- அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஜனவரி 20-ல் பதவியேற்க வேண்டியிருக்கும் நிலையில், தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப் தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைப்பதற்கு முதலில் மறுத்தார்.
- ஜோ பைடனின் பெரும்பான்மையை உறுதிசெய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் நுழைந்து வன்முறையிலும் ஈடுபட்டனர்.
- அதையடுத்து, ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியில் ஜனநாயகக் கட்சி ஈடுபட்டுள்ளது. ட்ரம்ப்பின் போக்கை விரும்பாத மிகச் சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களே இந்தப் பதவிநீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பதவிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடைமுறை என்ன?
- பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபரை நீக்குவதற்கான அதிகாரத்தை அமெரிக்க அரசமைப்பின் 25-வது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளது. துணை அதிபருடன் நிர்வாகத் துறையின் முதன்மை அதிகாரிகளில் பெரும்பான்மையினரோ அல்லது நாடாளுமன்ற அவையைப் போன்று சட்டப்படி அமைக்கப்பட்ட வேறு எந்த அமைப்புகளின் பெரும்பான்மையினரோ சேர்ந்து, செனட் சபையின் தலைவரிடமோ அல்லது பிரதிநிதிகள் சபையின் அவைத் தலைவரிடமோ, அதிபர் தனது அதிகாரங்களைச் செலுத்தவும் கடமைகளை ஆற்றவும் இயலாதவராக இருப்பதாக அவர்களது எழுத்துபூர்வமான அறிக்கையை அளிக்கலாம் என்று 25-வது சட்டத் திருத்தத்தின் 4-வது பிரிவு கூறுகிறது. அப்படியொரு சூழல் வந்தால், துணை அதிபர் உடனடியாக அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டு அவரது கடமைகளை ஆற்றுவார்.
சாத்தியங்கள் என்ன?
- தற்போது துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ், ட்ரம்ப்பின் மீது அப்படியொரு நடவடிக்கையை எடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. 25-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அதிபர் தன்னுடைய கடமைகளை ஆற்றத் தவறினார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தால் ஒரு சிறப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை அப்படியொரு சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டதில்லை.
- அந்த ஆணையத்தில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பதைப் பற்றியோ அதிபர் கடமை தவறியதாக எப்படி உறுதிப்படுத்தப்படும் என்பதைப் பற்றியோ இதுவரை எந்தத் தெளிவும் இல்லை. மேலும் இப்படியொரு சிறப்பு ஆணையத்தை அமைப்பதற்காக செனட் சபையைக் கூட்டுவது என்பது அவ்வளவு எளிதானதும் அல்ல. ஜனவரி 19-ம் தேதிக்குள் எந்தவொரு முக்கியக் காரணத்துக்காகவும் செனட் சபை கூடுவதற்கு வாய்ப்பு இல்லை.
- ஜனவரி 15 மற்றும் 18-ம் தேதிகளில் செனட் சபையில் மேற்கொள்ள வேண்டிய விவாதங்கள் குறித்து முடிவுசெய்வதற்கான செனட் அங்கத்தினரின் கூட்டம் நடைபெறவிருந்தாலும்கூட, சிறப்பு ஆணையம் குறித்து முடிவெடுப்பதற்கு அந்தக் கூட்டங்களுக்கு அனுமதியில்லை. செனட் சபையின் நூறு அங்கத்தினர்களும் சேர்ந்து ஒப்புதல் அளிக்காமல் சிறப்பு ஆணையம் குறித்து அந்தக் கூட்டங்களில் விவாதிக்க முடியாது.
- அதிபரின் திறனின்மை குறித்து கேபினட் முடிவெடுத்தாலும்கூட, அவ்வாறு இல்லை என்று கூறி அதிபர் எழுத்துபூர்வமான அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் அளித்துத் தனது அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியும். மேலும், தனக்கு எதிராகப் பதவிநீக்கப் பிரகடனத்தை முன்மொழிந்த முதன்மை அதிகாரிகளின் மீது அவரால் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
- அமைச்சரவையின் பெரும்பான்மையினரோ அல்லது சிறப்பு கமிட்டியோ சேர்ந்து மீண்டும் ஒரு முறை அதிபர் தனது கடமைகளை ஆற்றத் தவறினார் என்று கூறி பதவிநீக்கப் பிரகடனத்தை நாடாளுமன்ற அவைகளின் முன்பாக வைக்கலாம்.
- அதன் வாயிலாக, அதிபரின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் துணை அதிபர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால், துணை அதிபர் தொடர்ந்து தனது பொறுப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலுமே உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதை ஆதரிக்க வேண்டும். ஆக மொத்தம், ஜனவரி 20-ம் தேதிக்கு முன்னதாக டொனால்டு ட்ரம்ப் மீது பதவிநீக்க நடவடிக்கை எடுப்பது நடைமுறைக்குச் சாத்தியமான ஒன்றல்ல.
- பிரதிநிதிகளின் சபையின் உறுப்பினர்களின் பெரும்பான்மையோடு அதிபரைப் பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றலாம்தான். ஆனால், அப்படி பதவிநீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும் செனட் சபையிலும் அது நிறைவேற்றப்பட வேண்டும். செனட் சபையின் நூறு அங்கத்தினர்களும் ஒப்புதல் அளிக்காமல் ஜனவரி 19-ம் தேதிக்கு முன்பாக செனட் சபையைக் கூட்டவும் முடியாது. எனவே, ஜனவரி 20-க்குள் ட்ரம்ப் மீது குறிப்பிடத்தக்க வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே உண்மை நிலை.
- ஜோ பைடனிடம் தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ‘அமெரிக்க அரசுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்டதாக’க் குற்றம்சாட்டி, ட்ரம்ப்பைப் பதவிநீக்கக் கோரும் தீர்மானத்தின் வரைவுகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சுற்றில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இதற்கிடையில், செனட் சபையின் தலைவரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட்ச் மெக்கோனல் தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடுத்த கூட்டம் எப்போது கூட்டப்படும் என்ற கால அட்டவணையை அனுப்பிவைத்துள்ளார். அதன்படி அடுத்த செனட் கூட்டம் ஜனவரி 19 அன்று நடக்க இருப்பதாகவும் அனைத்து செனட் உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்கூட்டியே கூட்டம் நடத்த முடியும் என்று தனது உறுப்பினர்களுக்கு உறுதியான செய்தியை அளித்துள்ளார். ஜனவரி 19-க்குள் நிச்சயமாக செனட் கூடாது, ட்ரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானத்துக்கும் அது ஒப்புதல் அளிக்காது. அதற்கான ஆயத்தங்கள் நடப்பதற்குள், தற்போதைய அதிபர் ட்ரம்ப் பதவியிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிடுவார்.
நன்றி: தி இந்து (13 – 01 – 2021)