TNPSC Thervupettagam

அமுல்: வர்கீஸ் குரியன் என்றொரு தலைவர்

December 2 , 2021 976 days 468 0
  • இன்றைக்கு ‘அமுல்’ நிறுவனத்தின் தந்தை என்று உலகால் கொண்டாடப்படும், டாக்டர் குரியன் தன் ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்வில், 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உருவாக்கினார். அதில் கூட்டுறவு மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான நிர்வாகிகளை வளர்த்தெடுப்பதற்காக உருவாக்கிய, ‘ஊரக மேலாண்மைக் கழகம்’ (இர்மா) அவருக்கு மிகவும் அணுக்கமான ஒரு நிறுவனமாகும்.
  • சர்வதேசத் தரத்தில், 60 ஏக்கர் நிலத்தில் வகுப்பறைகள், கணினியுடன் (1980களில்) கூடிய நூலகம், புல்தரைகள், அவற்றில் அமைக்கப்பட்ட வெளிப்புற நிகழ்வரங்கு (amphi theatre), அற்புதமான ஒலி, ஒளியமைப்புடன் கூடிய மாநாட்டரங்கு, ஒவ்வொரு மாணவருக்கும் தனி விடுதியறை என இந்தியாவின் மிகச் சிறந்த கட்டமைப்பை, ஸ்விஸ் நாட்டு அரசின் உதவியோடு நிறுவியிருந்தார் குரியன்.
  • ஒரு முறை இர்மாவைச் சுற்றிப் பார்க்க வந்த குஜராத் மாநில முதல்வர், "ஓர் ஊரகக் கல்வி நிலையத்துக்கு எதற்கு இவ்வளவு வசதிகளுடனான கட்டமைப்பு?" என நக்கலாகக் கேட்டாராம். "நான் அரசர்களை பன்றித் தொழுவத்தில் வளர்ப்பதில்லை ஐயா" என சட்டென குரியன் அளித்த பதில், அவரை வாயடைத்துப் போகச் செய்தது.

அதுதான் டாக்டர் குரியன்!  

  • தான் நினைப்பதை அப்படியே பேசுவது அவரது குணம்.  ‘You get what you see’ என அதை ரத்தன் டாட்டா குறிப்பிடுகிறார். அவர் உருவாக்கிய நிறுவனங்களில் சர்வதேசத் தரமும், அழகும் மிளிரும்.
  • குரியன், 1921-ம் ஆண்டு கோழிக்கோட்டில் ஒரு வசதியான சிரியன் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை மருத்துவர். பள்ளிப்படிப்பை, கோபிச்செட்டிபாளையம் வைர விழாப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், பின்னர் லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தார். அதன் பின்னர், கிண்டி பொறியியல் கல்லூரியில் (பின்னாளில் அண்ணா பல்கலைக்கழகம்) மெக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றார். புத்திசாலி மாணவராக இருந்த அவர் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். பாட்மின்டன், கிரிக்கெட் போட்டிகளில் தன் கல்லூரியின் சார்பில் விளையாடியுள்ளார். குத்துச்சண்டை அவருக்குப் பிடித்த விளையாட்டு.
  • இந்திய ராணுவத்தில் சேரும் எண்ணத்துடன் இருந்தவரை, அவரது தாயார் வற்புறுத்தி டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் சேர வைத்தார். அங்கே அவரது தாய்மாமா ஜான் மத்தாய் (பின்னாளில், நேருவின் அமைச்சரவையில் நிதியமைச்சர்) இயக்குநராக இருந்தார். அந்த உறவின் வெளிச்சம் குரியனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எனவே படிப்பதற்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்தார்.
  • அன்றைய பிரிட்டிஷ் அரசு, வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித் தொகைகளை வழங்கி வந்தது. ‘பால் பொறியியல்’ படிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை என்றாலும், வேறு வழியின்றி, அதை ஒப்புக்கொண்டு மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிக்கச் சென்றார். அங்கே, அவருக்குப் பிடித்த அணு இயற்பியல் படித்தார். இந்திய அரசின் விதிகளைப் பூர்த்திசெய்ய பால் பொறியியலிலும் சில பாடங்கள் எடுத்துப் படித்தார். முடித்தவுடன், இந்தியா திரும்பி 5 ஆண்டுகள், அரசுத் துறையில் பணிபுரிய வேண்டிய ஒப்பந்தம் இருந்தது.
  • இந்தியா திரும்பியவுடன், தில்லிக்குச் சென்று கல்வி அமைச்சகச் செயலரைச் சந்தித்தார். ஆனந்த் என்னும் ஊரில் உள்ள அரசு பால் பதனிடும் நிலையத்தில் பணிக்குச் செல்ல அவருக்கு ஆணை கொடுக்கப்பட்டது. அது எங்கிருக்கிறது எனக் கேட்டார். ‘எங்கேயோ மும்பைக்குப் பக்கத்தில்’ எனச் சொல்லப்பட்டது. எனக்கு அங்கு போகப்பிடிக்கவில்லை எனப் பதில் சொன்னார். அவர் பதிலைக் கேட்டு வெறுப்படைந்த செயலர், ‘அப்படி என்றால், ஒப்பந்தப்படி, அபராதத் தொகை 30 ஆயிரம் ரூபாயைக் கட்டிவிட்டுப் போ!’ எனச் சொன்னார். குரியனுக்கு அது சரியானதாகப் படவில்லை.
  • இப்படித்தான் வேண்டாவெறுப்பாக மூட்டை முடிச்சுகளுடன் ஆனந்த் புறப்பட்டுச் சென்றார் குரியன். பத்தாயிரம் மக்கள்தொகை கொண்ட குறு நகரம் ஆனந்த். பெரும்பாலும் சைவர்கள் வசிக்கும் அந்த ஊரில், மாமிசம் உண்ணும் மலையாளி - அதுவும் கிறித்தவர் - என்பதால் தங்குவதற்கு வீடே கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தான் பணிபுரிய வேண்டிய இடத்துக்கு அருகில் இருந்த ஒரு கார் ஷெட்டில் தங்கினார் குரியன். அமெரிக்காவில் தான் வாழ்ந்த வசதியான வாழ்க்கையையும், ஆனந்தில் கார் ஷெட்டில் வாழ நேரிட்ட காலக் கொடுமையையும் எண்ணி அவர் வருந்தாத நாளில்லை.
  • அவர் பணிபுரிய வேண்டிய அரசு பால் பதனிடும் நிறுவனம், 1914-ம் ஆண்டு, முதலாம் உலகப் போர்க் காலத்தில், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு பால் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்பும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. ஆனால், அது ஒருபோதும் ஒழுங்காகச் செயல்பட்டதில்லை. அங்கிருந்து உற்பத்தி செய்து ஈராக் போர்முனைக்கு அனுப்பப்பட்ட பாலாடைக் கட்டிகள், எதிரிகளைவிட அதிக பிரிட்டிஷ் ராணுவ வீரர்களைக் கொன்றதாகக் கேலி செய்யப்பட்ட நிறுவனம். இயங்காத இயந்திரங்கள், பொறுப்பில்லாத அலுவலர்கள் என அழுது வடிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு நாளும், அந்த ஊரை விட்டு எப்படித் தப்பியோடுவது என்பதையே அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது வார விடுமுறை நாட்களில் மும்பை சென்று, நல்ல மாமிச உணவு உண்டு ஊர் சுற்றித் திரும்புவார்.
  • அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு பகுதியில், கூட்டுறவுப் பால் நிறுவனம் ஒன்று இயங்கிவந்தது. அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து, அதை மும்பைக்கு அனுப்பும் ஓர் அரசு ஒப்பந்தத்தைப் போராடிப் பெற்றிருந்தது அந்த நிறுவனம். ஆனால், பாலைக் கொள்முதல் செய்து, 400 கி.மீ. தொலைவில் இருந்த மும்பை நகருக்கு அனுப்புவதில் பல தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருந்தன.  அதைச் சரி செய்ய உதவ முடியுமா என, அந்தக் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் திருபுவன் தாஸ் படேல், பால் பொறியாளரான குரியனைக் கேட்டார்.
  • அதற்கு, ‘ப்ளேட் பாஸ்ச்சுரைஸர்’ என்னும் பதனிடும் இயந்திரம் வேண்டும். 40 ஆயிரம் செலவாகும் எனச் சொன்னார் குரியன். அந்த இயந்திரத்தைக் கொள்முதல்செய்ய உதவுங்கள் எனக் கேட்டுக்கொண்டார் திருபுவன் தாஸ் படேல். அதற்கான பணம் கூட்டுறவு நிறுவனத்தில் இருக்கவில்லை. திருபுவன் தாஸ் படேல் தன் மைத்துனரிடம் கடனாக வாங்கி, குரியனிடம் கொடுத்தார்.
  • அந்த இயந்திரத்தை உற்பத்தி செய்த எல் & டி நிறுவனம் மும்பையில் இருந்தது. மும்பை சென்றுவர இன்னொரு வாய்ப்பு என மகிழ்ச்சியோடு கிளம்பிச் சென்றார் குரியன். இயந்திரம் ஆனந்த் நகரை அடைந்த காலத்தில், குரியனின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அவர் அரசு வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். மகிழ்ச்சியோடு மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாரானார் குரியன். ‘இந்த இயந்திரத்தை நிறுவி, இயக்கும் திறன் இங்கு யாருக்கும் இல்லை.. எனவே, 2-3 மாதம் இங்கே தங்கி, எங்களுக்கு உதவ வேண்டும்’ என குரியனிடம் கேட்டுக் கொண்டார் திருபுவன் தாஸ் படேல். அந்த வேண்டுகோளை ஏற்று மேலும் இரண்டு மாதங்கள் தங்க முடிவெடுத்தார்.
  • இயந்திரம் வெற்றிகரமாக நிறுவப்பட்டு, பிரச்சினை தீர்க்கப்பட்டது. "எங்களுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்.. இங்கேயே இருந்துவிடுங்களேன்!" எனக் குரியனைக் கேட்டார் திருபுவன் தாஸ் படேல். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட குரியன் ஆனந்த் நகரிலேயே தங்க முடிவெடுத்தார். அதன் பின்னர் அவர் ஆனந்த் நகரை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரது உடல்கூட அந்நகரிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
  • குரியனின் உடல் மட்டும் அல்ல; உயிரும் ஆனந்த் நகரில் கலந்திருக்கிறது என்று சொல்லலாம். ‘அமுல்’ நிறுவனத்துக்கு உயிர் கொடுத்ததன் வழி ஆனந்துடன் உயிர் கலந்தார் குரியன்.

நன்றி: அருஞ்சொல் (02 – 12 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்