TNPSC Thervupettagam

அரசமைப்புச் சிக்கல் ஆகிறதா ஆளுநரின் அதிகாரம்?

February 12 , 2021 1429 days 888 0
  • பேரறிவாளன் கருணை மனு விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்குக் குடியரசுத் தலைவரே உரிய அதிகாரம் கொண்டவர் என்று தமிழக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் எழுவர் விடுதலை குறித்துத் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருபவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வல்லுநர்களுக்கும்கூட அதிர்ச்சியளிக்கும் விதமாய் அமைந்துள்ளது.
  • எழுவரின் விடுதலை எனும் விஷயத்தைத் தாண்டி மாநில அரசின் அதிகாரம் - ஆளுநரின் அதிகாரம் தொடர்பான விவகாரமாகவும் இப்போது இது மாறிவிட்டிருக்கிறது.
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு அளித்திருந்த கருணை மனுவின் மீது முடிவெடுக்கப்படாமல் கால தாமதப்படுத்தப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
  • இவ்விஷயத்தில் உருவான தாமதத்தை அசாதாரணமானது என்று வர்ணித்த உச்ச நீதிமன்றம், ஏழு நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிட்டிருந்தது.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 161-ன் கீழ் பேரறிவாளனுக்கு மன்னிப்பு வழங்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்தை ஒன்றிய அரசு முதன்முறையாக நவம்பர் 2020-ல் முன்வைத்தது. இப்போது ஆளுநர் தரப்பிலும் அதே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • குடியரசுத் தலைவர், ஆளுநர் இருவரில் யாரிடம் கருணை மனு அளிப்பது என்பதைத் தண்டனை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்துவருபவரே முடிவுசெய்துகொள்ளலாம் என்று ஒன்றிய அரசு எதிர். ஸ்ரீஹரன் (2015) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வே தீர்ப்பளித்துள்ள நிலையில் ஆளுநர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் பதிலானது தெளிவான முறையில் தீர்வு காணப்பட்ட அரசமைப்புச் சட்ட கேள்வியொன்றை மீண்டும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
  • ஒன்றிய அரசின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய வழக்கு என்பதால் ஒருவேளை இந்த மனுவின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று ஆளுநர் கருதியிருக்கலாம்.
  • மேலும், இவ்வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தண்டனைக் குறைப்புக்கு 2014-ல் மாநில அரசு முயன்றதையடுத்து, அவ்வாறான நடவடிக்கைக்கு ஒன்றிய அரசின் கருத்தொருமிப்பைப் பெற வேண்டியது அவசியம் என்று 2015-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • எனினும் அதே தீர்ப்பிலேயே அந்தக் கருத்தானது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மட்டுமே கட்டுப்படுத்தும் என்றும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இறையாண்மை அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
  • அது மட்டுமின்றி, இந்த வழக்கில் தண்டனை அளிக்கப் பட்டிருந்தவர்களின் மீது தற்போது நடைமுறையில் இல்லாத பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டதோடு, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலைக் குற்றத்துக்கான சதிக்காக மட்டுமே அவர்கள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளார்கள்.
  • இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழாக அளிக்கப்பட்ட தண்டனையைக் குறைப்பதற்கான ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை.
  • பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கானது, ஆளுநர் முடிவெடுப்பதில் காலம் தாழ்த்துவதைச் சுட்டிக்காட்டுவதோடு உச்ச நீதிமன்றமே இவ்விஷயத்தில் தலையிட்டு விடுவிக்க வேண்டும் என்று கோருகிறது.
  • ஏற்கெனவே நிலோபர் நிஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசமைப்புச் சட்டக் கூறு 142-ன் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டு தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • தண்டனைக் கைதிகளை விடுவிப்பதில் தமக்குள்ள சிறப்பதிகாரத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆளுநரே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தியது.
  • நீதித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் இடையிலான அதிகாரப் பிரிவினைக் கோட்பாடுக்கு உச்ச நீதிமன்றம் கொடுக்கிற முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
  • ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமியற்று அவைக்கு ஆளுநர் கொடுக்கும் முக்கியத்துவம் என்னவென்ற கேள்வி தமிழக ஆளுநரின் முடிவால் இப்போது எழுந்திருக்கிறது.
  • கூடவே, கருணை மனு மீது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள வழிகாட்டும் தீர்ப்புகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
  • தண்டனை அளிக்கும் அதிகாரம் என்பது மன்னிக்கும் அதிகாரத்தையும் உள்ளடக்கியதுதான் என்றாலும் கருணை மனுக்களின் மீது முடிவெடுக்கும் பொறுப்பு நிர்வாகத் துறையிடமே விடப்பட்டுள்ளது.
  • ஆயினும், கூறு 142-ன் கீழாக, உச்ச நீதிமன்றம் எழுவரையும் விடுவிக்க முடியும். அப்படி நிகழும்பட்சத்தில், இந்தியக் கூட்டாட்சி அமைப்பில், ஆளுநருக்கான அதிகாரத்தையும், கூடவே மாநில அரசின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கிய நிலைக்கு ஆளுநரே காரணமாக இருப்பார்!

நன்றி: இந்து தமிழ் திசை (12-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்