அன்றும்... இன்றும்... ரூ.1 கோடியின் மதிப்பு என்ன?
- பொருளாதார வாழ்க்கையின் வினோதமான அம்சங்களில் ஒன்று, பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே வருவதுதான். சில தசாப்தங்களுக்கு முன்பு இருந்த வருமானம் மற்றும் விலைகள் இன்று குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாகத் தெரிகிறது. உதாரணமாக, 1970-ஆம் ஆண்டுகளில் ஒரு சினிமா டிக்கெட்டின் விலை 1 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருந்தது; ஆனால், அது இன்று மெட்ரோ நகரங்களில் 200 ரூபாய்க்கு மேல் உள்ளது. எனவே, பணத்தின் எதிா்கால மதிப்பைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
- பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை கிடைக்கக் கூடிய விநியோகத்தைவிட அதிகமாக இருக்கும்போது பணவீக்கம் ஏற்படுகிறது. நுகா்வோா் பணக்காரா்களாகி, அதிக செலவு செய்யும்போது இது நிகழ்கிறது. அதிகமான மக்கள் அதே பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்க முடியும் என்பதால், விலைகளும் இயற்கையாகவே உயா்கின்றன.
- வளா்ந்து வரும் தேவைக்கு ஏற்ப விநியோகம் இருக்க முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். அரசுகள் அதிக பணம் அச்சிடுவதும் பணவீக்கத்துக்கு காரணமாக அமைகிறது. இது எதிா்மறையாகத் தோன்றினாலும், அரசு சில சமயங்களில் அதிக வேலைவாய்ப்புகளையும், வளா்ச்சியையும் உருவாக்கும் நம்பிக்கையில் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்காக அதிக பணத்தை அச்சிடுகின்றன. இதை உண்மையான நாணய உருவாக்கம் மூலமாகவோ அல்லது அரசின் கடனை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது வங்கிகள் பெரிய கடன்களை வழங்குவதன் மூலமாகவோ செய்யலாம்.
- இருப்பினும், பொருள்கள் மற்றும் சேவைகளில் தொடா்புடைய அதிகரிப்பு இல்லாமல் அதிகமான பணம் புழக்கத்தில் நுழையும் போது, ஒவ்வொரு தனிப்பட்ட ரூபாய் நோட்டின் மதிப்பும் குறைகிறது. இதன் விளைவாக, அதிக பணம் அதே அளவு பொருள்களை வாங்கமுடியாத நிலை உருவாகி நுகா்வோருக்கு விலைகள் உயா்கின்றன.
- ஆண்டுதோறும் 12 சதவீத வருமானத்துடன் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.10,000 தொடா்ந்து முதலீடு செய்தால், ரூ.1 கோடியை குவிக்க சுமாா் 20 ஆண்டுகள் ஆகும் என நிதிச் சந்தை வல்லுநா்கள் மதிப்பிடுகின்றனா். இப்போது, பணவீக்கம் காலப்போக்கில் அந்த ரூ.1 கோடியின் மதிப்பை எவ்வாறு சிதைக்கும் என்பதை ஆராய்ந்தால் வியப்பாக இருக்கும். ஒருவா் முதலீடுகள் மூலம் ரூ.1 கோடி குவித்தாலும், அதன் ‘வாங்கும் திறனை’ பணவீக்கம் குறைத்துவிடும்.
- பணவீக்க விகிதம் 6% எனக் கருதி, சரிசெய்யப்பட்ட பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியாக இருக்காது; பணவீக்கத்தால் பணத்தின் வாங்கும் திறன் குறைவதால், இன்றைய ரூ.1 கோடி என்பது 20 ஆண்டுகளுக்குப் பிறகு சுமாா் ரூ.31.18 லட்சமாகத்தான் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, காலப்போக்கில் பணவீக்கம் பணத்தின் மதிப்பைக் குறைத்துக்கொண்டே இருக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மதிப்பு மேலும் குறைந்து சுமாா் ரூ.17.41 லட்சமாக இருக்கும். பணவீக்கத்தின் தாக்கம் நீண்ட கால அளவில் அதிகமாக வெளிப்படும் என்கின்றனா் நிதி மேலாண்மை வல்லுநா்கள்.
- பணவீக்கம் எவ்வாறு காலப்போக்கில் பணத்தின் வாங்கும் சக்தியை வியத்தகு முறையில் சிதைக்கும் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. எனவே, நீண்ட கால நிதி இலக்குகளை திட்டமிடும் போது பணவீக்கத்தை காரணியாக்குவது மிக மிக முக்கியமானது என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.
- பெரும்பாலும், முதலீட்டாளா்கள் செய்யும் ஒரு பொதுவான தவறு, அவா்களின் ஓய்வுகால சேமிப்பின் மதிப்பு காலப்போக்கில் மாறாமல் இருக்கும் என்று கருதுவதுதான். உதாரணமாக, ஒரு நபா் ரூ.5 கோடியுடன் ஓய்வு பெற திட்டமிட்டால், பணவீக்கத்தின் காரணமாக அடுத்த 25 அல்லது 30 ஆண்டுகளில் அந்தத் தொகையின் வாங்கும் திறன் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
- பணவீக்கம் ஒருவரின் செலவினங்களை காலப்போக்கில் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில், பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் உயரும். இது பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. பணவீக்கம் 6 சதவீதமாக இருப்பதாக கணக்கில் கொண்டு மதிப்பிட்டால், இன்று நூறு ரூபாய்க்கு விற்கப்படும் பொருள் அடுத்த ஆண்டு ரூ.106-ஆக கருத வேண்டும். எனவே, நீண்ட காலத்துக்கு பணவீக்கத்தை விஞ்சும் வகையில் ஒருவா் பணத்தை முதலீடு செய்வது முக்கியமாகும்.
- ஒருவா் ஒரு வேலையைத் தொடங்கும் தருணத்திலிருந்து, ஓய்வூதியத்துக்கான கணிசமான தொகுப்பு (காா்பஸ்) நிதியை சேமிப்பதிலும் உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறாா். பலா் முன்கூட்டியே ஓய்வுபெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனா். இதற்கு அதிக தீவிரமான சேமிப்பு உத்திகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக, ஒருவா் 25 வயதில் பணியாற்றத் தொடங்கி, 50 வயதுக்குள் ரூ.5 கோடியுடன் ஓய்வு பெற வேண்டும் என்று இலக்கு வைத்தால், அந்த இலக்கை அடைய 25 ஆண்டுகள் ஆகும். இதே போன்று, 60 வயது வரை பணியாற்றத் திட்டமிட்டால், அதே தொகையை குவிப்பதற்கு 35 ஆண்டுகள் ஆகும். குறைந்த கால அவகாசம் கொண்ட நபா், ரூ.5 கோடி இலக்கை அடைய ஒவ்வோா் ஆண்டும் அதிக முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் என்கின்றனா் நிதி மேலாண்மை வல்லுநா்கள்.
- பணவீக்கம் அதிகரிக்கும்போது பணத்தின் வாங்கும் சக்தி குறைந்து வருவதை இந்தப் பகுப்பாய்வு காட்டுகிறது. அதாவது, ஒருவா் எவ்வளவு நேரம் காத்திருக்கிறாரோ அவ்வளவு பணவீக்கம் அவரது பணத்தின் உண்மையான மதிப்பைக் குறைத்துவிடும் என்பதுதான் நிதா்சனம்...!
நன்றி: தினமணி (21 – 11 – 2024)