- தாங்கள் செல்லும் இடம் எல்லாம் தங்களுடைய பெருமைகளைப் போலவே இழிவுகளையும் கூட்டிச் செல்ல இந்தியர்கள் தவறுவதே இல்லை. இந்தியர்கள் வெளிப்படுத்தும் மோசமான சாதிப் பாகுபாடுகள் மீது அமெரிக்கா இப்போது கவனம் குவித்திருக்கிறது. சாதிப் பாகுபாட்டைக் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுப்பதற்கான பணியை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் முன்னெடுத்திருக்கின்றன.
- அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இனம், நிறம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது எப்படிக் குற்றமோ அப்படியான குற்றமாக சாதி தொடர்பான வசவுகள், ஒதுக்கல்கள், அவமதிப்புகள், எதிர் நடவடிக்கைகள் போன்றவையும் இனி கருதப்படும். மாணவர்கள் மீது மட்டுமல்ல, துறைப் பேராசிரியர்கள் மீதும் இத்தகைய புகார்கள் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
- அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் நிலவும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக ‘ஈக்வாலிட்டி லேப்ஸ்’ என்ற அமைப்பு குரல் கொடுத்ததுடன் பல்கலைக்கழக நிர்வாகங்களின் கவனத்துக்கும் கொண்டுசென்றது. இதன் நிர்வாக இயக்குநராக தேன்மொழி சுந்தரராஜன் இருக்கிறார்.
- தலித்துகள் மீது மட்டுமல்ல; சிறுபான்மைச் சமூகத்தினரும் இந்திய மேல்சாதி ஆசிரியர்கள், மாணவர்களால் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் கடந்த மூன்று மாதங்களாக இணையத்தில் குவிந்தன.
- தங்களுடன் தொடக்கத்தில் நன்றாகப் பழகிய நண்பர்கள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் இந்தச் சாதி வேறுபாடுகள் குறித்து அதிகம் அறியாமலும் பொருட்படுத்தாமலும் நட்புடன் பழகியதாகவும், ஒரு மாணவருடைய வீட்டுக்குச் சென்றபோது முழுப் பெயரைக் கூறுமாறு அவர்கள் கேட்டபோது சாதியைக் குறிக்கும் பின்னொட்டையும் சேர்த்து கூறியதற்குப் பிறகு அந்த மாணவர் தன்னுடன் பேசுவதில்லை என்றும் பார்த்தும் பாராமல் விலகிப்போவதாகவும் ஒரு பெண் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
- இந்தியாவிலிருந்து வந்த மேல்சாதிப் பெண் பொருளாதாரரீதியாக வறுமையில் இருந்ததால் கல்விக் கட்டணம் செலுத்துவது உள்பட பலவழிகளிலும் உதவியிருந்தும் தன்னுடைய சாதியைக் கேட்டதும் நட்பை முறித்துக்கொண்டுவிட்டதாக இன்னொரு பெண் பதிவுசெய்திருக்கிறார்.
- மற்ற மாணவர்கள் அருகில் இல்லாதபோது தங்களைச் சாதிப் பெயரைச் சொல்லி ஏளனமாக அழைப்பதாகவும், ‘உனக்கெல்லாம் ஒரு நேரம் – அமெரிக்காவுக்குப் படிக்க வந்துவிட்டாய்!’ என்று கூறி மனத்தை நோகச் செய்வதாகவும் ஒரு பெண் பதிந்திருக்கிறார்.
- சாதி மட்டுமல்ல; நிறத்தையும் சொல்லி அவமானப்படுத்துவதாக இன்னொரு பெண் வேதனைப்பட்டிருக்கிறார். பாடங்களில் சந்தேகம் கேட்டால் விளக்குவதில்லை என்றும், மதிப்பெண்களைக் குறைத்துப்போடுவதாகவும் இந்திய வம்சாவழி ஆசிரியர்கள் மீது மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- சக மாணவர்கள் சாதியைத் தெரிந்துகொண்டதும் அருகில் அமர்வதில்லை என்றும் விடுதி அறையில், பொது இடங்களில் ஒதுக்குவதாகவும் பலர் வருத்தம் தோயக் குறிப்பிட்டுள்ளனர். சாப்பாட்டு நேரத்தில் பக்கத்தில் அமராமல் ஒதுங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்தியா, நேபாளம், இலங்கை மாணவர்கள் இக் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர். இவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள்.
- இதையடுத்து கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம், தனியார் நடத்தும் கோல்பி கல்லூரி, மாசாசுசெட்ஸின் பிராண்டீஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தங்களுடைய கல்வி நிறுவன அமைப்பு விதிகளில், சாதிரீதியிலான பாகுபாட்டையும் கடுமையான குற்றமாகச் சேர்த்துள்ளன.
- கொடுமை என்னவென்றால், அமெரிக்கா வாழ், இந்து அமெரிக்க அறக்கட்டளை (HAF) இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துள்ளது. ‘ஏற்கெனவே உள்ள பாரபட்சத்துக்கு எதிரான விதிகளே நடவடிக்கைகளுக்குப் போதுமானவை’ என்று அமைப்பின் நிர்வாக இயக்குநர் சுஹாக் சுக்லா சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.
- ‘அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 600 ஆசிரியர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்காமலும், புகார் செய்த மாணவர்கள் அதற்கான ஆதாரங்களை வழங்காத நிலையிலும் இதை விதிகளில் சேர்ப்பது தவறு!’ என்று வாதாடியிருக்கிறார்.
- அமெரிக்க ஃபெடரல் அரசின் சட்டத்திலேயே சாதிப் பாகுபாடுகள் குறித்து சேர்க்கப்படாவிட்டால் தெற்காசிய சமூகத்தினரிடையே இந்தப் பாகுபாடு தொடரும் என்று பட்டியல் இன, சிறுபான்மைச் சமூக மாணவர்கள் கூறுகின்றனர்.
- பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாது கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களிலும் பட்டியல் இனத்தவர்கள் சாதிரீதியிலான அவமதிப்புக்கு ஆளாவதாகவும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மறுக்கப்படுவதாகவும் பாலியல் ரீதியாகக்கூட துன்புறுத்தப்படுவதாகவும் அங்கு பணிபுரியும் பட்டியல் இனப் பெண்கள் புகார்களில் தெரிவித்துள்ளனர்.
- நிறம், இனம் சார்ந்த பாகுபாடு எப்படி உலகளாவிய குற்றமாகப் பார்க்கப்படுகிறதோ அப்படி சாதியப் பாகுபாட்டையும் எல்லா நாடுகளும் ஒரு குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இது அமையலாம். அந்த வகையில் முக்கியமான முன்னெடுப்பாக இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது!
நன்றி: அருஞ்சொல் (06 – 02 – 2022)