TNPSC Thervupettagam

அரசின் தீவிரக் கவனத்தைக் கோரும் வானிலை நிகழ்வுகள்

November 21 , 2024 56 days 94 0

அரசின் தீவிரக் கவனத்தைக் கோரும் வானிலை நிகழ்வுகள்

  • 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 67 நாள்களுக்குத் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தமிழ்நாடு எதிர்கொண்டதாகவும், தேசிய அளவில் 255 நாள்கள் (மொத்தமுள்ள 274 நாள்களில்) தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டதாகவும் டெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • 2023இல் இதே காலத்தில் தமிழ்நாடு 27 நாள்களும், தேசிய அளவில் 2023இல் 235 நாள்களும், 2022இல் 241 நாள்களும் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்பு தேசிய அளவில் 18% அதிகரித்துள்ளது. தீவிர வானிலை நிகழ்வுகள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஆண்டு அவற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. தீவிர வானிலை நிகழ்வுகள் நடைபெறும் நாள்கள் அதிகரித்துள்ளது மட்டுமில்லாமல், அவை தீவிரமடைந்துள்ள, மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
  • நிலச்சரிவு, வெப்ப அலை, குளிர் அலை, நீரிடி (cloudburst), பனிப்பொழிவு உள்ளிட்டவை தீவிர வானிலை நிகழ்வுகள் என்று வரையறுக்கப்பட்டாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெப்பநிலை உயர்வு, கனமழை, புயல், வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளே அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை வேளாண்மை, கட்டமைப்பு வசதிகள், உள்ளூர் சமூகங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. 2024இல் 25 பேரும், 14 கால்நடைகளும் பலியாகியுள்ளனர்; 149 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,039 ஹெக்டேர் அரிசி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களின் சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், உணவு உத்தரவாதமும் கேள்விக்குறியாகிறது.
  • தேசிய அளவில் மத்தியப் பிரதேசம் தீவிர வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்த அதிக நாள்களை (176) எதிர்கொண்ட மாநிலமாகவும் கேரளம் அதிக உயிரிழப்பைச் (550) சந்தித்த மாநிலமாகவும் உள்ளன. பொதுவாக, நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஐந்து ஆண்டுகள், அதற்கும் குறைவான காலத்துக்குள் நிகழத் தொடங்கியுள்ளன. அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் இந்த ஆய்வறிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அன்றாடத் தரவுகளையும் மாதாந்திரச் சுருக்க அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது.
  • வானிலை நிகழ்வுகள் அனைத்தும் வானிலை ஆய்வு மையம் மூலம் உரிய வகையில் பதிவுசெய்யப்பட்டாலும், அவற்றை முன்கணிப்பதிலும் அவற்றால் விளையும் சேதத்தின் அளவைக் குறைப்பதிலும் நமது அரசுகள் கூடுதல் அக்கறை காட்டத் தொடங்க வேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவது குறித்து நமது அரசுகள் தீவிரம் காட்டத் தொடங்கவில்லை. ஆனால், அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டே ஆக வேண்டிய அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
  • இதுபோன்ற நிகழ்வுகளால் உழவர்கள், சாதாரண உழைக்கும் மக்கள், ஏழை எளியோர் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகளில் இருந்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வெப்ப அலையை நஷ்ட ஈட்டுக்கு உரிய பேரிடர்களில் ஒன்றாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இதுபோல் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் பயிரிழப்புக்கு உரிய வகையில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டால் மட்டுமே உழவர்களும் வேளாண் தொழிலாளர்களும் எதிர்காலத்தில் வாழ்வது சாத்தியப்படும். இது குறித்த கொள்கைகளையும் நடைமுறைச் செயல்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்