- பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி கைது நடவடிக்கையைக் கைவிட வேண்டித் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நண்பர்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினோம். அக்கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானதும் ஏராளமான கண்டனங்கள், வசைகள், வன்ம வெளிப்பாடுகள், அதிர்ச்சிகள், உணர்ச்சிவசங்கள் எல்லாம் வந்தன.
- நான் முதல் நாள் அவற்றை வெறுமனே கவனித்துக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் உணர்ச்சி வசமான (சென்டிமென்ட்) வெளிப்பாடுகள் சிலவற்றின் உருக்கத்தால் நிலைகுலைந்து முகநூலை விட்டுச் சில நாட்கள் வெளியேறினேன். முகநூலை விட்டு ஓடிவிட்டார், பயந்தாங்கொள்ளி என்றெல்லாம் பதிவுகள் வந்தனவாம். அவற்றை நான் காணவில்லை.
- நான் இந்த முறை வெளியேறியது நல்ல தெளிவுடன்தான். கருத்துரிமை பற்றித் தொடர்ந்து சிந்தித்துவருகையில் எழுதுவோர் உரிமை, மறுப்போர் உரிமை தொடர்பாக மட்டுமல்லாமல் வாசிப்போர் உரிமை தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஆழ உணர்ந்தேன்.
- பெரியார் தம் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் இந்த மூன்றாம் தரப்பை எப்போதும் கவனத்தில் கொண்டிருந்தார். 'மாதொருபாகன்' வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், புஷ்பா சத்தியநாராயணா அமர்வு இந்த மூன்றாம் தரப்பைப் பெரிதும் முன்னிறுத்திப் பேசியுள்ளது.
- மூன்றாம் தரப்பை ஒவ்வொரு துறைக்கும் தகுந்த மாதிரி பெயர் சூட்டி அழைக்கிறோம். எழுத்து சார்ந்த துறைகளில் வாசகர்; வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் நேயர்; திரைப்படத் துறையில் ரசிகர்; கலைத் துறைகளில் பார்வையாளர்; அரசியல் துறையில் மக்கள். அனைத்தையும் உள்ளடக்கிய சொல் ‘மக்கள்’ என்று சொல்லலாம்.
மூன்று தரப்புகள்
- எதை வேண்டுமானாலும் எழுதச் சுதந்திரம் வேண்டும் என்று எழுதுவோர் நினைக்கிறார்கள். எழுத்தில் உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தின் அடிப்படையில் அதை மறுக்க முயல்வோர் தமக்கு அதற்கான சுதந்திரம் வேண்டும் என்று கருதுகிறார்கள். இவ்விரு தரப்பும் விவாதிப்பதும் சண்டையிட்டுக் கொள்வதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. அரசு இவ்விரு தரப்பில் தம் கொள்கையை ஒட்டியோ சட்டம் ஒழுங்குப் பிரச்சினை காரணமாகவோ ஏதாவது ஒருதரப்பு சார்ந்து முடிவெடுத்துச் செயல்படுகிறது.
- அரசை விமர்சிக்கும் கருத்தாக இருப்பின் இரண்டாம் தரப்பாக மாறி அடக்குமுறையைக் கையாள அரசு தயங்குவதில்லை. கருத்துரிமையைப் பொருத்தவரையில் எந்த அரசும் நேர்மையானதல்ல. ஆனால், மூன்றாம் தரப்பு பற்றி யாரும் பெரிதாகக் கவனம் கொள்வதில்லை. ஒருவகையில் சொன்னால் மறுப்புக் கருத்துடைய இரண்டாம் தரப்பும் முதலில் மூன்றாம் தரப்புக்குள் அடங்கித்தான் இருக்கிறது. மறுப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதால் மூன்றாம் தரப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இரண்டாம் தரப்பாக மாறுகிறது.
- மூன்றாம் தரப்பை எழுத்துலகில் ‘வாசகர்’ என்று குறிப்பிடுகிறோம். இருப்பதிலேயே வாசகச் சுதந்திரம்தான் எல்லையற்றது. அதற்கு யாராலும் வரையறை கொடுக்க முடியாது. எல்லை வகுக்க இயலாது. சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பில்லை. தம் சுதந்திரத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பு முற்ற முழுக்க வாசகருக்கு இருக்கிறது.
- ஒரு புத்தகத்தை வாங்கலாம்; வாங்காமல் இருக்கலாம். வாங்கிய நூலை வாசிக்கலாம்; வாசிக்காமல் இருக்கலாம். கொஞ்சம் வாசித்துப் பிடிக்கவில்லை என்று சொல்லி வைத்துவிடலாம்; வீசியும் எறியலாம். கிழித்துப்போடலாம், எரிக்கலாம், பிறருக்குக் கொடுக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒருவர் எழுத்து பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்; சொல்லாமலும் இருக்கலாம். மனம் புண்படுகிறது, இழிவுபடுத்துகிறது என்று சொல்வோர் யாராலும் கட்டுப்பாடு விதிக்க இயலாத, இவ்வளவு என்று வரையறுக்க முடியாத இந்தச் சுதந்திரத்தைத் தாராளமாகப் பயன்படுத்தினால் கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் வரவே வாய்ப்பில்லை.
கைது என்னும் மிகை நடவடிக்கை
- சமூக ஊடகம் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகின்றது என்றாலும் மந்தைத் தனத்தையும் உருவாக்குகிறது. ஒரு விஷயத்தைச் சிலர் பரபரப்பாக்கும் விதத்தில் பதிவிட்டால் பிறர் தமக்கும் அதில் ஏதாவது பங்கிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்பிரச்சினையின் பரிமாணங்களை அறியாமலே, அதற்குரியவற்றைக் கவனம் எடுத்து வாசிக்காமலே முந்தைய பதிவுகளின் அடிப்படையில் அவற்றை ஒட்டிப் பதிவிடுபவர்களாக மாறி விடுகின்றனர். தனக்கு அந்தத் துறையில் ஈடுபாடு இருக்கிறதா, அது சார்ந்த அறிவு பெற்றிருக்கிறோமா, சுயமான கருத்து இருக்கிறதா என்றெல்லாம் யோசிப்பதில்லை. என்ன நடந்தது என்று தெரியாது, ஆனால் எல்லோரும் அடிக்கிறார்கள், என் பங்குக்கு நானும் ஓர் அடி அடித்துக் கொள்கிறேன் என்று சொல்வதுபோலத்தான்.
- கடிதம் எழுதியவர்களில் நானும் ஒருவன் என்பதை உண்மையிலேயே அங்கீகரிக்க இயலாத அளவு என் மீது பற்று கொண்டவர்கள் பலருண்டு என்பதை நானறிவேன். சொந்தக் காரணம் ஏதுமில்லாமல் வன்மம் கொண்டவர்கள் பலரும் உண்டு. தாம் நம்பும் கருத்துகளின் மேலுள்ள ஆழ்ந்த பற்றுடையோரும் உண்டு. அவரவர் நோக்கிலிருந்து தம் எண்ணங்களையும் சொற்களையும் பயன்படுத்திப் பதிவிடும்போது அவற்றால் என் மனம் சங்கடமுறுவதை அறிந்தேன். பிற பணிகளில் ஆர்வமற்றுப் போவதையும் ஏதோ ஒரு விரக்தி தோன்றுவதையும் உள்ளுக்குள் உணர்ந்தேன்.
- மனதைப் பாதிக்குமாறு எழுதுவோர் யாரென்று அறியாமல் இருப்பது நல்லது, அவற்றை வாசிக்காமல் விடுவதே ஆரோக்கியமானது என்று வாசகச் சுதந்திரத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தேன். தற்காலிகமாக வெளியேறும் வாய்ப்பை முகநூலும் வைத்திருக்கிறது. வாசகச் சுதந்திரத்தை அனுபவித்த காரணத்தால் உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தேன்; கலங்கிய மனநிலை தெளிவதற்கும் அது உதவியது. கருத்துகளைப் புறவயமாகப் புரிந்து கொள்ளவும் இயன்றது.
- அந்தக் கடிதம் இன்றைய திமுக ஆட்சியை ஆதரவானதாகக் கருதிக் கோரிக்கை வைக்கும் நோக்கில்தான் எழுதப்பட்டிருந்தது. ‘பத்ரி சேஷாத்திரியின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது’ என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு ‘எனினும் இத்தகைய செயலுக்குக் கைது என்பது மிகையான நடவடிக்கை என்றும் நமது அரசியல் சாசனம் வழங்கும் கருத்துரிமைக்கு மாறானது என்றும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்’ என்று தெரிவித்திருந்தோம். ‘கைது என்பது மிகையான நடவடிக்கை’ என்பது மனித உரிமை ஆர்வலர்கள், கருத்துரிமை பற்றிய அக்கறை கொண்டோர் எனப் பலரும் ஒத்துக்கொண்ட ஒன்று.
கைது சரியா?
- எழுத்தாளரும் வழக்கறிஞருமான ச.பாலமுருகன் ‘இந்தக் கைது தவறானது’ என்று பதிவிட்டிருந்தார். நாங்கள் எழுதியிருந்த கடிதத்தைப் பகிர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் ‘I support personally’ என்று கூறியிருந்தார். தம் வாழ்நாளை மார்க்ஸிய இயக்கத்திற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கும் என்றே அர்ப்பணித்தவர் அவர். முதல் முறையாகத் தன் தனிப்பட்ட கருத்து ஒன்றைப் பொதுவெளியில் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் கருத்துக்கு அவரது நியாயம் என்ன என்று கேட்கக்கூட மனமில்லாமல் அவர் மீது பலர் பாய்ந்தனர். தம் பதிவை அவர் நீக்க நேர்ந்தது மிகுந்த வருத்தத்திற்குரியது.
- இவ்வாறு கைது நடவடிக்கையைக் கண்டித்தோர் பலர். கருத்துரிமைக் களத்தில் தொடர்ந்து இயங்கிவரும் இவர்கள் யாரும் பத்ரியின் கருத்தைச் சிறிதும் ஏற்றோர் அல்ல. நாம் எதிர்க்கும் கருத்தாக இருப்பினும் அதைக் கூறுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது, கருத்துத் தளத்தில் அதை எதிர்கொள்ளலாம், சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்னும் பார்வையைக் கொண்டவர்கள்.
- நமக்கு உடன்பாடான கருத்தைக் கூறும் ஒருவருக்கும் இப்படியான கைது நடவடிக்கை வரலாம். எத்தகைய அரசாக இருந்தாலும் அதன் அதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதைக் கணிக்க முடியாது. ஆகவே, யாராக இருந்தாலும் ‘கைது கூடாது’ என்று சொல்வதே கருத்துரிமையைப் பாதுகாப்போர் நிலைப்பாடாக இருக்க முடியும். கட்சி சார்ந்தோர், ஆதரவாளர்கள் தம் கட்சி செய்யும் எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள். ஜனநாயகவாதிகள், சுதந்திரச் சிந்தனையாளர்கள் அப்படி இருக்க முடியாது.
- விருப்பமான கருத்தைக் கூறுவோர் பாதிப்படையும்போது கொந்தளித்துக் கருத்துரிமை பேசுவதும் எதிர்கருத்தைக் கூறுவோர் பாதித்தால் கொண்டாடுவது அல்லது அமைதி காப்பதும் அரசு இயல்பைப் புரிந்துகொள்ளாத தன்மையாகும். ஒரே அரசு வெவ்வேறு சூழல்களில் எப்படி நடந்துகொள்ளும் என்று சொல்ல முடியாது. அரசியல் சூழல் சார்ந்தே அதன் நடவடிக்கைகள் இருக்கும். தம் கொள்கைக்கு உடன்பாடான கருத்தைச் சொல்பவர் மீதுகூட அரசியல் அழுத்தம் காரணமாக ஓர் அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும்.
முத்திரை குத்தும் போக்கு
- சமீபத்தில் கவிஞர் விடுதலை சிகப்பி எழுதிய ஒரு கவிதை தொடர்பாக மதவாதிகள் அளித்த புகாரில் அவரைக் கைதுசெய்யக்கூடும் என்னும் அச்சம் நிலவியது. நீதிமன்றத்தில் அவர் முன்பிணை பெற நேர்ந்தது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் கைதைக் கண்டிக்க நேர்கிறது. கருத்துரிமை விஷயத்தில் கைதை எந்த நிலையிலும் ஆதரிக்கக் கூடாது என்பதே என் எண்ணம். எனினும் சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுகிய பிறகு கைதை இறுதியான நடவடிக்கையாக வேண்டுமானால் அரசு வைத்துக்கொள்ளலாம் என்பதை ஒருவாறு ஏற்கலாம்.
- கைதைக் கண்டிப்பதால் பத்ரியின் கருத்துகளை நான் ஏற்பதாகப் பாவித்துக்கொண்டு பேசுவோரைப் பற்றி என்ன சொல்வது? பத்ரியின் கருத்துகளில் எதையும் ஏற்பவன் அல்ல என்பதை என் எழுத்துகள், செயல்பாடுகளை மேலோட்டமாகக் காண்பவர்கூட அறிய முடியும்.
- 2022 அக்டோபரில் அறிஞர் அண்ணா குறித்துப் பத்ரி வெளிப்படுத்திய கருத்துக்களை ஒட்டி இரண்டு கட்டுரைகளை என் வலைத்தளத்தில் எழுதினேன்.
- ‘இந்தி என்னும் கொலைக்கருவி’ தலைப்பிலான முதல் கட்டுரை ‘ஆதிக்கத்தை எதிர்த்த அண்ணாவை அறிஞர் என்கிறோம் நாம்; முட்டாள் என்கிறது இந்துத்துவம்’ என்று முடிகிறது. இதற்கு எதிர்வினையாகப் பத்ரி எழுதிய ட்விட்டர் குறிப்புக்குப் பதிலளித்து ‘நான் முட்டாள்தான்’ என்றொரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை ‘அண்ணா படிக்கச் சொன்னார்; அதைக் கேட்டு அப்பா என்னைப் படிக்க வைத்தார். படித்தும் என்ன? நான் முட்டாள்தான். அதில் என்ன பெருமை? பெருமை இருக்கிறது, அண்ணா உருவாக்கிய முட்டாள் நான்’ என்று முடிகிறது.
- அப்போது இக்கட்டுரைகளை வாசித்துப் பாராட்டியோர், பகிர்ந்தோர் பலர் அதையெல்லாம் எளிதாக மறந்துவிட்டார்கள். சமூக ஊடகங்களில் ஏராளம் வந்து குவியும் சூழலில் மறதி இயல்புதான். ஆனால் இவற்றை எல்லாம் வாசிப்பதை ஒட்டி ஒருவரைப் பற்றிய மனப்பதிவு இருக்கும் அல்லவா? அதற்குக்கூட மதிப்பளிக்காமல் பத்ரியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவன் என்று என்னை எப்படி முத்திரை குத்த முடிகிறது?
- அண்ணா நூற்றாண்டின்போது அவரது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்துத் ‘தீட்டுத்துணி’ என்னும் தலைப்பில் நூலாக்கியிருக்கிறேன். அது பல பதிப்புகளைப் பெற்று இன்றுவரை விற்பனையில் இருக்கிறது. பெரியார் குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறேன். இவற்றை எல்லாம் எளிதாக மறந்துவிட்டுப் பத்ரியின் கருத்தை ஏற்கிறேன் என்று வசை பாட எப்படி முடிகிறது?
கருத்துரிமைக்கான குரல்கள்
- நான் மட்டுமல்ல, இந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டோர் அனைவரும் (அம்பை, பால் சக்காரியா, டி.எம்.கிருஷ்ணா, ஆ.இரா.வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம், ராஜன்குறை, ‘காலச்சுவடு’ கண்ணன் ஆகியோர்) தம்மளவில் கருத்துரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள் தான்.
- கருத்துரிமைக்காக டி.எம்.கிருஷ்ணாவின் குரல் ஒலிக்காத சந்தர்ப்பம் உண்டா? ‘காலச்சுவடு’ இதழில் கருத்துரிமை சார்ந்து தொடர்ந்து கவனப்படுத்தியதோடு ‘எது கருத்துரிமை?’ என்னும் தலைப்பில் நூல் எழுதியவர் கண்ணன்.
- கருத்துரிமைப் பிரச்சினைகளில் தம் கருத்தை முன்வைப்பதில் எந்தத் தயக்கமும் அற்றவர் ஸ்டாலின் ராஜாங்கம். இன்றைய திமுக அரசை ஆதரித்துத் தொடர்ந்து எழுதிவருபவர் ராஜன்குறை. அவர் கட்டுரைகளை ‘முரசொலி’ மறுவெளியீடு செய்துவருகிறது. இவர்களது எழுத்துககளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துவருபவர் எவரும் பத்ரியின் கருத்தோடு இவர்கள் உடன்படுவார்கள் என்று கருத எந்த நியாயமும் இல்லை.
- திராவிட இயக்க வரலாற்றாசிரியராக தேசிய அளவில் அடையாளம் பெற்றவரும், பல்லாண்டு காலம் ஆய்வுசெய்து ஆதாரப்பூர்வமாகப் பெரியார் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதிக் கொண்டிருப்பவருமான ஆ.இரா.வேங்கடாசலபதியைச் சிலர் ‘திராவிட இயக்க எதிரி’ என்று இன்று சித்திரிக்க முற்படுகின்றனர். இந்தப் பார்வை எங்கிருந்து வருகிறது?
- இந்த மாதிரியான விஷயத்தில் வலதுசாரிகள் கொண்டிருக்கும் கருத்தும் நடைமுறையும் வேறு. இடதுசாரிகள் கொண்டிருக்கும் கருத்தும் நடைமுறையும் வேறு.
- தம் அமைப்பு ஏதாவது ஒன்றில் சில காலம் வெறும் ஆதரவாளராக இருந்த ஒருவராயினும் பல்லாண்டுகள் பயிற்சி பெற்ற ஒருவராயினும் தம்மோடு முரண்பட்டு வெளியேறிவிட்டால், தமக்கு எதிராகப் பேசினால் வலதுசாரிகள் அவரைத் தம் எதிரியாக ஒருபோதும் கட்டமைத்துக் கொள்வதில்லை. எங்கிருந்தாலும் தம் கருத்தும் ஆதரவும் துளியேனும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் என்று நம்புகின்றனர். தம்மில் ஒருவராகவே எப்போதும் அவரைக் காண்கின்றனர்.
- தம்மோடு பல்லாண்டுகள் இணைந்து செயல்பட்ட தோழர் ஒருவர் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிறு முரண்பாடு கொண்டுவிட்டால் உடனே அவரைத் தம் எதிரியாகக் கட்டமைத்து வெளியேற்றி விடுவதில் வல்லவர்கள் இடதுசாரிகள். கட்சி நிலைப்பாட்டைச் சிறுவிமர்சனம் செய்துவிட்டாலும் போதும், அவர் எதிரியாகிவிடுவார். விமர்சனம், சுயவிமர்சனம் எல்லாம் தேவை என்பது பேச்சளவில் மட்டும்தான். ஒருவரை ‘வென்றெடுத்து’த் தம் ஆதரவாளர் ஆக்குவதற்குப் பெருங்கஷ்டப்பட்டிருப்பார்கள்; பல மணி நேரம், பல நாட்கள் செலவழித்திருப்பார்கள். ஆனால் உடன் செயல்பட்ட அவரை ‘எதிரி’ என முத்திரை குத்தி விலக்குவதற்கு ஒருநாள்கூடத் தேவையில்லை.
கம்யூனிஸ்ட்டுகளின் எதிரி யார்?
- சில ஆண்டுகள் இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவன் என்ற முறையிலும் இன்று வரைக்கும் ஏதோ ஒருவகையில் இணைந்து செயல்பட்டுவருபவன் என்னும் அடிப்படையிலும் இதைச் சொல்கிறேன். சில தோழர்களிடம் கடும் விமர்சனமாக இப்படிச் சொல்லியிருக்கிறேன், ‘கம்யூனிஸ்ட்டுகளுக்கு முதல் எதிரி முதலாளித்துவம் அல்ல, அவர்கள் விலக்கி அனுப்பும் தோழர்கள்தான்.’
- இடதுசாரிகளைப் போன்றதல்ல திராவிட இயக்கம். தி.க., தி.மு.க., அ.தி.மு.க. என்று முப்பெரும் இயக்கங்களிலும் தொண்டராக இருந்தவர் என் தந்தை. எம்.ஜி.ஆரைத் தலைவராக ஏற்ற காலத்திலும் கலைஞரின் கூட்டங்களுக்கு எங்களையும் அழைத்துச் செல்வார். கலைஞரைத் திட்டவென்று சில தனித்த வசைச்சொற்களை வைத்திருப்பார். ஆனால் ‘அவர் மாதிரி யாராலும் பேச முடியாது’ என்று சொல்லி அவர் பேச்சை ரசித்துக் கேட்பார்.
- அரசியல் தலைவர்களாயினும் தொண்டர்களாயினும் திமுக, அதிமுக என்று மாறிக் கொள்வதை யாரும் பெரும் பாதகமாகக் கருதியதில்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா செய்துகொண்ட சமரசம் என்பது எல்லோரையும் உள்ளடக்கும் அரசியலின் வெளிப்பாடுதான். வலதுசாரிகளை எதிர்ப்பதில் இன்று திமுக வலுவோடு இருப்பதற்குக் காரணம் அனைவரையும் உள்ளடக்கும் இந்த வெகுஜனத்தன்மையே.
- காலமெல்லாம் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் தம் எதிரியாகக் கருதிக் கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தவர்கள் இடதுசாரிகள். தேர்தலில் ஈடுபடும் மிதவாத இடதுசாரிகள், ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ என்று புறக்கணிக்கும் தீவிர இடதுசாரிகள் உள்ளிட்ட அனைவரும் இந்துத்துவத்தை எதிர்க்கும் நோக்கில் ஒன்றுபட்டுத் திராவிட இயக்கக் கொள்கைகளையும் பெரியாரையும் ஆதரிப்பவர்களாக இப்போது மாறியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் திராவிட இயக்கத்தின் கொள்கையாளர்களாகத் தம்மை முன்னிறுத்திக்கொள்கிறார்கள். திராவிட இயக்க ஆதரவுப் போர்வையில் அவர்கள் வருவதால் திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் கட்சியினரும் அவர்களை நம்பி அவர்களுடைய ‘வெளியேற்றும்’ இயல்பைச் சுவீகரித்துக்கொள்ள முயல்கிறார்கள்.
கருத்துரிமையும் நானும்
- பத்ரி கைது மிகை நடவடிக்கை, அதைக் கைவிட வேண்டும் என்று எழுதியதும் பலர் முன்வைத்த ஒரு கேள்வி ‘இதற்கு முன்னால் கருத்துச் சுதந்திரத்திற்காக என்ன செய்தீர்கள்?’
- சில சந்தர்ப்பங்களைக் குறிப்பிட்டு ‘அப்போது எங்கே போனீர்கள்?’ என்றார்கள்.
- ஒருவர் இதற்கு முன் என்ன செய்திருக்கிறார் என்று கேட்பதற்கு முன் சிறுதேடல் மூலமாகத் தெரிந்துகொண்டிருக்கலாமே. கூகுள் காலத்தில் அது வெகு எளிதுதானே? சரி, அப்போது எங்கே போனேன்?
- கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் கருத்துரிமை தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றைத் தொகுத்தால் நூலாக்கலாம். பல அறிக்கைகளில் கையொப்பம் இட்டுள்ளேன். தமிழ்நாடு என்றல்ல, கருத்துரிமைப் பிரச்சினைக்காக இந்திய அளவில் என்னை அணுகிய எல்லாவற்றுக்கும் கையொப்பம் இட்டுள்ளேன். உலக அளவில் செயல்படும் ‘பென்’ அமைப்பு முன்னெடுத்த கருத்துரிமைப் பிரச்சினைகளில் என்னாலான ஆதரவைத் தெரிவித்துள்ளேன்.
- தென்னிந்தியா சார்ந்து ‘பென்’ அமைப்பு முன்னெடுத்த காஞ்சா அய்லய்யா, எஸ்.ஹரீஷ், வைரமுத்து ஆகியோருக்கான அறிக்கைகளில் கையொப்பம் இட்டது சட்டென்று நினைவுக்கு வருகிறது. சிலவற்றுக்கு என் கருத்தோ கையொப்பமோ இல்லை என்றால் அவை என் கவனத்திற்கு வந்திருக்காது அல்லது முன்னெடுத்தோர் என்னை அணுகியிருக்க மாட்டார்கள் என்றே பொருள். மேலும் எல்லாவற்றுக்கும் ஒருவர் கருத்துத் தெரிவிப்பது சாத்தியமில்லாதது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே இருந்த பிரச்சினைகளில் கருத்துத் தெரிவித்திருந்தால்தான் இப்போது பேசலாம் என்பதும் என்ன வகை நியாயம்? இப்படிக் கேள்வி எழுப்புவோர் எத்தனை பிரச்சினைகளில் தாங்கள் முன்னின்றனர் என்பதையும் எண்ணிப் பார்ப்பது நல்லது.
- கருத்துரிமை தொடர்பாக நாம் பேச, விவாதிக்க இன்னும் ஏராளம் உள்ளன. கருத்துரிமை தொடர்பான சட்டங்கள், தீர்ப்புகள், கட்டுரைகள், நூல்கள் எனப் பலவற்றையும் வாசிப்பதும் தொடர்ந்து சிந்திப்பதும் கருத்துரிமை செழுமை பெற உதவும். அந்த எண்ணத்தோடு ஒவ்வொன்றையும் நிதானமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அணுகுவோம்.
நன்றி: அருஞ்சொல் (12 – 08 – 2023)