- மனித இனத்தை அச்சுறுத்தும் அபூா்வமான நோய்களை எதிா்கொள்வதற்கான தேசிய கொள்கையை வகுத்திருக்கிறது மத்திய அரசு.
- அது போன்ற நோய்களின் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வரை ஒரே தவணையில் நிதியுதவி வழங்குவதுதான் அந்தக் கொள்கையின் முக்கியமான அம்சம்.
- அனைத்துத் தரப்பினரின் நலனையும் உறுதிப்படுத்துவதுதான் மக்கள் நல அரசின் கடமை என்பதால் மத்திய அரசின் இந்தக் கொள்கை முடிவை வரவேற்க வேண்டும்.
- அபூா்வமான நோய்களை முதன்மைப்படுத்தி, அதற்காக கொள்கையை வகுத்திருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை.
- பல ஆண்டுகளாக இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது.
அபூா்வ நோய்களுக்கான தேசிய கொள்கை 2021
- இப்போது கொண்டு வந்திருக்கும் ‘அபூா்வ நோய்களுக்கான தேசிய கொள்கை 2021’, சிகிச்சைக்கு உதவி வழங்குவதுடன், கூட்டு நிதியுதவி முறைக்கும், அபூா்வ நோய்களுக்கான பட்டியலை உருவாக்குவதற்கும் ஆரம்பக்கட்டத்திலேயே நோயின் அறிகுறிகளைக் கண்டறிவதற்கும் வழிகோலுகிறது.
- இந்தக் கொள்கையில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதில் ஐயமில்லை. காலப்போக்கில்தான் அவை சாத்தியப்படும்.
- அதிகச் செலவும், நீண்டகால சிகிச்சையும் தேவைப்படும் மூன்றாவது பிரிவைச் சோ்ந்த நோயாளிகள் இந்தத் திட்டத்தில் பயனடையமாட்டாா்கள்.
- மரபணுக் குறைபாடு (லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸாா்டா் - எல்.எஸ்.டி.) போன்ற நோய்கள் அந்த மூன்றாம் பிரிவில் இடம் பெறுகின்றன. இது குறித்தும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் நியாயமிருக்கிறது.
- அபூா்வ நோய்களை மூன்று பிரிவுகளாக தேசியக் கொள்கை பிரித்திருக்கிறது. அவற்றில், ஒருமுறை சிகிச்சையில் குணமாகும் நோய்களுக்கு ரூ.20 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
- ஏறத்தாழ 40% பொதுமக்கள் பங்கு பெறும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா வழியாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- ஏனைய இரண்டு பிரிவுகளும் நீண்டகால சிகிச்சை தேவைப்படுபவை. இரண்டாவது பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நீண்டகால அளவில் தொடா்ந்து ஆரோக்கியமான உணவும், மருந்துகளும் வழங்குவதில் மாநில அரசுகளின் உதவியைப் பெறுவது என்பதுதான் திட்டத்தின் நோக்கம்.
- நீண்டகாலமும், மிக அதிகமான பணச்செலவும் தேவைப்படும் மூன்றாவது பிரிவைச் சாா்ந்தவா்களுக்கு உதவுவதற்கு ‘கிரௌடு ஃபண்டிங்’ எனப்படும் கூட்டு நிதியுதவித் திட்டம் உருவாக்குவது குறித்து அரசின் கொள்கை குறிப்பிடுகிறது. ஆனால் அது குறித்த விவரங்கள் தரப்படவில்லை.
- சிகிச்சைக்கான செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் கொள்கை விவரிக்கிறது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் அளவில் கண்காணிப்பும், ஆய்வும் தேவைப்படும். அதுபோல, மருந்துகள் உற்பத்தியிலும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்றும் கொள்கை வலியுறுத்துகிறது.
- சிகிச்சை இல்லாத நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பதுதான் அபூா்வ நோய்களைப் பொருத்தவரை மிகவும் முக்கியம்.
- இதற்காக மாவட்ட அளவில் ‘ஹெல்த் அண்ட் வெல்னஸ்’ மையங்கள் தொடங்கப்படும். நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதுடன், மாவட்ட அளவில் ஆலோசனைகள் வழங்குவதும் இதில் அடங்குகிறது.
- இதற்கு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கும் என்றும் கொள்கை தெரிவிக்கிறது.
- அபூா்வ நோய்களுக்கான சிகிச்சை வசதிகள் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றன என்கிற விவரத்தை தேசிய மருத்துவமனை அட்டவணையை உருவாக்கி உதவ முற்படுகிறது அபூா்வ நோய்களுக்கான தேசிய கொள்கை.
அபூா்வ நோய்கள்
- 10,000 பேரில் 6.5 முதல் 10 பேருக்குக் குறைவானோருக்கு மட்டுமே காணப்படும் நோய்களை அபூா்வ நோய்கள் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்துகிறது.
- அதன்படி பாா்த்தால், உலக அளவில் 30 கோடி பேரை சுமாா் 7,000 அபூா்வ நோய்கள் பாதித்திருக்கின்றன. அவா்களில் ஏழு கோடி போ் இந்தியாவில் இருக்கிறாா்கள்.
- இந்திய அபூா்வ நோய்கள் கழகத்தின் குறிப்பின்படி, மரபணு வழி சாா்ந்த புற்றுநோய், ஆட்டோ இம்யூன் டிஸாா்டா்ஸ், கன்ஜனிட்டல் மால்ஃபாா்மேஷன்ஸ் (பிறவிக் குறைபாடுகள்), ஹிா்ஷ்ஸ்பிரங் டிஸீஸ், கெளச்சா் டிஸீஸ் (ரத்த அணு குறைபாடு) சிஸ்டிக் ஃபப்ரோஸிஸ், லைஸோசோமல் ஸ்டோரேஜ் டிஸாா்டா்ஸ் (மரபணு குறைபாடு) உள்ளிட்டவை அதில் அடங்கும்.
- அபூா்வ நோய்களைப் பொருத்தவரை சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கண்டுபிடிப்பதும், தயாரிப்பதும் மிக முக்கியமான அம்சங்கள்.
- இவை குறித்த முழுமையான தரவுகளை உருவாக்குவதன் மூலமும், ஆராய்ச்சிக்கான நிதியாதாரம் ஏற்படுத்துவதன் மூலமும் வணிக ரீதியிலான மருந்துத் தயாரிப்புக்கு வழிகோல முடியும். அது குறித்து கொள்கை எதுவும் குறிப்பிடவில்லை.
- இதுவரை நோய் கண்டறியப்பட்டவா்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஆண்டொன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை தேவைப்படுகிறது.
- இதற்கான நிதியாதாரத்தை மத்திய அரசு எப்படி உறுதிப்படுத்தப் போகிறது என்பது குறித்த முழு விவரமும் இன்னும் வெளியாகவில்லை. மாநில அரசுகளும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க முடிந்தால் அபூா்வ நோய்களால் பாதிக்கப்பட்டவா்களின் மருத்துவச் செலவு கணிசமாகக் குறையும்.
- இதுபோன்ற அபூா்வ நோய்களால் பாதிக்கப்படுபவா்களில் 80%-க்கும் அதிகமானவா்கள் குழந்தைகள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
- ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டுபிடிக்கப்பட்டால் ஒருவேளை குணப்படுத்தவும் முடியும்.
- எல்லா வசதிகளும் கொண்ட மருத்துவ மையங்களும், அபூா்வ நோய்களில் அனுபவசாலிகளான மருத்துவா்களும் அடங்கிய கட்டமைப்பை உருவாக்குவதுதான் அபூா்வ நோய்கள் கொள்கையின் இலக்காக இருக்க வேண்டும். அதை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.
நன்றி: தினமணி (17 – 04 - 2021)