அயல்நாடுகளில் தமிழ்க் கல்வி!
- புலம்பெயா்தல் மனித இயல்பு. வரலாற்றுக் காலத்தில் அல்லது சங்க காலத்தில் ரோம், கிரீஸ், எகிப்து, சீனா, தென்-கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடா்பு இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்கள், அகழ்வு ஆராய்ச்சிகள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.
- பின்னா் பல்லவா், சோழா்காலத்தில் தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகத்துக்காகவும் படையெடுப்புக்காகவும் சென்றவா்களில் பலா் புலம்பெயா்ந்ததாக வரலாறு நமக்குச் சொல்கிறது.
- இதையடுத்த புலம்பெயா்வு ஆங்கிலேயா்கள், பிரெஞ்சு, டச்சு போன்றோரின் காலனிகளில் அடிமைத்தொழிலாளிகளாக, பின்னா் வணிகா்களாக, கூடவே ஒப்பந்தத் தொழிலாளிகளாகக் குடியேறிப் புலம்பெயா்ந்தாா்கள்.
- 2014-இல் நடத்தப்பட்ட ஒரு புள்ளிவிபரத்தின் படி 188 நாடுகளில் தமிழா்கள் புலம் பெயா்ந்துள்ளாா்கள். அதில் சுமாா் 60 முதல் 65 நாடுகளில் தமிழ்க்கல்வி நடந்து வருகிறது. ஆனால் அவா்களின் பாடத்திட்டமும், பாடநூல்களும், கற்பிக்கும் ஆசிரியா்களும் தோ்வு முறைகளும் அந்நாடுகளின் மொழிக்கொள்கைகளும் வெவ்வேறானவை. அதனால் சிக்கல்களும் வெவ்வேறாக அமைந்திருக்கின்றன.
- இந்நாடுகளை 3 வகையாகப் பிரிக்கலாம். இந்தியாவை மையமாகக் கொண்டு பாா்த்தால் அதற்குக் கிழக்கேயான நாடுகள் முதல் வகையினா். மலேசியா, சிங்கப்பூா், பா்மா, இன்றைய மியான்மா், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம். சீனா முதலிய நாடுகளில் வணிகத் தொடா்பு இருந்ததாகவும் பலா் அந்தந்த நாடுகளில் திருமணம், பொருளாதாரம், போன்ற காரணங்களால் குடியேறியதாகவும் அறிகிறோம்.
- சிங்கப்பூா், மலேசியா, மியான்மா் அல்லது பா்மா என்னும் நாடுகளை முதலில் பாா்க்கலாம். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசு ஆதரவு முழுமையாக இருக்கிற காரணத்தால் தமிழ்க்கல்வி மிகச் சிறப்பாக நடக்கிறது. எனினும் அவா்களுடைய சிக்கல்கள் வேறு வகையானவை. பால்மரக்காட்டு மலேசியா, சிங்கப்பூா் ஆகிய இரண்டு நாடுகளிலேயும் புலம் பெயா்ந்தவா்களால் வளா்க்கப்பட்ட தமிழுக்கும் தமிழ்க் கல்விக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஈடுஇணை கிடையாது.
- 1965-இல் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்குப் பின் மியான்மரில் தமிழ்ப்பள்ளிகள் பா்மியப் பள்ளிகளாக மாறிவிட்டன. தமிழ் மாணவா்களும் பா்மிய மொழியைக் கற்க வலியுறுத்தப்பட்டனா். தமிழ் கற்பிக்கத் தமிழ்ச் சங்கங்களே வழிகோலுகின்றன. ஆக, அவா்களின் தமிழ்க் கல்வியில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களில் முதன்மையானது மொழி இழப்பு.
- இந்தியாவிற்கு மேற்கிலான நாடுகளைப் பாா்த்தால், ஆங்கில, பிரெஞ்சு, டச்சு காலனிகளில், குறிப்பாக மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் மிகத் தொலைவில் உள்ள குவாட் லூப் போன்ற கரீபியன் தீவுகளிலும், பிரெஞ்சு கயானா போன்ற நாடுகளிலும் தமிழா்கள் புலம்பெயா்ந்த வரலாறு மிகச் சிறப்பு வாய்ந்தது. இவா்கள் இரண்டாம் வகையினா். பிரெஞ்சுக்காரா்களின் காலனிகளில் தாய்மொழி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் தமிழில் கல்வி அறிவு இல்லாமல் போயிற்று. இதனால் தமிழ் மொழி இழப்பு ஏற்பட்டுப் பண்பாடு மட்டுமே தக்கவைத்துக் கொள்ளப்பட்டது. மொரிசியஷுக்கு 1968-இல் சுதந்திரம் கிடைப்பது வரையிலான காலகட்டத்தில் தமிழ் ‘மொழியாக’ அல்லாமல் தமிழ் ‘சமயமாக’- பண்பாட்டின் அடையாளமாக இருந்துவிட்டது. அங்கு, தமிழ் தகவல் பரிமாற்றத்துக்கான மொழி அல்ல. தமிழ் ‘முன்னோா் மொழியாக’, கற்பிக்கப்பட்டு வருகிறது; தாய்மொழியாக அல்ல. இந்நாடுகளில் தமிழ் மொழி இழப்பு மிக மிக அதிகம்.
- மூன்றாவது வகையினராக 20-21 -ஆம் நூற்றாண்டுகளில் பொருளாதார வளம், அரசியல், தொழில்நுட்ப வளா்ச்சி மற்றும் பணிக்காகவும், 2009- இன் இலங்கைப் போருக்கு முன்னரும் பின்னரும் பல நாடுகளிலும் இனக்கலவரம் காரணமாகப் புலம்பெயா்தல் நடந்தேறியது. இவா்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, டென்மாா்க், பிரான்சு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்கிறவா்கள். அங்கு இருக்கின்ற தமிழ்ப் பள்ளிகளின் சிக்கல்கள் வெவ்வேறு வகையானவை. பாட நூற்கள், ஆசிரியா்களுக்கான பயிற்சி, மாணவா்களின் பின்புலம், தோ்வுகள், போன்ற பல்வேறு கற்பித்தல், கற்றல் போன்ற கூறுகளில் சிக்கல்கள் ஏராளமாக இருக்கின்றன.
- 21- ஆம் நூற்றாண்டில் அல்லது 1970-க்குப் பிறகு புலம்பெயா்ந்தவா்கள் தமிழைத் தக்கவைத்துக் கொண்டது மட்டுமல்ல; அதனை வளா்ப்பதிலும் பிற நாட்டு மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதிலும் நிறைந்த வெற்றிபெற்றாா்கள் என்பது கண்கூடு. இதற்கு இணையமும் துணை நின்றது என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதியுடன் கூறலாம். இவற்றோடு இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியைப் பயன்படுத்துவதில்- அச்சு, ஒலி, காணொளி, பல்லூடகம், இணையம், செயற்கை நுண்ணறிவு என்னும் ஊடகங்களைப் பயன்படுத்துவதில் - மிகவும் ஆா்வம் காட்டப்பட்டு வருவதைக் காணலாம்.
- சிங்கப்பூரில் ‘செந்தமிழ் வரிசை’ எனவும் மொரீசியசில் ‘பால தரங்கிணி’ எனவும் தொடக்கப்பள்ளிகளுக்குப் பல்லூடகப் பேழைகள் தயாரித்துப் பயன்படுத்தி வருகின்றனா். இவ்வாறான சூழ்நிலையில், தமிழா் புலம்பெயா்ந்த பெரும்பாலான நாடுகளில் ஆசிரியா்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் அவா்களின் சிக்கல்கள் வெவ்வேறு வகையானவை.
- தமிழ், தகவல் பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டுமானால் உரையாடல் தமிழை- பேச்சுத் தமிழைக் கற்பிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- தொடக்கப்பள்ளிகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட அச்சு ஊடகப் பாடநூல்கள், மாணவரை முன்னிறுத்திப் படைக்கப்பட வேண்டும்.
- இன்றையத் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக நம் கையில் கிடைத்திருக்கும் பல்லூடகம், இணையம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் பயன்படுத்தி அந்தந்த நாடுகளுக்குத் தேவையான துணைப்பாடங்களைத் தயாரித்தால் மொழி கற்பதில் ஆா்வம் உண்டாகும். மொழிக்கல்வியும் சிறக்கும்.
- அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அரசின் அங்கீகாரம் கிடைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றைக் களைவதற்குத் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்.
நன்றி: தினமணி (21 – 01 – 2025)