- மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். 1999 ஜூலை 23. தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய அறவழிப் போராட்டத்தின்போது, 17 பேரைக் காவல் துறையினர் தாமிரபரணி ஆற்றில் வைத்து அடித்துக் கொன்ற நிகழ்வு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கம்.
- மாஞ்சோலையின் துயரம் அத்துடன் நின்றுவிடவில்லை. 2028ஆம் ஆண்டுடன் மாஞ்சோலைத் தோட்டத்தின் குத்தகைக் காலம் முடிவடையும் நிலையில், அங்குள்ளதொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உள்படப் பலருக்கும் தெரியவில்லை என்பது இன்னும் வேதனை.
- நான்கு தலைமுறைகளாக... திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பக சரணாலயத்துக்கு உள்பட்ட பகுதியில், கடல் மட்டத்தில்இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலைத் தோட்டம். மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து,குதிரைவெட்டி என ஐந்து தேயிலைத் தோட்டங்களையும் (எஸ்டேட்) உள்ளடக்கியது அது.
- கிராமங்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள், அடக்குமுறைகள், பஞ்சம் பட்டினியிலிருந்து தப்பிப்பதற்காக ஏராளமானோர் மாஞ்சோலைக்குச் சென்று நான்குதலைமுறைகளாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்த்துவருகிறார்கள்.
- ஆரம்பத்தில் சுமார் 10,000 பேர் வேலை பார்த்தார்கள். இதில் 70% தமிழர்களும், 30% மலையாளிகளும் இருந்தனர். தற்போது மொத்தம் 700 குடும்பங்களும், சுமார் 2,150 தோட்டத் தொழிலாளர்களும் கூலி வேலை செய்துவருகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இந்தத் தேயிலைத் தோட்டத்தையே நம்பி உள்ளது.
இரண்டு நூற்றாண்டுகள் வரலாறு:
- சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற அரியணைப் போராட்டத்தில், நேரடி வாரிசான சேரன் மார்த்தாண்டவர்மனைத் துரத்திவிட்டு, ஒரு குழு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.
- அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம்,சிங்கம்பட்டி ஜமீன்தாருடன் கிடைத்த நட்பின்மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் சேரன் மார்த்தாண்டவர்மன்.
- தனது வெற்றிக்கு உதவியதற்காகவும், அந்தப் போரில் ஜமீன்வாரிசான நல்ல புலிக்குட்டியை இழந்ததற்காகவும், மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த 74,000 ஏக்கர் வனப்பகுதியைச் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குக் கொடையாக மார்த்தாண்டவர்மன் கொடுத்தார்.
- மதராஸ் மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சிங்கம்பட்டி ஜமீன்தாருடைய மகன் மீது கொலை வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது. 1918இல் அவ்வழக்கின் விசாரணை தமிழ்நாட்டிலிருந்து பம்பாய் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
- வழக்குச் செலவுக்காகச் சிங்கம்பட்டி ஜமீன்தார் தன்னிடமிருந்த நிலத்தில் 8,374 ஏக்கர் நிலத்தை,99 வருடக் குத்தகைக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி) என்கிற தனியார் நிறுவனத்துக்கு 1930இல் கைமாற்றினார்; அந்த நிலம்தான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டமாக மாறியது.
முடிவுக்குவரும் குத்தகைக் காலம்:
- இந்தச் சூழலில், தமிழ்நாடு வனச் சட்டம் 1882, தமிழ்நாடு எஸ்டேட் (ஒழிப்பு-ரயத்வாரி மாற்றுதல்) சட்டம் 1948 ஆகியவற்றின்படி சிங்கம்பட்டி ஜமீன்தார் வசமிருந்த ஒட்டுமொத்த வனப்பகுதியையும் 1952 பிப்ரவரி 19 அன்று தமிழ்நாடு அரசே எடுத்துக்கொண்டது.
- அதன்பிறகு, 1958 ஆகஸ்ட் 5 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 2919இன்படி தமிழ்நாடு அரசு, பிபிடிசி தேயிலை நிறுவனத்துடனான குத்தகையை நீட்டித்துகொண்டது. இந்நிலையில், 99 ஆண்டு காலக் குத்தகைக் காலம், 2028 பிப்ரவரி 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.
- இதற்கிடையே, மாஞ்சோலைப் பகுதி அமைந்துள்ள 8,374 ஏக்கர் நிலத்தையும் தங்கள் பெயருக்கு ரயத்வாரி பட்டா வழங்கக் கோரி பிபிடிசி நிர்வாகம் வழக்கு தொடுத்தது. திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்ற அனைத்து வழக்குகளும் குத்தகைதாரருக்கு ரயத்வாரி பட்டா வழங்க இயலாது எனத் தள்ளுபடி செய்யப்பட்டன.
- அதன் பிறகு, மாஞ்சோலைப் பகுதியானது அரசாணை எண். 3 (கு-14)நாள் 12.01.2018 (சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை) இன்படி தமிழ்நாடு வனச்சட்டம், 1882 பிரிவு 16இன்கீழ் காப்புக் காடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் எதிர்காலம்:
- குத்தகைக் காலம் முடிந்தவுடன் பிபிடிசி நிறுவனமும், அங்குள்ள தொழிலாளர்களும் மாஞ்சோலையைவிட்டு வெளியேறியாக வேண்டும். மாஞ்சோலையில் தற்போது வசிக்கும் குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரம் குறித்த தகவலைத் தமிழ்நாடு அரசுக்கோ, நீதிமன்றப் பார்வைக்கோ பிபிடிசி நிர்வாகம் கொண்டுபோகவில்லை.
- தற்போது மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலைக்குச் சுற்றுலாப் பேருந்தும், மணிமுத்தாறு அணையில் படகுச் சவாரியும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால், சுற்றுலாப்பயணிகள் மீது காட்டப்படும் அக்கறையில் ஒரு சதவீதம்கூட அங்கேயே வேலை பார்த்துவரும் தொழிலாளர்கள் மீது காட்டப்படவில்லை.
- தோட்டத்தில் வேலை பார்த்து கணக்கு முடித்து, தற்போது வெளியூர்களில் வசித்துவரும் முன்னாள் தொழிலாளர்கள், அங்குள்ள உறவினர்களின் வீடுகளில் நடக்கும் சுக துக்கங்களில் பங்கேற்க முடியவில்லை. குறிப்பாக எஸ்டேட்டில் இருக்கும் தங்களின் பெற்றோர், உறவினர்களின் கல்லறைகளுக்குப் போக முடியாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
- காரணம், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்களின் உறவினர்களைப் பார்க்கவோ அவசரத் தேவைகளுக்கோ தோட்டத்துக்கு அரசுப் பேருந்தில் செல்வதற்கு வனத் துறை அனுமதி மறுக்கிறது. தங்கள் சொந்த வாகனங்களில் செல்ல வேண்டுமென்றால்கூட வனத் துறையிடம் இரண்டு நாள்களுக்கு முன்பே அனுமதி பெற்றுத்தான் போக வேண்டும். இதனால் சாமானியத் தொழிலாளிகள் சிரமப்படுகிறார்கள்.
- மாஞ்சோலையில் பெய்த கனமழையால் தோட்டத்துக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. பிபிடிசி நிர்வாகத்துக்கும் வனத் துறைக்கும் இடையே நடக்கும் பனிப்போரில் தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் எஸ்டேட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 2ஜி இணைய சேவை மட்டுமே கிடைப்பதால், பெருந்தொற்றுக் காலத்தில் நடந்த இணையவழி வகுப்புகளில் தோட்டப் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தவித்தனர்.
- இதை அத்தனை நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் செய்தியாக்கின. ஆனாலும் அங்குள்ள மாணவர்களின் வாழ்வில்இன்னும் ஒளி ஏற்றப்படவில்லை. இதனால், அங்கு இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
அரசு கவனம் செலுத்துமா?
- குத்தகைக் காலம் முடிந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களின் எதிர்காலமே கருகிவிடும். எனவே, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (டான் டீ) உருவாக்கி, அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தியதைப் போல மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தையும் தமிழ்நாடு அரசேஎடுத்து நடத்த வேண்டும்.
- தொழிலாளர்களுக்காகக் கூட்டுறவு சங்கம் உருவாக்கி, அவர்களின் வேலைக்கேற்ப ஊதியத்தை அரசே வழங்க வேண்டும். மற்ற தேயிலைத் தோட்ட நிறுவனங்களைப் போலவே அனைத்து உரிமைகளும், பண பலன்களும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நான்கு தலைமுறைகளாக அங்கு வாழும் தொழிலாளர்களின் கண்களுக்கு முன்பாகவே மாஞ்சோலை மறையப்போகிறது என்பது ஒரு சொல்லொண்ணாத் துயரம்.
- ஒருவேளை, தமிழ்நாடு அரசு மாஞ்சோலை தோட்டத்தைத் தொடர்ந்து நடத்தாமல், காப்புக் காடுகளுக்காகத் தோட்டத்தை மூடப்படும்பட்சத்தில், தற்போதுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியூர்களில் இலவசப் பட்டா நிலம் வழங்கி மாற்று வாழ்விடம், மாணவர்களின் தடையில்லாக் கல்வி, எதிர்கால வாழ்வாதாரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
- தொழிலாளர்கள் இதுவரை வேலை பார்த்த காலத்தைக் கணக்கிட்டு ஊதியம், ஓய்வூதியப் பலன்களை வழங்குவதோடு மட்டுமில்லாமல், மீதமுள்ள பணிக்காலத்தையும் கருத்தில் கொண்டு, மொத்தமாக ஒரு வைப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை அரசு கைவிட்டுவிடக் கூடாது!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 05 – 2024)