TNPSC Thervupettagam

அமைதியை நேசித்த புறாக் குஞ்சுகள்

October 30 , 2023 421 days 273 0
  • போரின் அழிவுக்காட்சிகள் மிகுந்த வலி ஏற்படுத்தித் துவளச் செய்பவை. அமைதி எப்போது திரும்பும் என்பதே உலகளாவிய சிந்தனையாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் போர் பற்றிய செய்திகள் பரவலாக மக்களைச்சென்றடைகின்றன. அதில் எல்லோர் மனங்களையும் உறைய வைத்தவை போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த செய்திகளும் காணொளிகளும்.
  • ஹயா என்ற சிறுமி, எழுதிவைத்த உயில் ஏற்படுத்திய வலியும் வேதனையும் தாங்கவொண்ணாதவை. தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த தொகை ரூ.75, சொற்பமான விளையாட்டுப் பொருள்கள், உடைகள் என அனைத்தையும் குடும்பத்தார் அனைவருக்கும் பங்கிட்டிருந்தது அந்த உயிலின் சாரம். தன்னைத் தவிர தன் குடும்பத்தார் அனைவரும் இந்தக் கொடுமையான போரிலிருந்து மீண்டு பிழைத்திருப்பார்கள். எனவே தன் உடைமைகள் அவர்களுக்குச் சொந்தம் என்னும் அந்தச் சிறுமியின் சிந்தனை எத்தனை மேன்மையானது!
  • இதற்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட போர்களின்போதும் சிலர் தங்கள் போர்க்கால வாழ்க்கை அனுபவங்களையும் தாங்கள் அனுபவித்த துயரங்களையும் நாட்குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார்கள். போர்ச்சூழல் எவ்வாறு குழந்தைகளின் இயல்பு வாழ்க்கையை அவர்களின் மனநிலையைச் சிதைக்கிறது என்பதை அவை வெளிச்சமிட்டுக் காட்டின. போருக்கு எதிரான தங்கள் கருத்தோட்டத்தைப் பதிவாக்கிய அவர்கள் பெண் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • ஆவணமாக மாறிய ஆன் ஃபிராங்க் நாட்குறிப்பு: யூதரான ஓட்டோ ஃபிராங்க், ஜெர்மனியின் முன்னாள் ராணுவ அதிகாரி. ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஜெர்மனியில் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது, ஓட்டோ ஃபிராங்க் தன் மனைவி மற்றும் இரு மகள்களுடன் நெதர்லாந்துக்குத் தப்பித்துச் சென்றார். ஹிட்லரின் நாஜிப் படைகள் அங்கும் தங்கள் வேட்டையைத் தொடர்ந்தன. வீட்டுக்குள்ளேயே பதுங்குமிடத்தை ஏற்படுத்திக்கொண்டு ஓட்டோ ஃபிராங்க் குடும்பத்தார் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். அந்த அவலம் நிறைந்த வாழ்க்கையே அவரது மகள் ஆன் ஃபிராங்க் நாட்குறிப்பு எழுதத் தூண்டுதலானது.
  • வீட்டில் இருக்கும் புத்தகங்கள், வானொலி வழியாகக் கிடைக்கும் போர்ச் செய்திகள், அதனால் ஏற்படும் இறுக்கம் சூழ்ந்த நிலைமை, ஒரு பதின்பருவக் குழந்தைக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய வெளியுலக வாழ்க்கை, சக தோழமைகளுடனான ஊடாட்டம் கிடைக்காமல் போன ஏமாற்றம், ஏக்கங்கள், தனிமை வாழ்வின் அவலம், வேதனை, இளம் பருவத்துக்கேயுரிய மென்மையான காதல், தன் எதிர்காலம் என்னவாக இருக்க வேண்டும் என்ற ஆவல் மற்றும் எதிர்பார்ப்பு உணர்வு என அனைத்தையும் சக தோழி ஒருத்தியிடம் பகிர்ந்துகொள்ளும் பாவனையில் பதிவுசெய்தாள் ஆன். 1942 ஜூன் 14 தொடங்கி 1944 ஜூலை 15 வரை இரண்டு ஆண்டுகள் நீள்வது அந்த நாட்குறிப்பு.
  • நாஜிப் படையினரால் ஓட்டோவின் குடும்பம் பிடிக்கப்பட்டு, வதை முகாமுக்கு அனுப்பப்பட்டது. ஆனும் அவள் சகோதரியும் தனி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டைபஸ் தொற்றுநோய்க்கு ஆளாகி, வாழ வேண்டிய குழந்தை ஆன், 15 வயதில் மறைந்துபோனாள்.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஆன் எழுதிய நாட்குறிப்பு, அவர்கள் வீட்டுப் பணிப்பெண்ணால் கண்டெடுக்கப்பட்டு ஆனின் தந்தை வசம் சேர்க்கப்பட்டது. பிற்காலத்தில் அது நூலாக உருப்பெற்றது. 70க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், போர்க்காலச் சூழலையும் அதன் அவலங்களையும் குழந்தைகளின் நிராசைகளையும் வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது.

சராயேவோவின் ஆன் ஃபிராங்க்

  • 1991 முதல் 1993 வரை நம் சம காலத்தில் போஸ்னியாவில் நிகழ்ந்த போர் குறித்து, அந்நாட்டின் சராயேவோ நகரைச் சேர்ந்த ஸ்லெட்டா ஃபிலிப்போவிக் என்ற 13 வயதுச் சிறுமி தன் நாட்குறிப்பில் பதிவுசெய்திருக்கிறாள். போரினால் தங்கள் குடும்பமும் தன்னைப் போன்ற குழந்தைகளும் அனுபவித்த துயர் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்ததன் மூலம் சராயேவோவின் ஆன் ஃபிராங்க்என அழைக்கப்படுபவள் அவள்.
  • போருக்கு முன்னதான ஸ்லெட்டாவின் வாழ்க்கை பள்ளிப் படிப்பு, பாப் இசை, திரைப்படங்கள், மலைகளில் பனிச்சறுக்கு, தோழிகளுடன் அரட்டை, விளையாட்டு என மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பியது. ஆறு மாத இடைவெளியில் இவை அத்தனையும் மாறிப்போயின. செர்பியப் படைகள் பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தபோது, அவளின் அத்தனை சந்தோஷமும் காணாமல் போனது. வீட்டுக்குள்ளேயே தாய், தந்தை, அத்தையுடன் பதுங்கி வாழும் வாழ்க்கை அனைத்தையும் தலைகீழாக்கியது. ஓயாமல் வீசப்பட்ட குண்டுகளும், வெடிச்சத்தமும் பெரும் பதற்றத்தை உருவாக்கின. 1991 செப்டம்பர் 2 ஆம் நாளன்று ஸ்லெட்டா எழுதத் தொடங்கிய நாட்குறிப்பு போர் எதிர்ப்பின் ஒரு குறியீடாகவே 1993 அக்டோபர் 17 வரை நீண்டது. தான் எழுதிய நாட்குறிப்பைத் தன் ஆசிரியர் வசம் ஒப்படைத்தாள் ஸ்லெட்டா. யுனிசெஃப் உதவியுடன் அது நூல் வடிவம் பெற்றது.

இளம் சமாதானத் தூதரான சமந்தா

  • அணு ஆயுதங்களைத் தங்கள் வசம் வைத்திருக்கும் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் 1980களில் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப்போர் உருவாகலாம் என்ற பதற்றத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியிருந்தன. இதைத் தணிக்கும் முயற்சியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டவள் சமந்தா ரீட் ஸ்மித் என்ற பத்து வயது அமெரிக்கச் சிறுமி.
  • பனிப்போருக்கு முடிவு கட்டுங்கள்என்பதை வலியுறுத்தி சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஆண்ட்ரபோவ்க்குக் கடிதம் எழுதினாள் சமந்தா. அந்தக் கடிதத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சோவியத் ஒன்றியச் செய்தித்தாள் பிராவ்தாவில் அக்கடிதம் வெளியானது. மீண்டும் சமந்தாவின் வலியுறுத்தலால், ‘அணு ஆயுதங்களை எந்த நாட்டுக்கு எதிராகவும் முதலில் பிரயோகிக்கமாட்டோம்என்று ஆண்ட்ரபோவ் உறுதி அளித்தார். அவரது அழைப்பின் பேரில் சமாதானத் தூதுவராக 1983 ஜூலை மாதத்தில் சோவியத் ஒன்றியத்துக்கு இரு வாரங்கள் தன் பெற்றோருடன் பயணம் மேற்கொண்டாள் சமந்தா. இந்த இளம் சமாதானத் தூதர் 1985 ஆம் ஆண்டு லண்டனிலிருந்து திரும்பும் வழியில் விமான விபத்தில் பலியானாள். 13 வயதுக்குள் சமந்தாவின் வாழ்க்கை முற்றுப் பெற்றது ஆறாத்துயரம்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்