TNPSC Thervupettagam

அம்பேத்கர்: பகுப்பாய்வு முறையியலின் நவீன முகம்

December 6 , 2023 211 days 139 0
  • ஆய்வுக்கான அணுகுமுறைகளின் வகைகள், சர்வதேச அளவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன. கல்விப்புலத்துக்கு உள்ளேகூட துறைகளுக்குள் துறைகள் உருவாகி ஆய்வின் பொருளை நுணுக்கமாக்கிக் கொள்வதற்கான வெளிகள் அதிகரித்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, சமகால ஆய்வுகளில் புதிய வெளிச்சம் படர்ந்திருப்பதற்குக் காரணம், கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியப் பார்வையோடு இணங்கியும் பிணங்கியும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள்தாம். குறிப்பாக மானிடவியல், சாதி குறித்த ஆய்வுகளைச் சொல்லலாம். இன்றைய ஜனநாயகம், உரிமைப் பங்கீடு ஆகியவற்றுக்கெல்லாம் அந்த ஆய்வுகளே காரணகர்த்தாக்கள்.
  • அந்த வகையில், கடந்த நூற்றாண்டின் ஆய்வுப் பரப்பில் மாபெரும் தாக்கத்தைச் செலுத்தியவராக அம்பேத்கரைக் குறிப்பிடலாம். இந்தியாவில் சாதியமைப்பை மாற்றுப் புரிதலில் பகுப்பாய்வு செய்து அதன் ஆன்மாவாகவும் உடலாகவும் இருப்பனவற்றை முதன்முதலில் வரையறுத்துச் சொன்ன அம்பேத்கரை, அவர் கையாண்ட பகுப்பாய்வு முறையியல் தனித்துவமானவராகக் காட்டியது. இந்தப் பின்னணியில் அம்பேத்கரை உள்வாங்கிக்கொள்வது ஜனநாயக சமூகத்துக்கான அரசியலில் அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள உதவும்.

பகுப்பு முறையியலின் இரு மரபுகள்

  • இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்க காலத்தில் மானிடவியல் ஆய்வுகளில்தான் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டது. அக்காலத்தில் தத்துவங்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள்கூட மானிடவியலின் தாக்கத்தோடு வெளிப்பட்டனவாகவே இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களில் பலரும் மானிடவியலில்தான் விருப்புடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட இந்தியர்களின் வேறுபாடுகளை அறிந்துகொள்ள மானிடவியல் உதவும் என்று நம்பினார்கள். அதற்குத்துணை ஆய்வாக இனவரைவியலிலும் சிறிது கவனம்செலுத்தினர்.
  • அந்த ஆய்வுகளின் நுவல்பொருளை அவர்கள் பகுப்புச் செய்வதற்குக் கையாண்ட முறைமை ஏற்கெனவே இங்கிருந்த மரபான முறைமையோடு கலந்த ஐரோப்பியப் பார்வையாகவும் அதன் நீட்சியாகவும் இருந்தது. உதாரணத்துக்கு, தென்னிந்தியச் சாதிகளைப் பற்றி ஆராய்ந்த எட்கர் தர்ஸ்டன், மத்திய இந்தியாவின் சாதிகளைத் தொகுத்து ஆவணப்படுத்திய ஆர்.வி.ரஸ்ஸல், வட இந்தியச் சாதிகளைக் குறித்து விரிவாக விளக்கிய இ.எ.எச்.பிளண்ட் ஆகியோரின் ஆய்வுகளைச் சொல்லமுடியும். இன்னொரு உதாரணமாக, ரிஸ்லியின் ஆய்வுகளைச் சுட்டலாம். ரிஸ்லி, 1908இல் வெளியான தனது ‘இந்தியாவின் மக்கள்’ (The People of India) நூலின் முதல் இயலில் எட்டாம் பகுதியில் அந்த நூலை எழுதுவதற்குக் கிடைத்த புதிய ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார்.
  • அவை யாவும் வேதங்களின் குறிப்புகளாகவும் முற்கால சம்ஸ்கிருத இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்டனவாகவும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ரிஸ்லிக்குக் கொடுத்து உதவியவர்கள் கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜஸ்டிஸ் முகர்ஜி, கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சாரதா சரண்மித்ரா உள்ளிட்டோர். அதனாலேயே அந்த நூலில் இந்தியாவுக்கே உரிய மரபான பகுப்பும் ஐரோப்பியத் தன்மையும் இருந்தது. இது அக்காலப் பகுப்பாய்வில் ஒருவகை; மானிடவியல் ஆய்வும்கூட. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 1910களின் இறுதியில் இந்தியாவுக்குத் திரும்பியிருந்த அம்பேத்கர், பின்னாளில் தன்னுடைய ஆய்வுகளில் மேற்கூறியவர்களின் ஆய்வு முடிவுகளை மறுத்தார்.
  • சாதியின் அமைப்பை ஜனநாயகத் தன்மையில் விளக்கி உரைப்பதற்கு ரிஸ்லி உள்ளிட்டவர்களின் மானிடவியல் அணுகுமுறையில் இடமில்லை என்பது அம்பேத்கரின் நிலைப்பாடு. ஆகவே, அதிலிருந்து தம்மை முற்றாக விலக்கிக்கொண்டு, பகுத்துச் சொல்வதைப் பெரும்போக்காகவும் ஒவ்வொரு பகுப்புக்குமான காரணத்தை அதுவரை இருந்த மரபுக்கு அப்பாலிருந்து சான்று காட்டி விளக்குவதையும் தமது ஆய்வு முறையியலாகத் தேர்ந்துகொண்டார்.
  • உதாரணத்துக்கு, ‘அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 10’இல், சாதி, வகுப்பு ஆகியவற்றுக்கு அவர் தரும் வேறுபாட்டு விளக்கத்தையும் அதைத் தொடர்ந்து சாதிகள் குறித்து அவர் செய்திருக்கும் பகுப்பையும் சொல்லலாம். சவர்ண சாதிகள் வகுப்பு - I,வகுப்பு - II, அவர்ண சாதிகள், சாதியற்றவர்கள் எனப் பகுக்கும் அவர், இன்னும் நுணுக்கமாக, ஒவ்வொரு வகுப்பிலும் இடம்பெறும் சாதிகளைப் பட்டியலிடுகிறார்.
  • அவர் பகுப்புக்குச் சொல்லும் காரணங்கள் ஒவ்வொரு சாதியும் தன்னை வேறுபடுத்தி நிறுவிக்கொள்வதற்குச் சொல்லும் புராணிகக் காரணங்களை ஒதுக்கி, தர்க்கரீதியானவையாக இருக்கின்றன. இதே நூலில், இன்னொரு இடத்தில் மனிதர்கள் கீழ்ப்படிந்து நடப்பதற்கான காரணங்களை இயற்கைக் கட்டளை, மக்கள் கட்டளை, சட்டக் கட்டளை, சமயக் கட்டளை எனப் பகுக்கும் அம்பேத்கர், ஒரு கட்டளையில் இருந்து இன்னொரு கட்டளை வேறுபடும் விதத்தையும் அது மனிதர்களைக் கட்டுப்படுத்துவதில் கொண்டுள்ள வகிபாகத்தின் அடர்த்தியையும் விவரிக்கிறார். அம்பேத்கரின் இந்த அணுகுமுறையை ரிஸ்லி உள்ளிட்டோரின் அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது புதுமையானதாக இருக்கிறது.

அம்பேத்கரின் ஆய்வு முறைமை

  • சாதிகளின் இயங்குநிலைகளை அறிவதற்குச் சாதிகளைத் தொகுத்து குலம், கோத்திரம் என்னும் மரபான பகுப்பு முறைமையால் ஆராய்ந்து எட்டும் முடிவைவிட, வாழிடம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவற்றைப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடைகளின் அடிப்படையிலும் சாதிகளைப் பகுத்துச் செய்யும் ஆய்வு முடிவுகள் உண்மையாக இருக்கும் என்றும் அம்பேத்கர் கருதினார். ‘அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 2’இல், மாநிலங்கள் - சிறுபான்மையினர் உரிமைகள் பற்றிப்பேசுகிற இடத்தில், ‘இக்கோரிக்கை மனுவைப் பொதுப்படையாகச் சொல்வதைவிட அரசமைப்பின் நகல் ஷரத்துகளாக வரைந்துள்ளேன். துல்லியமாகக் கருத்துச் சொல்ல இந்த அணுகுமுறை நல்ல பயன் தரும்’ என்று தனது பகுப்பு முறைமையியல் குறித்து அவரே தரும் வாக்குமூலம் இதை உறுதிப்படுத்தும்.
  • அம்பேத்கர் இந்தியச் சமூக இயங்கியலில் சமயங்களின் அடர்த்தி குறித்துப் பேசும்போது, சமயத்தை அதன் தன்மை அடிப்படையில் இணை இணையாகப் பகுக்கிறார். வெளிப்படுத்தின சமயம் X இயற்கைச் சமயம், தேசியச் சமயம் X தனிமனிதச் சமயம், புனிதநூல் சமயம் X புனிதநூல் அற்ற சமயம், மூலவர்களால் நிறுவப்பட்ட சமயம் X மூலவர்கள் அற்ற சமயம் என்பது அவரது பகுப்பு. அன்றைய காலத்தில் இந்தப் பகுப்பு சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அம்பேத்கர் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஆழமாக வெளிப்படுத்தி அதில் உள்ள நியாயத்தை நிறுவுவதற்கு இந்தப் பகுப்புமுறை அவருக்குக் கைகொடுத்தது.
  • புனித நூலற்ற சமயத்தைவிடப் புனித நூலைக் கொண்டிருக்கும் சமயம் உயர்வானது என்னும் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறது. ‘உயர்வானது’ என்பதற்குப் பின்னால் ‘உண்மையானது’ என்கிற கருத்தியல் இயல்பாக உருக்கொள்கிறது. இந்த உயர்வு, உண்மை ஆகிய இரண்டும்தான் மக்களை ஒரு குறிப்பிட்ட சமயத்தின் கீழ் தக்கவைக்க உதவுகின்றன என்கிறார் அம்பேத்கர். இந்தப் பகுப்புக்குள்பொருந்தாத உட்கூறைக் கண்டு அவற்றை விளக்குவதற்கு ‘இயற்கைச் சமயம் X வெளிப்படுத்தின சமயம்’ என்றொரு பகுப்பையும் உருவாக்கியிருக்கிறார்.
  • இயற்கைச் சமயம்’ என்பது மக்கள் வளர வளரத் தானும் வளரும் தன்மை கொண்டது. அது மக்களின் தேவைகளுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான வினைப்பாட்டின் விளைவாக உருப்பெறுவதாகும். மனிதர்களின் உண்மை உணர்ச்சியும் மனச்சாட்சியும் அதற்கான சட்டகமாக அமைந்திருக்கின்றன. வெளிப்படுத்தின சமயம் என்பது மனிதனால் செய்யப்பட்டதல்ல. கடவுளால் செய்யப்பட்டது.
  • அதற்கான சட்டகம் ‘கடவுள்’ மட்டுமே. அங்கு உண்மை, மனச்சாட்சி எனச் சொல்லப்படுவதெல்லாம் கடவுளாக மட்டுமே இருக்க முடியும் என்பதாகத் தனது பகுப்பை வகுத்துவிட்டு, அது இந்திய சாதி அமைப்பில் செலுத்திவந்திருக்கும் தாக்கத்தைப் புலப்படுத்துகிறார். இப்படித் தனது கருத்தைக் கூர்மையாகவும் தர்க்கத்துடனும் வெளிப்படுத்துவதற்கு அவர் கைக்கொண்ட பகுப்பு முறை, இங்கு ஏற்கெனவே இருந்த மரபு வழிப்பட்ட பகுப்பு முறைமையிலிருந்து வேறுபட்டது. அந்த அம்சமே அம்பேத்கரின் பகுப்பு முறைமையை இன்றளவும் நவீனமாக வைத்திருக்கிறது. ஜனநாயக வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்தும் சக்தி அந்த நவீனத்துக்கு உண்டு.
  • டிசம்பர் 6: பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாள்

நன்றி: தி இந்து (06 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்