TNPSC Thervupettagam

அமைதிக்கு பச்சைக் கொடி!

July 7 , 2021 1121 days 453 0
  • மேற்கு ஆசியாவில் ஒன்றன்பின் ஒன்றாகப் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. "ஆபிரஹாம் ஒப்பந்தம்' அடித்தளமிட்டுக் கொடுத்த பாதையில் இஸ்ரேலும், ஐக்கிய அரபு அமீரகமும் அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டிருக்கின்றன.
  • அதனால் கடந்த 70 ஆண்டுகளாக கலவர பூமியாக இருந்துவரும் மேற்கு ஆசியாவில், அணிமாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
  • இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபிட், இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்று திரும்பியிருக்கிறார். இஸ்ரேலின் தூதரகங்கள் அபுதாபியிலும், துபையிலும் நிறுவப்பட்டிருக்கின்றன.
  • 2020 ஆகஸ்டில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலும், ஐக்கிய அரபு அமீரகமும் ஆபிரஹாம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
  • 1979-இல் எகிப்தும், 1994-இல் ஜோர்டானும் இஸ்ரேலுடனான உறவை ஏற்படுத்திக் கொண்டதற்குப் பிறகு, 2020 செப்டம்பர் 15-ஆம் தேதி வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்னிலையில் அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர், பஹ்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கையொப்பமிட்டு உருவாக்கிய ஆபிரஹாம் சமாதான ஒப்பந்தம் இப்போது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

வளைகுடா நாடுகளுக்கும் இஸ்ரேலும்

  • வளைகுடா நாடுகளுக்கு விஜயம் செய்யும் முதலாவது இஸ்ரேல் அமைச்சர் லாபிட்டாகத்தான் இருக்கும்.
  • 15 நாள் காசாவில் நீண்டு நின்ற இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கும், நெதன்யாகு அரசு அகன்று நாஃப்டாலி பென்னட்டின் தலைமையிலான புதிய அரசு இஸ்ரேலில் பதவி ஏற்றதற்குப் பிறகும் நடந்திருக்கும் முக்கியமான அரசியல் நிகழ்வு லாபிட்டின் விஜயம்.
  • "அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு ஏற்படுத்திக்கொள்ள இஸ்ரேல் விழைகிறது. அதைப் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு மேற்காசியப் பகுதியில் உள்ள எல்லா நாடுகளையும் அழைக்கிறோம்' - அபுதாபியில் தூதரகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபிட் வெளியிட்ட செய்தி இது.
  • ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல், பஹ்ரைனும் இப்போது இஸ்ரேலுடன் முழுமையான ராஜாங்க உறவை ஸ்தாபித்திருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
  • சவூதி அரேபியாவின் ஆதரவும், பின்துணையும் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இஸ்ரேலால் உறவு ஏற்படுத்தியிருக்க முடியாது.
  • சவூதி விஜயத்தைத் தொடர்ந்து தனது அமீரக விஜயத்தை லாபிட் அமைத்துக் கொண்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் ராஜதந்திரம் இதில் வெளிப்படுகிறது.
  • வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேணுவதற்கு அவர்களது பாதுகாப்பும், அந்த நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் முக்கியமான காரணங்கள். ரியாதில் ஹூதி புரட்சியாளர்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு மூசா உள்ளிட்ட தீவுகளை கைப்பற்ற ஈரான் முற்பட்டிருக்கிறது.
  • அதனால் பொது எதிரியான ஈரானை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.
  • ஆபிரஹாம் ஒப்பந்தத்தை முதன்முதலில் வரவேற்ற யேமனும், விரைவிலேயே அமீரகத்தின் பாதையில் இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே சூடானும், மொராக்கோவும் இஸ்ரேலிய நட்புறவுக்குப் பச்சைக்கொடி காட்டி விட்டன.
  • இதனால் மட்டுமே மேற்கு ஆசியாவில் முற்றிலுமான அமைதி ஏற்பட்டுவிடாது. ஈரானுடனும் துருக்கியுடனுமான இஸ்ரேலின் மோதல்களும், பாலஸ்தீனப் பிரச்னையும் தீர்க்கப் படாத வரை மேற்கு ஆசிய அமைதி என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.
  • ஒருபுறம் வளைகுடா நாடுகளுடனான நட்புறவு மேம்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவு மோசமாகி வருகிறது.
  • யேமன் கடலில் தங்களது நீர்முழ்கிக் கப்பலை இஸ்ரேல் மூழ்கடித்தது என்கிற குற்றச்சாட்டை ஈரான் சமீபத்தில் எழுப்பியிருக்கிறது.
  • இப்ராஹிம் ரைசியின் தலைமையில் அமைய இருக்கும் புதிய ஈரான் அரசு, அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருப்பது வளைகுடா நாடுகளையும், இஸ்ரேலையும் சலனப்படுத்தியிருக்கிறது.
  • வளைகுடாவிலுள்ள எல்லா நாடுகளும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போல இஸ்ரேலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
  • சுதந்திரமான பாலஸ்தீனம் உருவாகாத வரையில் இஸ்ரேலுடன் எந்தவிதமான உறவுக்கும் தயாராக இல்லை என்று குவைத், கத்தார், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றன.
  • மேற்கு கரையில் காணப்படும் மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், ஆபிரஹாம் ஒப்பந்தத்தில் பாலஸ்தீன பிரச்னை குறித்து வேறு எதுவும் குறிப்பிடப் படாததையும் சுட்டிக்காட்டி அந்த நாடுகள் விமர்சிக்கின்றன.
  • யாயிர் லாபிட்டின் ஐக்கிய அரபு அமீரக அரசுமுறைப் பயணத்தில் பாலஸ்தீனப் பிரச்னை விவாதிக்கப்படவே இல்லை என்பதிலிருந்து வருங்காலத்திலும் அந்த நாடுகளுடைய இஸ்ரேலுடனான உறவில் அது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது தெளிவாகிறது.
  • வளைகுடா நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நட்புறவு என்பது, அங்கே வேலை பார்க்கும் 70 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களுக்குப் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடும்.
  • வர்த்தக ரீதியில் இந்தியாவுக்கும் அந்த நட்புறவால் ஆதாயம் ஏற்படலாம். அந்த வகையில் நமக்கு நன்மை, வேறென்ன..?

நன்றி: தினமணி  (07 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்