்

October 14 , 2024 97 days 91 0

அன்றாடமும் சமூக வாழ்வும்

  • அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுச் சேகரம், அறிவுச் சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
  • இயற்கைப் பெருவெளியின் காலம் என்பது பூமியின் சுழற்சி உருவாக்கும் அன்றாடமாக இருக்க, மானுட நாகரி​கங்கள் நேற்று, இன்று, நாளை என நேர்க்​கோட்டில் ஒரு வரலாற்றுக் காலத்தை மொழியில், எண்ணில், குறியீட்டு அளவைகளில் உருவாக்​கிக்​கொள்​வதைப் பார்த்​தோம். மானுடத் தன்னுணர்வு அன்றாடத்​திலிருந்து வரலாற்றுக் காலத்தை நோக்கிப் பயணிப்​ப​தற்கு இடையே மற்றொரு முக்கியமான காலப் பரிமாணத்தை, இருத்​தலியல் காலத்தை எதிர்​கொள்​கிறது.
  • அதுவே அதன் வாழ்நாள் காலம் எனப்படும் உயிரியல் காலம். தன்னைச் சுற்றி மரணங்கள் நிகழ்​வதைக் காணும்​போது, மனித உயிரி தன்னுடைய மரணமும் நிச்சய​மானது என்பதைப் புரிந்​து​கொள்​கிறது. அப்போது வாழ்தல் என்பது மரணத்தை நோக்கிய இருப்பாக மாறுகிறது. இயற்கைப் பெருவெளியும் தொடர்ந்து இருக்​கும், மானுட வரலாற்றுத் தொடர்ச்​சியும் இருக்​கும், தன்னுணர்வு கொண்ட சுயம் மட்டும் முற்றாக மரணத்தில் அற்றுப்​போகும் என்பதை ஏற்பது கடினமாக இருக்​கிறது.
  • ‘எது மாறாதது?’, ‘எது நிலையானது?’, ‘வந்தது தெரியும், போவது எங்கே?’ என்றெல்லாம் மொழியில் கேள்விகளை எழுப்​பிக்​கொள்ள நேர்ந்தது. இதற்கெல்லாம் விளக்கமாக நிரந்​தரமான, நித்தி​யமான, ஆதியும் அந்தமும் இல்லாத ஓர் ஆற்றலைச் சிந்திக்க நேர்ந்தது. அதற்குக் கடவுள், இறைவன், தெய்வம் எனப் பல பெயர்​களைக் கொடுத்துப் பலவிதமாக உருவகித்துப் பழகியது. ஒரு வகையில், தன்னையே விலகி நின்று காணும் மானுடத் தன்னுணர்வின் இன்றியமையாத உடன்பிறப்புதான் கடவுள் தத்துவம் எனலாம்.
  • இயற்கைப் பெருவெளியின் அன்றாடத்தைப் பற்றி எதுவும் நிச்சய​மாகக் கூற முடியாது. அதில் நிலவியல் மாறலாம், எரிமலைகள் வெடிக்​கலாம், நிலநடுக்கம் ஏற்பட்டு பூமித்​தளங்கள் நகரலாம், ஏன் சூரியனைச் சுற்றும் பூமியின் பாதையே மாறலாம். மானுட அனுபவத்தில் நாம் பூமியின் சுழற்சி ஓர் ஒழுங்கில் நிகழ்​வதைக் காண்கிறோமே தவிர, அதனுள் நாம் அறியாத எந்த இயற்கைப் பெருநிகழ்வும் நடக்கலாம்.
  • அதனால், அன்றாடத்தின் புலன் அனுபவ ஒழுங்​கையும் கடந்த ஒரு நித்தியமான ஆற்றலை, பேருண்மையை உருவகிப்பது தன்னுணர்வின் தேவையாக இருக்​கிறது. இதனால் அன்றாடத்தின் மீது நிரந்​தரம்​/​முடிவிலி என்கிற பரிமாணத்தை ஏற்றிக்​கொள்​கிறது. இப்போது மூன்று வகையான காலப் பரிமாணங்கள் சாத்தி​ய​மாகின்றன. ஒன்று, அன்றாட வாழ்வின் காலம்​/​முடி​விலிக் காலம். இரண்டு, வாழ்நாள் காலம் என்னும் உயிரியல்​/இருத்​தலியல் காலம். மூன்று, மானுடத் தன்னுணர்வு கட்டமைத்​துக்​கொள்ளும் வரலாற்றுக் காலம்.
  • இந்த காலப் பரிமாணங்​களின் வேற்றுமையில் மானுடத் தன்னுணர்வு தன்னை எப்படி வரையறுத்​துக்​கொள்வது என்பதில் சிக்கலைச் சந்திக்​கிறது. தன்னுடைய உடல் இயக்கத்தைச் சாத்திய​மாக்கும் உயிராற்றலை அது ஆன்மா என்று உருவகித்தது. தன்னுடைய தன்னுணர்வு சாத்தி​ய​மாக்கும் சிந்தனையை அது அறிவார்ந்த சுயமாக, தன்னிலை​யாகக் கருதிக்​கொண்டது. ஆன்மாவைக் கடவுள் என்கிற முடிவிலியி​லிருந்து பிரிந்து வந்த ஒன்றாகக் கருதிக்​கொள்ள முடிந்தது. ஆனால், மொழியில் ஒரு பெயரால் குறிப்​பிடப்​படும் தன்னுணர்வு கொண்ட சுயமும் அந்த ஆன்மாவும் ஒன்றுதானா என்பதை அவ்வளவு தெளிவாக முடிவுசெய்ய முடிய​வில்லை.
  • பெரியார் தன்னுடைய பிரகிரு​திவாதம் நூலில் சுட்டிக்​காட்​டியதுபோல, “என்னுடைய ஆன்மா சாந்தி​யடை​யாது” என்று ஒருவர் கூறுவது சாத்தி​ய​மாகும்​போது, என்/நான் என்கிற தன்னுணர்வு வேறு, ஆன்மா வேறு என்றாகிறது. வர்ண தர்மத்தில் ஒருவரது பாவ, புண்ணி​யங்​களுக்கு ஏற்ப ஆன்மா மறுபிறப்பு எடுக்கும் என்று கூறும்​போது, தன்னுணர்வு கொண்ட சுயத்தின் செயல்​களுக்கு ஆன்மாவை எப்படிப் பொறுப்​பாக்க முடியும் என்று பெரியார் கேட்கிறார்.
  • கவிஞர் கண்ணதாசனின் இரண்டு பாடல்கள் இந்த வேறுபாட்டைச் சுட்டு​கின்றன. ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்ற பாடலில் தன்னைக் காவியம் படைக்கும் கவிஞனாக, தன்னுணர்வு கொண்ட​வனாகச் சொல்லும்போது ‘நான் நிரந்​த​மானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று தன் படைப்பு, தன் வாழ்நாளைக் கடந்தும் நீடிக்கும் என்ற பொருளில் கூறுகிறார்.
  • ‘கர்ணன்’ படத்தில் கண்ணனின் கீதைக்குப் பதிலாக வரும் பாடலில், “மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்! மானிடர் ஆன்மா மரணமெய்​யாது, மறுபடி பிறந்​திருக்​கும்” என்று சொல்கிறார். அப்படி ஆன்மா மறுபடி பிறந்​தாலும் அது இறந்தவரின் தன்னுணர்வு கொண்ட சுயத்​துடன் பிறப்​ப​தில்லை என்பது நடைமுறை. முன் ஜென்ம நினைவுகள் குறித்த சுவாரசியமான கற்பனைகள், கதைகள், திரைப்​படங்கள் எல்லாம் உண்டு. ஆனால், அப்படி ஒரு தொடர்ச்சியை நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்ப​தில்லை.
  • உயிரியல் தொடர்ச்​சிக்கு மற்றொரு முக்கியமான வடிவம் இருக்​கிறது. அதுதான் பிள்ளை பெறுவது. ஆணும் பெண்ணும் இணைந்து கரு உருவாக்கிப் பிள்ளைகள் பெற்று​விட்​டால், அந்தக் குழந்தைகள் அவர்கள் மரணத்​துக்குப் பின்னும் அவர்கள் உயிரியல் தொடர்ச்​சியாக வாழ்வார்கள் என்பது மிகப் பெரிய ஆசுவாசம். இதிலும் என்ன சிக்கல் என்றால், எப்படித் நம்முடைய தன்னுணர்வு பெற்ற சுயத்தைப் பிள்ளை​களுக்குக் கடத்துவது என்பது​தான்.
  • தன்னுடைய தன்னுணர்வை, திறன்களை, ஆற்றல்​களைப் பிள்ளை​களுக்குக் கடத்திவிட வேண்டும் என்ற ஆசை மானுடத்தின் தீவிரமான ஆசைகளில் ஒன்று. ஆனாலும், பிள்ளைகள் அவர்களுக்கே உரிய தன்னுணர்​வுடனேயே வாழ்கிறார்கள் என்பதால், தொடர்ச்சியை நூறு சதவீதம் உறுதி​செய்ய முடிவ​தில்லை. எனவே, ஒருபுறம் அன்றாடம்​/​முடி​விலியை​யும், மறுபுறம் வரலாற்​றையும் பற்றிக்​கொண்டு தன்னுணர்வின் குறுகிய வாழ்நாள் காலம் பதற்றத்​துடன் தொங்கிக்​கொண்டு இருக்​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்