TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர் தேர்தல்: அசத்தும் அறிமுகப் பேச்சாளர்கள்

September 3 , 2024 136 days 142 0

அமெரிக்க அதிபர் தேர்தல்: அசத்தும் அறிமுகப் பேச்சாளர்கள்

  • அமெரிக்க அரசியல் அமைப்பில் ஓர் அரசியல் கட்சியின் தேசிய மாநாடானது, அக்கட்சிக்குள் ஆதரவு திரட்டும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர், அக்கட்சிப் பிரதிநிதிகளின் பெரும்பான்மையை வென்றாக வேண்டும். ஒவ்வொரு மாநிலப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேட்பாளரை வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். இதே மாநாட்டில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுபவர், தான் விரும்பும் துணை அதிபர் வேட்பாளரை அதிகாரபூர்வமாக முன்மொழிவார். கட்சியின் கொள்கைகள், இலக்குகள் கலந்தாலோசிக்கப்பட்டு ஏற்கப்படும்.
  • சிகாகோ நகரத்தில் இதுவரை நடைபெற்ற 25 ‘அதிபர் சார் தேசிய மாநாடு’களில் (Democratic National Conventions), 14 குடியரசுக் கட்சித் தேசிய மாநாடுகளும், 11 ஜனநாயகக் கட்சித் தேசிய மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த 12ஆவது ஜனநாயக மாநாடு, 26ஆவது அதிபர் சார் தேசிய மாநாடாக அறியப்படுகிறது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பேச்சாளர் எமெரிட்டா நான்சி பெலோசி, துணை அதிபர் வேட்பாளர் டிம் வேல்ஸ் போன்ற ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இம்மாநாட்டில் அனல் பறக்கப் பேசினர்.
  • இவர்களைத் தவிர, அதிகம் அறியப்படாத அக்கட்சியின் செயலாளர்கள், அமெரிக்க காங்கிரஸின் இளம் உறுப்பினர்கள், அரசியல் ஆர்வலர்கள் ஆகியோரின் வருகையும் உரையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. கட்சிப் பிரதிநிதியான அலெக்ஸாண்டிரியோ ஒகாசியோ கார்டஸுக்கு முந்தைய மாநாட்டில் பேச வெறும் 90 நொடிகள் மட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை, ஹிலாரி கிளிண்டன் உரைக்கு முன்பே பிரதான நேரத்தில் பேச அனுமதிக்கப்பட்டார்.
  • ஜனநாயகப் பொதுநலக் கோட்பாட்டை (Democratic Socialism) அரசியல் நிலைப்பாடாகக் கொண்ட அலெக்ஸாண்டிரியோ, ‘‘செல்வந்தர்களுக்காக, பெரும் வணிக முதலாளிகளுக்காக மட்டுமே நீங்கள் போராடுபவராக இருந்தால், இந்நாட்டை உங்களால் நேசிக்க முடியாது என்பதே உண்மை’’ என்று குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரான டொனால்டு டிரம்ப்பை நேரடியாகத் தாக்கிப் பேசினார். மேலும், காஸாவில் நடக்கும் போரைக் கடுமையாகச் சாடினார்.
  • தொழிலாளர் வர்க்க வாக்காளர்களை மையப்படுத்தி உரை நிகழ்த்திய இவர், ‘‘இந்நாட்டை நேசிப்பதற்கு இந்நாட்டு மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக, குறிப்பாகத் தொழிற் சாலைப் பணியாளர்கள், மதுபான விடுதி வேலையாட்கள், துரித உணவகப் பணியாளர்கள் போன்ற கடும் உழைப்பாளிகளுக்காகப் போராட வேண்டும்’’ என வலியுறுத்தினார். ஹர்லெம் நகர சபை உறுப்பினரான யூசஃப் சலாம், 1989 இல் அரசுப் பூங்காவில் ஒரு வெள்ளையினப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தாகச் சிறையில் அடைக்கப்பட்டு, பின் நிரபராதி களாக விடுவிக்கப்பட்ட ஐந்து ஆப்ரிக்க அமெரிக்கர்களில் ஒருவர்.
  • டிரம்ப்பின் குணங்களை விமர்சித்ததோடு, ஆப்ரிக்க அமெரிக்கர்கள் அனைவரும் துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக அவர் தெரி வித்தார். தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு ஏழு வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு நியூயார்க் நகர சபைக்கு ஹர்லெம் பிரதிநிதியாகத் தேர்வானவர். தன்னை விடுவிக்காமல் சிறையில் வைத்திருக்க விரும்பியவர் டிரம்ப் என விமர்சித்தார். இவரும், இவருடன் சிறை சென்ற மற்ற நிரபராதிகளான கோரி வைஸ், ரேமண்ட் சேண்டனா, கெவின் ரிச்சர்ட்சன் ஆகியோரும் தங்கள் ஆதரவை ஜனநாயகக் கட்சி அதிபர் /துணை அதிபர் வேட்பாளர்களுக்கு அளித்தனர்.
  • ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டின் தலைவரான மினாய்ன் மூர், கமலா ஹாரிஸைத் துணை அதிபராக்க அதிபர் ஜோ பைடனிடம் பரிந்துரைத்தவர். 1988 இல் அதிபர் வேட்பாளர் ஜெஸ்ஸி ஜேக்ஸனை ஆதரித்து சிகாகோவில் பிரச்சாரம் செய்து தன்னுடைய அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். ஆப்ரிக்க அமெரிக்கர்களுடைய அரசியலின் அதிகார மையமாகக் கருதப்படும் சிகாகோவைச் சார்ந்தவர். ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவில் தலைமைச் செயலாளர் ஆவதற்கு முன் வெள்ளை மாளிகையின் அரசியல் விவகார இயக்குநராகவும் மக்கள் தொடர்பு இயக்குநராகவும் அதிபர் பில் கிளிண்டனுக்குக் கீழ் பணிபுரிந்தவர்.
  • இத்துறைகளில் பணிபுரிந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்ணாக அறியப்படும் இவர், 2016இல் ஹிலாரி கிளிண்டனின் அதிபர் பிரச்சாரத்தின்போது தலைமை ஆலோசகராக இருந்தவர். அனுபவம் வாய்ந்த அரசியல் வியூக வல்லுநராக அறியப்படும் இவர், ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களின் ஆதரவை ஒருங்கிணைத்து கமலா ஹாரிஸ் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தவர். நான்கு நாள்களாக நடைபெற்ற இம்மாநாட்டை முன்னின்று நடத்தியவரும் இவரே.
  • டிரம்ப் அதிபராக இருக்கும்போது வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புச் செயலாளராக ஒன்பது மாதங்கள் பணியாற்றிய ஸ்டெஃபானி க்ரிஷம், 2021இல் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் (Capitol Hill) மீது தாக்குதல் நிகழ்த்தியபோது தனது பணியை ராஜினாமா செய்தவர். அதே ஆண்டில், டிரம்ப்பின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ‘I will take your questions now’ என்னும் புத்தகத்தை வெளியிட்டவர். அதில், டிரம்ப்பின் கீழ் பணியாற்றியபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பதிவிட்டுள்ளார்.
  • இவ்வாறு அமெரிக்க அரசியல் ௧ளத்தில் அதிகம் அறியப்படாதவர்களும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் இவர்களில் பலரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிபர் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றும் நம்பப்படுகிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்