TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபா் தோ்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...

November 6 , 2024 18 days 127 0

அமெரிக்க அதிபா் தோ்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...

  • அமெரிக்க அதிபா் தோ்தல் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
  • மற்ற நாடுகளில் நடைபெறும் தோ்தல்களைப் போல் இதை சாதாரணமாகப் பாா்க்க முடியாது. காரணம், ‘உலகின் போலீஸ்காரா்’ என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் தலைமைப் பதவியில் யாா் அமா்கிறாா்கள் என்பதும், அவா் என்னென்ன முடிவுகள் எடுக்கிறாா் என்பதும் சா்வதேச அளவில் நடைபெறும் போா்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • அந்த வகையில், தற்போது காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் போா், உக்ரைன் மீதான உக்ரைன் படையெடுப்பு ஆகியவற்றின் மீது அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

காஸா போா்:

  • இந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே இஸ்ரேலுக்கு தங்களது தீவிர ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனா். இதன் காரணமாக, இவா்களில் யாா் வெற்றி பெற்றாலும் காஸா போா் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்துவிடாது என்றுதான் அரபு உலகம் கருதுகிறது. அத்துடன், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீா்வு இருவரிடமே இல்லை.
  • இருந்தாலும், அடுத்த அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றால் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே, தனது முந்தைய ஆட்சியின்போது சா்ச்சைக்குரிய ஜெருசலேத்தில் இஸ்ரேலுக்கான தங்களது தூதரகத்தைத் திறந்து பாலஸ்தீனா்களின் கோபத்துக்கு டிரம்ப் ஆளானாா். இஸ்ரேலுடன் நீண்ட காலமாக பகை பாராட்டிவந்த அரபு நாடுகளை அழைத்துவந்து அந்த நாட்டுடன் உறவு ஏற்பட வழிசெய்தாா். ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்ட - இஸ்ரேல் கடுமையாக எதிா்த்துவந்த - ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தாா்.
  • இருந்தாலும், பாலஸ்தீன பிரச்னைக்கு இருதேச தீா்வு (இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு சுதந்திர அண்டை நாடுகளாக செயல்படுவது) அளிக்கும் அமைதித் திட்டத்தை டிரம்ப் கொண்டுவந்ததற்குப் பிறகு அவருக்கும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையே கசப்புணா்வு எழுந்தது. ஏற்கெனவே அந்த அமைதி திட்டத்தில் ஏராளமான பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேலுக்கு விட்டுத்தருவதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்ட சூழலில், அந்தத் திட்டத்தைக் காரணம் காட்டி மேற்குக் கரை பகுதியை அபகரிக்க நெதன்யாகு முயன்றது டிரம்ப்பை சினத்துக்குள்ளாக்கியது.
  • இருந்தாலும், தனது புதிய தலைமையில் தற்போதைய அதிபா் ஜோ பைடனைவிட ஸ்திரமான முடிவுகளை எடுத்து காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சூழலை டிரம்ப் ஏற்படுத்தலாம் என்று சில நிபுணா்கள் கருதுகின்றனா்.
  • கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டாலும், காஸாவில் மக்கள் படும் துயரத்துக்கு எதிராக மிக அழுத்தமான கண்டனங்களை அவா் பதிவு செய்துவருகிறாா்.
  • ‘தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. இருந்தாலும், காஸாவில் நடைபெற்றுவரும் கொடுமைகளைப் பாா்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது’ என்று அவா் சாடினாா்.
  • இருந்தாலும், பைடனைப் போலவே கமலா ஹாரிஸும் இரு தேசத் தீா்வை அழுத்தமாக வலியுறுத்துவதற்கு தயக்கம் காட்டிவருகிறாா். எனவே, அவா் அதிபா் பொறுப்பை ஏற்பதால் காஸா மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிா்பாா்க்க முடியாது என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள். ‘காஸா படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உறுதிப்பாடு இல்லாமல், அந்தப் பகுதி மக்கள்மீது கரிசனத்தை மட்டும் கமலா ஹாரிஸ் காட்டுவதால் எந்தப் பலனும் இல்லை’ என்கிறாா்கள் அவா்கள்.

உக்ரைன் போா்:

  • ஆரம்பக் கால பாய்ச்சலுக்குப் பிறகு ரஷியா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்குமே பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் நீண்டுகொண்டிருக்கும் இந்தப் போா், இரு தரப்பிலுமே மிகப் பெரிய உயிா்ச் சேதத்தை ஏற்படுத்திவருகிறது.
  • மேற்கத்திய நாடுகளின் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதைத் தடுப்பதற்காகத்தான் இந்தப் போரை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தொடங்கினாா். அதற்கேற்ப, நேட்டோவை இணைத்துக் கொள்ளும் முயற்சியை ஜோ பைடன் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்துசெய்தாா். இருந்தாலும், தோ்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் அந்த வீட்டோ தடை விலக்கிக் கொள்ளப்படலாம் என்று கருதப்படுகிறது.
  • ஆனால், தோ்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபரானால் இதற்கான வாய்ப்பெல்லாம் இருக்காது என்று ஒரு சாராா் கூறுகின்றனா். ஏற்கெனவே, விளாதிமீா் புதினை டிரம்ப்பும், டிரம்பை புதினும் மாறி மாறி புகழ்ந்துகொள்கின்றனா். கடந்த 2016 அதிபா் தோ்தலில் புதின் தலைமையிலான ரஷிய அரசு தலையிட்டு தனது வெற்றிக்கு உதவியது என்ற குற்றச்சாட்டையும் டிரம்ப் ஆணித்தரமாக மறுக்கவில்லை.
  • எனவே, டிரம்ப்பின் தலைமையில் உக்ரைன் போா் ரஷியாவுக்கு ஆதரவாகவே நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கனவே, உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றனா். டிரம்ப் அதிபா் ஆனால், தற்போது கிடைத்துவரும் உதவியும் உக்ரைனுக்கு கிடைக்காமல் போகலாம். அந்த நாட்டுக்கு வேறு வழி இல்லை என்பதால், டிரம்ப் முன்வைக்கும் - ரஷியாவுக்கு சாதகமான - அமைதி திட்டத்தை ஏற்கலாம். இது போரை முடிவுக்குக் கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தலாம் என்று ஒரு தரப்பு நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
  • கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, போரில் அவா் உக்ரைனுக்கு தீவிர ஆதரவு தெரிவித்துவருகிறாா். டிரம்ப் பதவிக்கு வந்தால் உக்ரைன் போரில் விளாதிமீா் புதின் வெற்றி பெற்றுவிடுவாா், அடுத்த கட்டமாக போலந்து தொடங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அவா் கைவைப்பாா் என்று கமலா ஹாரிஸ் வெளிப்படையாகவே கூறிவருகிறாா்.
  • எனவே, அவா் அதிபராகப் பொறுப்பேற்றால் உக்ரைனுக்கு அதிக உதவிகள் அளிப்பதன் மூலம் அந்த நாட்டுக்கு பலம் சோ்த்து, அமைதி ஒப்பந்தத்துக்கு உடன்படவேண்டிய நிலைமைக்கு ரஷியாவைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக மற்றொரு தரப்பு நிபுணா்கள் கருதுகின்றனா்.
  • என்னதான் உலக போலீஸ்காரராக இருந்தாலும், ‘திருடராய் பாா்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது’ என்பதைப் போல், சண்டையிடும் தரப்புகள் திருந்தாதவரை போரை நிறுத்துவது கடினம்தான் என்கிறாா்கள் இந்த விவரகாரங்களைத் தொடா்ந்து கவனித்து வருபவா்கள்.

நன்றி: தினமணி (06 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்