- கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் தீவிரமடைந்திருக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை, எச்சரிக்கை மணியடித்துக் கோடை காலத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழையும் வட கிழக்குப் பருவமழையும் பொய்த்துப்போனது, நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு சரிந்தது ஆகியவற்றின் விளைவால் தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரு நகரில் வாழும் 1.5 கோடி மக்களுக்குத் தினமும் 145 கோடிலிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
- இது 95 கி.மீ. தொலைவிலுள்ள காவிரியிலிருந்து கொண்டுவரப்படுகிறது; சுமார் 60 கோடி லிட்டர் தண்ணீர், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படுகிறது. எனினும் பெங்களூருவில் உள்ள 13,900 ஆழ்துளைக் கிணறுகளில், 6,900 ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுவிட்டதால் நிலைமை மோசமடைந்திருக்கிறது.
- தலைப்புச் செய்திகள் தலைநகரை மட்டுமே மையமிட்டிருந்தாலும் தண்ணீர்ப் பற்றாக்குறையின் பாதிப்புகள் 7,000 கிராமங்கள், 1,100 வார்டுகள், 220 தாலுகாக்கள் வரை பரந்துவிரிந்திருக்கின்றன. தண்ணீர்ப் பற்றாக்குறை தீவிரமடைந்திருக்கும் நிலையில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றப் பணித்திருக்கின்றன.
- இந்தியாவின் ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு’ எனப் புகழப்படும் பெங்களூரு, மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்றது; அத்துடன் தண்ணீர்ப் பிரச்சினையும் இணைந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பெங்களூருவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியிருக்கிறது.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் முனைப்பிலுள்ள ஹைதராபாத், புணே போன்ற நகரங்கள் பெங்களூருவின் தற்போதைய சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 30-40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை பெங்களூரு எதிர்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் அரசை விமர்சிப்பதற்காக இப்பிரச்சினையைச் சிலர் அரசியல் ஆக்குவதாகக் கர்நாடகத் துணை முதலமைச்சரும் நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியிருக்கிறார்.
- மேலும், என்ன விலை கொடுத்தாலும், தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்குக் காவிரியில் 2.5 டிஎம்சி (விநாடிக்கு 998 கன அடி) நீர் திறந்துவிட, பிப்ரவரி 1 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
- ஆனால், தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறிய கர்நாடகம், தண்ணீரைத் திறக்கவில்லை. இந்நிலையில், காவிரியில் மார்ச் மாதம் கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து முடிவெடுப்பதற்காகக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம், அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் மார்ச் 21 அன்று புதுச்சேரியில் கூடுகிறது. இந்தப் பின்னணியில்தான், டி.கே.சிவகுமாரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- காவிரியின் குறுக்கே மேகேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதற்குரிய ஏற்பாடுகளைக் கர்நாடகம் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், தற்போதைய தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் கர்நாடகம் பறிப்பதைத் தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது.
- வரைமுறையற்ற நகரமயமாக்கலின் விளைவுகளை பெங்களூருவைப் போலவே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையும் எதிர்கொண்டிருக்கிறது. 2019இல் சென்னையில் ஏற்பட்ட கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை அப்படிப்பட்ட ஒன்றுதான்.
- பாசனத்துக்குக் காவிரியையும் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரையும் எப்போதும் முழுமையாக நம்பியிருக்க முடியாது. அரசியல்ரீதியாக நம்முடைய உரிமைகளை உறுதிசெய்யும் அதே வேளையில், தண்ணீரில் தன்னிறைவு அடையும் வழிகளைக் கைக்கொள்ள வேண்டியதும் அரசின் கடமை.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2024)