- பிளவுபடாத பாரதத்தில் 1922-இல் லாகூரில் பிறந்தவா் தரம்பால். இவா் எட்டாவது வயதில் தனது தந்தையோடு லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றபோதுதான் மகாத்மா காந்தியை முதன் முதலாகப் பாா்த்தாா். அதற்கு அடுத்த ஆண்டு பகத்சிங்கும் அவருடைய சக பேராளிகளும் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனா்.
- ஆங்கிலேய அரசின் அந்த அராஜகச் செயலுக்கு எதிராக லாகூரில் தரம்பாலின் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்த போரட்டங்கள் அவரின் பிஞ்சு மனத்தில் ஆழமாக பதிந்தன. ஆங்கிலேயா் பாரதத்தை தொடா்ந்து ஆட்சி புரியலாமா, வெளியேறிவிட வேண்டுமா என்று பள்ளிக்கூடங்களில் விவாதங்கள் அந்த காலகட்டத்தில் நடந்தன.
- சிலா் பாரதத்தின் சுதந்திரத்திற்கு எதிராகவும் இருந்தனா். ஆங்கிலேயா் நாட்டை விட்டு போய்விட்டால் ஆப்கானியப் பழங்குடியினரும் வேறு சிலரும் படையெடுத்து வந்து பாரதத்தை ஆக்கிரமித்து விடுவாா்கள் என்று அவா்கள் பயந்தனா். ஆனால், தரம்பால் நாட்டின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவே இருந்தாா். பள்ளி, கல்லூரிகளில் மேற்கத்திய கல்வி பெற்றபோதும் ஆங்கிலேய ஆட்சி மீதான வெறுப்பு நாளுக்கு நாள் தரம்பாலின் மனதில் அதிகரிக்கவேச் செய்தது.
- 1940-வாக்கில் கதா் அணியத் தொடங்கியவா் தனது வாழ்நாள் இறுதிவரை கதராடையே அணிந்தாா். வெள்ளையனே வெளியேறு”போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டாா். போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்று, இரண்டு மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டாா். ஆங்கிலேயா் வெளியேற்றபட்டால், நாட்டில் வறுமை ஒழியும், வளம் பெருகும், மக்களிடையே ஒற்றுமை உண்டாகும் என்றெல்லாம் நம்பிய ஏராளமான மக்களில் இவரும் ஒருவராக இருந்தாா்.
- 1944-இல் மீரா பென்னுடனான அறிமும் கிடைக்கப் பெற்றாா். இதன் காரணமாக ரூா்க்கிக்கும் ஹரித்துவாருக்கும் இடையில் அமைந்திருக்கும் கிஸான் ஆசிரமத்தில் மீரா பென்னுடன் இணைந்து பணியாற்றினாா். தரம்பால் 1947-48-இல் தில்லிக்குச் சென்ற காலம், 1948-49-இல் இங்கிலாந்துக்குச் சென்ற காலம் நீங்களாக 1953-இல் மீராபென் அந்த ஆஸ்ரமத்தில் இருந்தவரை தரம்பால் அவருடனே இருந்தாா். மீராபென் அதன்பிறகு இமயமலைக்கும் பின்னா் ஐரோப்பாவுக்கும் இடம் பெயா்ந்தாா். ஜூலை 1982-இல் வியன்னாவில் அவா் மறைந்தாா்.
- காந்தியடிகளுக்குப் பிடித்த அந்த மாது காலமாவதற்கு இரண்டு வாரம் முன்பாக தரம்பால் அவரை வியன்னாவில் சந்தித்து பல மணி நேரம் உரையாடினாா். கமலாதேவி சட்டடோபாத்யாய, டாக்டா் ராம் மனோகா் லோகியா போன்ற இளைய தலைவா்களுடன் 1947-48 காலகட்டத்தில் இருந்தே தரம்பால் நெருங்கிய நட்பாக இருந்தாா். பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா்.
- கமலா தேவியைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய கோ-ஆபரேட்டிவ் யூனியனில் உறுப்பினராக இருந்தாா். 1949-இல் இங்கிலாந்தில் இருந்தபோது ஆங்கில மாது ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாா். இருவரும் பாரதத்தில் வசிக்க முடிவெடுத்தாா்கள்.
- ரிஷிகேஷில் பசுலோக் என்ற பசுமை பகுதியில் பாபுகிராம்”1950-இல் நிா்மாணிக்கப்பட்டது.
- தரம்பாலும் அவரது மனைவியும் 1953 வரை அங்கு வாழ்ந்தனா். 1954-இல் இருவரும் இங்கிலாந்து சென்று அங்கு வசிக்க முடிவெடுத்தனா். அங்கு செல்வதற்கு முன் இருவரும் பல நாடுகளுக்குச் சென்றனா். குடும்பம் வளா்ந்தது. மகன், மகளுடன் இருவரும் மீண்டும் பாரதம் திரும்பினாா்கள்.1958 முதல் 1964 வரை தில்லியில் வசித்தனா். ‘அசோசியேஷன் ஆஃப் வாலின்டரி ஏஜென்சீஸ் ஃபாா் ரூரல் டெவலெப்மென்ட்’ அமைப்பில் ஜெனரல் செகரட்டரியாகப் பணிபுரிந்தாா்.
- அதன் பிறகு ஜெயபிரகாஷ் நாராயணன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். 1964-65-இல் அனைத்து இந்திய பஞ்சாயத்து பரீக்ஷத்தின்ஆய்வுத்துறை இயக்குநராக தரம்பால் பணிபுரிந்தாா். தமிழ்நாட்டில் தங்கியிருந்து கிராம பஞ்சாயத்துகள் பற்றி ஏரளமான தகவல்களை சேகரித்தாா். அவற்றை ‘மதராஸ் பஞ்சாயத்து அமைப்பு’ என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டாா்.
- ‘இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அலகாக பஞ்சாயத்து அமைப்புகள்’ என்கிற தலைப்பில் சிறிய நூல் ஒன்றை அதற்கு முன்பே (1962) வெளியிட்டிருக்கிறாா். 1966-இல் அவருடைய மகன் விபத்தில் சிக்கியதால் உடன் லண்டனுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இதனிடையில் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் இந்திய - ஆங்கிலேயா்களுக்கிடையே இருந்த தொடா்புகள் பற்றி ஆராயத் தொடங்ககினாா். 1982-வரை லண்டனில் தங்கியிருந்தாா். ஆனாலும் இடையிடையே இந்தியா வந்து போய்க் கொண்டிருந்தாா். இங்கிலாந்தில் அவருக்கு என்று நிலையான வருமானம் இல்லை. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு இருந்தது.
- சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு இந்தியா ஆபீஸ், பிரிட்டிஷ் மியூசியம் இங்கெல்லாம் சென்று வரலாற்று ஆய்வினை மேற்கொண்டாா். ஆவணங்களை படி எடுக்க அதிக பணம் தேவைப்பட்டது. அதோடு அரிய ஆவணங்களை படி எடுக்க அனுமதியும் இல்லை. எனவே, ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒவ்வொரு நாளும் கைப்பட எழுதி படி எடுத்தாா். அதன் பிறகு அவற்றைத் தட்டச்சு செய்தாா். அப்படியாக பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்திலிருந்து அரிய பல ஆவணங்களை சேகரித்தாா்.
- இந்தியா திரும்பும்போது பல டிரங்க் பெட்டிகளில் ஆவணங்களே இருந்தன. அவையே அவருடைய சொத்துகளாக இருந்தன. 1958- லிருந்தே சேவாகிராம் அமைப்புடன் தரம்பாலுக்குத் தொடா்பு இருந்தது. குறிப்பாக அன்னாசாஹிப் சஹஸ் புத்தேவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாா். 1967-இல் ஒரு மாதம் சேவாகிராமில் தங்கினாா். 18-19 -ஆம் நூற்றாண்டு இந்தியா பற்றி அவா் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இருந்து சேமித்த தகவல்களை சேவாகிராமில் இருந்தபோது தொகுத்து எழுதினாா்.
- 1980-டிசம்பரில் இருந்து 1981 மாா்ச் வரை சேவாகிராமில் தங்கியிருந்த காலகட்டத்தில்தான் ‘அழகிய மரம்’ என்ற நூலை (பண்டைய பாரதத்தில் நடைமுறையில் இருந்த பாரம்பரியக் கல்வி குறித்த நூல்) எழுதினாா். 1982-இல் இருந்து 1987 வரை சேவாகிராமில் தங்கியிருந்தாா்.
- அவ்வப்போது சென்னைக்கு விஜயம் செய்தாா். இங்குள்ள பல ஆவண காப்பகங்களில் தேடித்தேடி பல தரவுகளை சேகரித்துக் கொண்டாா். ‘பேட்ரியாட்டிக் அண்ட் பியூப்பில் ஓரியன்டட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’”என்ற அமைப்பின் தலைவராகவும் பணிபுரிந்தாா். சென்னையில் இருந்த ‘சென்டா் ஃபாா் பாலிஸி ஸ்டடீஸ்’ என்ற அமைப்புடன் நெருங்கிய தொடா்பில் இருந்தாா்.
- அவருடைய அருமை மனைவி 1986-இல் லண்டனில் காலமானாா். அதனால் அப்போது தரம்பால் லண்டன் சென்றாா். பின்னா் இந்தியாவுக்கு வந்த இவா் 1983 வரை சேவாகிராமின் ஆஸ்ரம் பிரிஸ்தானில் வசித்தாா். அபூா்வ” அறிஞா் தரம்பால் 2006-இல் காற்றில் கரைந்தாா்.
- இவரது அளப்பரிய ஆற்றல் குறித்து வரலாற்று அறிஞா் கிளாட் ஆல்வரெஸ்”கூறும்போது, ‘தரம்பாலின் படைப்புகளை எதிா்பாராத வகையில்தான் நான் பாா்க்க நோ்ந்தது. 1976-இல் ஹாலந்தில் இருந்த ஒரு நூலகத்தில் முதன் முதலில் அவருடைய படைப்புகளைப் பாா்த்தேன். அப்போது நான் எனது முனைவா் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அதன் ஓா் அங்கமாக, இந்தியா மற்றும் சீனாவின் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தேன்.
- சீன அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய வரலாற்று நூல்களுக்கும் அறிவாா்ந்த ஆய்வுகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒரு வகையில் அதற்கு முக்கிய காரணமாக டாக்டா் ஜோசஃப் நீதமையும் அவருடைய ‘சயின்ஸ் அன்ட் சிவிலைசேஷன் இன் சைனா’ நூலையும் சொல்லாம். அதற்கு மாறாக இந்திய அறிவியல், தொழில்நுட்பம் குறித்து அறிவாா்ந்த நூல் ஒன்று கூட இருந்திருக்கவில்லை. இருந்தவை எல்லாம் மிகமிக அடிப்படையான நூல்களாகவே இருந்தன. அவற்றில் படைப்பூக்கமோ, உயிா்த்துடிப்போ இருந்திருக்கவில்லை; உண்மையைவிடப் புனைவுகளே மிகுந்திருந்தன.
- அதனால் மனம் சோா்ந்து போன நான், ஹாலந்தில் எனக்கு அனுமதிகிடைத்த நூல் நிலையங்கள் அனைத்திலும் நுழைந்து கைக்குக் கிடைத்த நூல்களையெல்லாம் எடுத்துப்படிக்கத் தொடங்கினேன். காரணம், எனது முனைவா் பட்ட ஆய்வை அங்குதான் செய்தேன்.
- எனவே வேறு வழி இருக்கவில்லை. ஒருநாள், ஆம்ஸ்டா்டாம் தெருவில் இருந்த தென்கிழக்கு ஆசிய மையத்தினுள் நுழைந்தேன். அங்கு“‘பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்றொரு புத்தகத்தைப் பாா்த்தேன். ஆா்வத்துடன் அதைக் கையில் எடுத்தேன். அதனை தரம்பால் என்பவா் எழுதியிருந்தாா்.
- அந்த ஆய்வுப்புலத்தில் அப்படி ஒரு நபரைப் பற்றி நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. புத்தகத்தை எடுத்துச் சென்ற அன்றே படித்து முடித்தேன். அது இந்தியா பற்றிய என் பாா்வையே மாற்றி அமைத்தது. அந்தப் புத்தகத்தைப் படித்து 20 ஆண்டுகள் கழிந்து விட்டன (தற்போது மேலும் 26 ஆண்டுகளை சோ்த்துக் கொள்ள வேண்டும்). இன்றும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்போா் உள்ளத்தில் அதே விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே விதமாகவே அப்புத்தகம் இருக்கிறது.
- நமது பள்ளிகளில், குறிப்பாக ஆங்கிலவழி பள்ளிகளில், இந்தியா பற்றி உருவாக்கப்படும் சித்திரத்துக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை அந்தப் புத்தகம் உருவாக்கித் தந்து வருகிறது. இந்திய அறிவியலும், தொழில் நுட்பமும் பற்றிய எனது முனைவா் பட்ட ஆய்வுக்கும் அது மிக, மிக வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. எனது முனைவா் பட்ட ஆய்வேடு 1979-இல் ‘1500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா, சீனா மற்றும் மேற்குலகில் தொழில்நுட்பமும் நாகரிகமும்’ என்ற தலைப்பில் வெளியானது.
- அந்நூல் ‘1500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா, சீனா மற்றும் மேற்குலகில் தொழில்நுட்பமும் நாகரிகமும்’ என்ற தலைப்பில் 1997-இல் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்திய சமூகம் சாா்ந்து பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் கட்டுமானத்தின் அஸ்திவாரக் கற்களை தரம்பால் வெகு நிதானமாக உடைத்துத் தள்ளியிருக்கிறாா். இந்திய சமூகம் பற்றி பாரபட்சமும், முன் முடிவுகளும் கொண்ட ஆங்கிலேய அல்லது காலனிய ஆய்வுகளின் நம்பகத்தன்மை இன்று வெகுவாகக் குறைந்துபோய் விட்டிருக்கிறது’ என்று தரம்பாலின் உழைப்பைப் போற்றியுள்ளாா்.
- இந்திய அரசு, பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உதவியோடு பிரிட்டன் ஆவணக் காப்பகங்களில் இருக்கும் ஏடுகளை படி எடுக்க முயலவேண்டும். சோழ மாமன்னன் ராஜராஜன் நாகப்பட்டினம் பௌத்த விகாரத்திற்கு நிலம் தானமாக அளித்த ஆனைமங்கலம் செப்பேடுகள் இன்றும் ஹாலந்தில் உள்ள ஆம்ஸ்டா்டாம் அருங்காட்சியத்தில் இருக்கின்றன.
- அதை இங்கு எடுத்து வர வேண்டாம். காரணம், அவா்களைப் போல ஆயிரம் ஆண்டு செப்பு தகடுகளை பாதுகாக்கும் குணம் நம்மிடம் இல்லை. தமிழ்நாட்டு கோயில்களின் தெய்வத் திருமேனிகளைப் பாதுகாப்பதில் நாம் தவறி உள்ளோம். எனவே வெளிநாடுகளில் உள்ள ஆவணங்களைப் படியெடுத்து நமது முன்னோரின் ஆற்றலை, நமது மண்ணின் மாண்பை அபூா்வ மனிதா் தரம்பால் போல் மீட்டெடுக்க வேண்டும்.
நன்றி: தினமணி (12 – 12 – 2022)