TNPSC Thervupettagam

அரசியலில் தரவுப் பகுப்பாய்வின் பங்கு

June 5 , 2024 220 days 190 0
  • இன்றைய நவீன உலகில் கணினியின் பயன்பாடு இல்லாத துறைகளே இல்லை எனலாம். பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுவரும் கணினியின் பயன்பாட்டில், பெரும்பாலான தொழில் நிறுவனங்களால் நுகர்வோர் பற்றிய ஆய்வுக்கும் சந்தைப்படுத்துதல் சார்ந்த உத்திகளுக்கும் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) பயன்படுத்தப்படுகிறது.
  • நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் அரசியல் களத்தில் தரவுப் பகுப்பாய்வு முக்கியத்துவம் பெற்றிருந்ததைப் பார்த்தோம். அனல் பறக்கும் மேடைப் பேச்சுக்கள், மாநாடுகள், கட்சி ஊர்வலங்கள், கண்கவர் சுவரொட்டிகள், பிரபலங்களின் பரப்புரைகள் ஆகியவற்றோடு சில ஆண்டுகளாகத் தரவுப் பகுப்பாய்வும் அரசியல் களத்தில் முக்கியப் பங்குவகித்துவருகிறது.

வணிக நிறுவனங்களும் கட்சிகளும்:

  • ஓர் அரசியல் கட்சியின் நிர்வாக அமைப்பை வணிக நிறுவனங்களின் நிர்வாக அமைப்போடு ஒப்பிடலாம். வணிக நிர்வாக அமைப்பானது - உயர்மட்ட நிர்வாகம், நடுத்தர நிலை மேலாண்மை, கீழ்நிலை நிர்வாகம் என மூன்று நிலைகள் கொண்ட பிரமிடு அமைப்பாகும்.
  • இதில் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பிரமிடின் முதல் நிலையான உயர்மட்ட நிர்வாகத்திலும், மேலாளர்கள் இரண்டாம் நிலையான நடுத்தர நிலையிலும், ஊழியர்கள் மூன்றாம் நிலையான கீழ்நிலை நிர்வாகத்திலும் செயலாற்றுகின்றனர். அரசியல் கட்சியின் அமைப்பிலும் தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர்.
  • ஊழியர்கள், மேலாளர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தலைமை நிர்வாக அதிகாரி முடிவுகளை எடுத்து வணிக உத்திகளைச் செயல்படுத்துகிறார். சேகரிக்கப்பட்ட இந்தத் தகவல்களே - முடிவுகளை எடுக்கப் பக்கபலமாக அமைகின்றன.
  • அரசியல் கட்சிகளும் வாக்குச் சாவடிகள், தொண்டர்கள், கட்சிகளின் தொழில்நுட்பப் பிரிவு, தரவு ஆலோசனை மையங்களிலிருந்து வயது, சாதி, மதம், பாலினம், ஊர் போன்ற வாக்காளர்கள் தொடர்பான தரவு விவரங்களைத் திரட்டுகின்றன. இந்தத் தரவுகளின் அடிப்படையில் முதல் நிலை உத்திகளான வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள் போன்ற முக்கிய முடிவுகள் செயல்படுத்தப்படுகின்றன.
  • வணிக நிறுவனங்களைப் போலவே அரசியல் கட்சிகளும் தொழில்நுட்பப் பிரிவை உருவாக்கியுள்ளன. இரண்டாம் நிலை உத்திகளாகத் தொகுக்கும் நெறிமுறை (Clustering Algorithm), இலக்கு சார்ந்த சந்தைப்படுத்துதல் (Targeted Marketing) ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.
  • தொகுக்கும் நெறிமுறையைப் பயன்படுத்தி, தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையாளர்கள் என வாக்காளர்களை அரசியல் கட்சிகள் பகுக்கின்றன. இந்த நிலையில்தான் தரவுப் பகுப்பாய்வானது, அரசியல் கட்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகிறது.
  • தொகுக்கும் நெறிமுறையானது நடுநிலை வாக்காளர்களைத் தனிப்பட்ட குழுவாக அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர்களின் மக்கள்தொகை, வயது, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தவும் உதவுகிறது.
  • நடுநிலை வாக்காளர்களை இலக்காகக் கொண்டு இலக்கு சார்ந்த சந்தைப்படுத்துதல் செயல்படுத்தப்படுகிறது. தொழில்நுட்பப் பிரிவானது கட்சியின் விளம்பரங்கள், வாக்குறுதிகள், சாதனைகள் போன்றவற்றைக் காணொளிகள், ஒளிப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளாக வாட்ஸ்அப், வலைப்பக்கங்கள், சமூக வலைதளங்கள் போன்றவை வாயிலாக அனுப்புகின்றது.
  • மக்கள்தொகை மிகுந்த நம் தேசத்தில் வீடுவீடாகச் சென்று ஓட்டுச் சேகரிப்பது மிகவும் சவாலாகிவிட்ட நிலையில், இந்தச் செயல்பாடானது வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.
  • பாமர மக்களுக்கு நலத்திட்டங்கள், கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகள், பெண்கள் - முதியவர்களுக்கு சம்பந்தப்பட்ட நலத்திட்டங்கள், வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் என ஒவ்வொரு தொகுப்புக்கும் (Cluster) தனிப்பட்ட விளம்பரங்களை அனுப்புகிறது. சமூக வலைதளங்களில் உலவும் செய்திகள் மூலம் மக்களின் கருத்துகளை உணர்வுசார் பகுப்பாய்வு (Sentiment analysis) மூலம் கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல தங்கள் ஊகங்களை வகுக்கத் தரவுப் பகுப்பாய்வு முக்கியப் பங்காற்றுகிறது.

தரவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம்:

  • கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழலால் முதன்முறையாக உலகெங்கிலும் உள்ள வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்பது தரவுச் செயலாக்கம், அரசியல் பிரச்சாரத்துக்கான தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஓர் ஆலோசனை நிறுவனம். 2014இல் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஆராய்ச்சியாளரான அலெக்சாண்டர் கோகன் என்பவருடன் இணைந்து, ‘திஸ் இஸ் யுவர் டிஜிட்டல் லைஃப்’ என்கிற ஃபேஸ்புக் பயன்பாட்டை உருவாக்கியது.
  • பயனர்களுக்கு இடுகையிடப்பட்ட ஆளுமை சார்ந்த விநாடி - வினாவின் அடிப்படையில் பயன்பாட்டுத் தரவைப் பதிவுசெய்தது. பயனர் சுயவிவரம், விநாடி - வினா பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில், பிற பயனர்களுக்கான பதில்களைக் கணிக்கப் பயன்படும் மாதிரிகளைக் கட்டமைக்கும் அல்காரிதத்தை இந்த நிறுவனம் உருவாக்கியது.
  • பயனர்களிடமிருந்து மட்டுமல்லாமல், அவர்களின் ஃபேஸ்புக் நண்பர்களிடமிருந்தும் அவர்களின் அனுமதியின்றி இந்தப் பயன்பாட்டுத் தரவுகளைச் சேகரித்தது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தனிப்பட்ட வாக்காளர்களின் உளவியல் சார்ந்த சுயவிவரத்தை உருவாக்கவும், இலக்கு வைக்கப்பட்ட விளம்பரப் பிரச்சாரங்களை உருவாக்கவும் இந்தப் பெரிய தரவு பயன்படுத்தப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது. எனவே, தரவு தனியுரிமை, தரவுப் பாதுகாப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

தரவுப் பகுப்பாய்வின் எதிர்காலம்:

  • இந்தியாவில் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள இந்தத் தகவல்கள் மூலம் கிடைத்த பழைய கருத்துக் கணிப்புத் தரவுகள் பயனில்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, செபாலஜி (Psephology) துறையில் ஈடுபட்டுள்ள தரவுப் பகுப்பாய்வு நிபுணர்களுக்குச் சுவாரசியமான காலம் காத்திருக்கிறது. மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள் வாழும் சூழ்நிலையோடு தொடர்புடையதாக உருவாக்கப்படும் தேர்தல் அறிக்கைகள், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
  • தேர்தல் களத்தில் பிரச்சாரங்கள், தேர்தல் அறிக்கைகளுடன் ஒவ்வொரு தனிப்பட்ட வாக்காளரும் தொடர்பு கொண்டிருப்பதைப் பகுப்பாய்வு நிபுணர்கள் உறுதிசெய்கிறார்கள். தேர்தல்கள் வாக்காளரின் உணர்வுகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன, அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கான பெரிய தரவுகள் - கருவிகள் கிடைப்பதால், தேர்தல் பிரச்சாரங்களின்போது சமூக நல்லிணக்கத்தைப் பேணுவது, அரசியல் கட்சிகள், ஒழுங்குமுறை அமைப்புகளின் பொறுப்பாகும்.
  • கையில் தரவு என்னும் ஆயுதத்தை ஏந்திய அரசியல் கட்சிகள், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வாக்காளரையும் கவர்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதிகாட்டும் கட்சிகள், தேர்தலில் வெற்றி வாகை சூடும் என்பது உறுதி.
  • எதிர்காலத்தில் எந்தத் தொழில்நுட்பம் தோன்றி தேர்தல் களத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தினாலும், ஜனநாயகத்தை உறுதியாக வரையறுப்பவையாக சமூக அடித்தட்டு மக்களின் மேம்பாடு, சமூக நல்லிணக்கம், தன் நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகின் நலனை நாடுதல் ஆகியவையே உள்ளன.
  • இதற்காகப் பாடுபடும் தலைவர்களும் கட்சிகளும்தான் ஜனநாயகத்தின் மன்னர்களாக முடிசூட்டப்படுவர். இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் அரசியல், அதனுடன் தொடர்புடைய அறிவியல் படிப்புகளை வழங்கிவருகின்றன.
  • இதன் நீட்சியாகப் பல்கலைக்கழகங்கள், இந்த அரசியல் அறிவியலுடன் தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை இணைத்து, நவீனப் பட்டப்படிப்பை வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அரசியல் ஆர்வமும் பகுப்பாய்வுத் திறனும் கொண்ட மாணவர்கள் இந்த வகையான படிப்பைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம். தரவுகளை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் தரணியை ஆள்கின்றனர்!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்