அரசியலில் புதிய சிந்தனை தேவை
- இந்திய அரசியல் கொள்கை அல்லது சிந்தனை எதிர்காலத் தேவைகளுக்காக எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தை, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் யோகேந்திர யாதவ் சமீபத்தில் எழுதிய இரண்டு கட்டுரைகள் தொடங்கிவைத்துள்ளன. இன்றைய அரசியல் நிலையில் முக்கியமானவற்றை அவர் கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- “நம்முடைய அரசியல் தொலைநோக்குப் பார்வை தளர்ந்துவருகிறது, அரசியல் மேடைகளில் பேசுவதற்கான வார்த்தைகள் சுருங்கிவருகின்றன, அரசியல் பற்றிய நம்முடைய புரிதல் வாடி வதங்கிவருகின்றன, அரசியலைக் கணிப்பதில் நமக்குள் வறுமை தாண்டவமாடுகிறது, அரசியல் கள செயல்களைத் தீர்மானிப்பதில் வீழ்ச்சியே நிலவுகிறது, அரசியல் களத்துக்கான சிந்தனை வற்றிவிட்டது” என்று பட்டியலிட்டிருக்கிறார் யாதவ்.
- இன்றைய அரசியல் குறித்த அவருடைய மதிப்பீடு, உயர்நிலையில், நுணுக்கமான விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
வேண்டும் கூட்டுச் சிந்தனை!
- படித்த அறிஞர்கள், குறிப்பாக அரசியல் அறிவியல் துறையினர் இந்திய அரசியலை மிகக் கவனமாக ஆராய வேண்டும். அது எப்படிப் புதிய வடிவமெடுக்கிறது என்பதை ஆராய்வதுடன், அதை மதிப்பிட வேண்டும், புதிய அரசியல் நிகழ்வுகள் ஏன் நிகழ்கின்றன என்று விளக்க வேண்டும், புதிய வகை அரசியலுக்கான புதிய களம் எது என்று அடையாளம் காண வேண்டும் என்கிறார் யாதவ்.
- இவற்றையெல்லாம் இந்திய அரசியல் அறிவியல் அறிஞர்கள் செய்துகொண்டுதான் இருக்கின்றனர், அவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்று அறிஞர்களில் இன்னொரு பிரிவினர் கூறுகின்றனர். இந்திய அரசியல் கொள்கைகளானது அரசியல் அறிவியலின் துணைக் களமாக எல்லா வகையிலும் செழித்து வளர்ந்துவருகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- இதுவும் உண்மைதான் என்பதை யாதவ் தன்னுடைய பதில் கட்டுரையில் ஏற்கிறார். அதேசமயம், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியல் களத்தில் கற்பனை வளம் மிக்க புதிய சிந்தனைகளும் செயல்திட்டங்களும் வறண்டுவிட்டது ஏன் என்பதே தன்னுடைய கட்டுரையின் கேள்வி என்கிறார். அரசியல் அறிஞர்கள் முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போது அறிவார்த்தமாக குறுக்கிடுகின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்கிறார். இருந்தாலும் இப்போதுள்ள தேக்கநிலை அரசியல் சிந்தனைக்கு ஏன் வந்தோம் என்றும் இந்திய குடியரசுக்கும் அரசியல் கோட்பாடுகளுக்கும் புத்துயிர் ஊட்டுவது எப்படி என்றும் கூட்டாகச் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் யாதவ்.
எப்படி இருக்கிறது கல்விப்புலம்?
- கல்விப்புல ஆய்வுகளில் நடப்பு இந்திய அரசியல் நிலவரம் பாடமாக சேர்க்கப்பட்டுப் படிக்கப்படுகிறது, அரசியல் நடவடிக்கைகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன என்பது உண்மையே; ஆனால், ஆய்வாளர்கள் செய்யும் பகுப்பாய்வுகளுக்கும், உண்மையில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு நேரடியானவை அல்ல.
- அரசியல் தலைவர்கள், படித்த அறிஞர்களிடம் தொடர்புவைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான தேசிய அரசியல் கட்சிகளில் அறிஞர்கள் – படித்தவர்களுக்கென்று தனிப் பிரிவு இருந்தாலும், அவை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட சார்பு அமைப்புகளுடன் தங்களுடைய வேலைகளை முடித்துக்கொள்கின்றன. இவை சுதந்திரமான சிந்தனை அமைப்புகளாக கட்சிக்குள் செயல்படுவதில்லை.
- பல்கலைக்கழகங்களில் தேர்தல் வெற்றிக்கு மாணவர் அமைப்புகளைக் கைப்பற்றுவதற்காகத்தான் இந்தப் பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே கல்வியாளர்கள் அரசியலர்களுக்கு ஆலோசனை கூறி வழிகாட்டுவதற்குப் பதிலாக, அரசியலர்களின் கட்டளைகளை ஏற்று கல்லூரி – பல்கலைக்கழகங்களில் கூட்ட நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்துகின்றனர்.
- கட்சித் தலைமை கூறும் செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் ஊடகத் தொடர்பாளர்களாகத்தான் இந்தப் பிரிவுகளின் தலைவர்கள் பெரும்பாலும் செயல்படுகின்றனர். இதனாலேயே சுயமரியாதையுள்ள கல்வியாளர்கள், அறிஞர்கள் அரசியல் கட்சிகளின் கல்வி அமைப்புகளில் சேர விரும்புவதில்லை.
தேர்தல் மைய அரசியல்
- நம்முடைய அரசியல் எப்போதுமே தேர்தல்களை மையமாகக்கொண்டே இயங்குகிறது. எந்தவொரு தேர்தலையும் போட்டிக்கான களமாகவும் வாய்ப்பாகவுமே அரசியல் கட்சிகள் பார்க்கின்றன.
- சமூக மாற்றம், சமத்துவக் கண்ணோட்டமுள்ள சமூகம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையிலான பொருளாதார நிர்வாகம் போன்ற சிந்தனைகளுக்குப் பதிலாக, அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் களமாக மாற்றப்பட்டுவிட்டன. வாக்காளர்களை வாடிக்கையாளர்களாகக் கருதி, அவர்களுடைய வாக்குகளைக் கவர்வதற்கான சந்தையிடமாக, தேர்தல் களங்கள் மாற்றப்பட்டுவிட்டன. இதனால் அரசியல் தலைமையானது, பெருவாரியான மக்களுடைய ஆதரவைப் பெற, மக்களில் ரக வாரியாக யார் யாருக்கு எந்தெந்த வாக்குறுதிகளை அளிப்பது, இலவசங்களைத் தெரிவிப்பது என்பதை சுருக்கமான ஒற்றை வரி அறிவிப்புகளாகத் தயார்செய்யும் வகையில் அரசியல் கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றிவிட்டது.
- எனவே, படித்த அறிஞர்களுடன் ஆழமாக விவாதித்து, சமூகத்துக்கு நிரந்தரமான நன்மையைத் தரக்கூடிய திட்டங்கள் – கொள்கைகளை அறிவிப்பதற்குப் பதிலாக அன்றைய தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான அறிவிப்புப் பட்டியலைத் தயாரிப்பவையாக அரசியல் களம் நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. உண்மையான அரசியல் களத்தைச் சந்திக்க, தயார் திட்டங்கள் அறிவிப்புகளோடு முன்வரும் தன்னம்பிக்கையை இத்தகையை அணுகுமுறை அளிக்கிறது. எப்படியாவது தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்கே மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது.
- அரசியல் கொள்கை வகுப்புக்கும், கள அரசியல் வாழ்வுக்கும் இடையில் நிலவும் இந்த இடைவெளியை இட்டு நிரப்ப தங்களால் இயன்றவரை அரசியல் கோட்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்திவருகின்றனர் அரசியல் அறிஞர்கள். ஆசுதோஷ் வர்ஷிணி, பிரதாப் பானு மேத்தா, சுஹாஸ் பல்ஸிகர், சந்தீப் சாஸ்திரி, சூரஜ் யெங்டே, ஹரீஷ் வாங்கடே, கிறிஸ்டோப் ஜாப்ரலோட், ராமச்சந்திர குஹா, சஞ்சய் குமார், முகுல் கேசவன், அபய் துபே, அசோக் பாண்டே, பீட்டர் ஆர்.டிசௌசா, சோயா ஹஸன், நீலாஞ்சன் முகோபாத்யாய், நிவேதிதா மேனன், நந்தினி சுந்தர், ராம லட்சுமி, ஆசிம் அலி, யோகேந்திர யாதவ் - இன்னும் பலர் இந்திய அரசியல் கள விவாதங்களுக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்கின்றனர்.
- இந்த வகையில் யோகேந்திர யாதவின் குறுக்கீடுகள் மிகவும் பொருத்தமானவை. தொழில்ரீதியான கல்விப்புல அரசியல் ஆய்வுகளுக்கும், அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையே மிகப் பெரிய பிளவு இருப்பதை அவருடைய கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன. எதிர்காலத்துக்குப் பொருந்தும் கற்பனைகளோடு இந்திய பின்புலத்துக்குப் பொருத்தமான அரசியல் கோட்பாடுகளைச் சிந்தித்துக் கூறுமாறு அரசியல் பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், அரசியலில் இருக்கும் படித்தவர்கள் ஆகியோருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல் அம்சம்
- அரசியல் சிந்தனையில் வீழ்ச்சி ஏற்பட்டுவருவதாக யாதவ் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பாக இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும்.
- முதலாவது, ஒட்டுமொத்தமான சமூக மாற்றத்துக்கான ‘ஆழ்ந்த’ அரசியல் கோட்பாட்டை உருவாக்கியாக வேண்டும். ஆழமற்ற ‘குறுகிய அரசியலுக்கும்’, ‘ஆழ்ந்த அரசியலுக்கும்’ முக்கிய வேறுபாடுகள் இருப்பதை யாதவின் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
- ‘குறுகிய அரசியல்’ என்பது ஒரேயொரு அம்சத்தை சுட்டிக்காட்டி அதற்காக அரசியல் செய்வது. ‘ஆழ்ந்த அரசியல்’ என்பது விரிவான, பல அடுக்குகளைக் கொண்ட, நுட்பமான, கசப்பான உண்மைகளுக்கும் இடம்கொடுக்கிறது, அக முரண்பாடுகளையும் கணக்கில்கொண்டு, அரசியல் கோட்பாட்டை உருவாக்க வேண்டியது பற்றியது. முஸ்லிம்கள் பற்றிய பொது விவாதம் இதற்கு நல்ல உதாரணம்.
- இந்து – முஸ்லிம் பிளவைத் தொடர்ந்து நீடிக்கவைக்க, முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே பிரிவினர் என்று பிரச்சாரம் செய்கிறது இந்துத்துவம். அதனால் முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு கூறும், பிரச்சினைக்குரிய அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
- இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் இப்படி முஸ்லிம்கள் குறித்து அச்சமூட்டும் வகையில் தவறாகப் பேசலாமா என்று இந்துத்துவர்களைக் கேட்கின்றனர். அனைத்துவகை வகுப்புவாதங்களையும் நிராகரிக்க, அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பற்ற, ஜனநாயக விழுமியங்களை அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.
- முஸ்லிம்களுக்குள் நிலவும் உட்பிரிவுகள் குறித்துப் பேசாமல் மௌனம் சாதிப்பதாலும், முஸ்லிம்களிலும் பட்டியல் இனத்தவர் நிலையில் உள்ளவர்களும் பாஸ்மாண்டா (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவினரும் உள்ளனர் என்பதைப் பேச மறுப்பதாலும் பிரச்சினைகள் எழுகின்றன. ஜனநாயகம் என்பது அனைவரும் சமம், சமத்துவ உணர்வோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அத்துடன் இஸ்லாமிய மகளிர் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதும் பேசப்படுவதில்லை.
- இவையெல்லாம் பொது விவாதத்துக்கோ ஆய்வுகளுக்கோ அவசியப்படாதவை, பிரச்சினைக்குரியவை என்றோ ஒதுக்கப்படுகின்றன. இப்படி அக முரண்களைப் பேசாமல் மறைக்கும் போக்குதான், ‘குறுகிய அரசியல்’ என்று யாதவின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்வது இந்துத்துவர்கள் ‘தேசியவாதம்’ என்ற சட்டகத்துக்குள் அனைவரையும் திணிக்க முற்படும் முயற்சிக்கு ஆதரவாகவே முடியும்.
இரண்டாவது அம்சம்
- யாதவின் வாதங்களில் இரண்டாவதான கட்டத்துக்கு வருவோம். இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த போராட்ட இயக்கமானது படித்தவர்களால் வழிநடத்தப்பட்டது, அதுவே அரசமைப்புச் சட்டம் உருவாகவும் வழிசெய்தது.
- சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அரசும் அரசியலும் தேசிய இயக்கத்தின் விழுமியங்களையும் சிந்தனைகளையும் அப்படியே உள்வாங்கின. அரசமைப்புச் சட்டமானது வெறும் சட்ட ஆவணம் மட்டும் அல்ல, அரசியல் அறிக்கையும்கூட; அதுவே மனித முன்னேற்றத்துக்கான சமூக – பொருளாதார சமத்துவத்துக்கும், பரந்துபட்ட சமத்துவக் கண்ணோட்டத்துக்கும் வழிசெய்கிறது.
- வேறு வகையில் சொல்வதானால், புதிதாகவும் மேலும் புரட்சிகரமானதாகவும் சமூகமாற்றத்துக்கான முற்போக்குக் கொள்கைகளை உருவாக்க சட்டப்பூர்வமான மூல விசையாகச் செயல்படுவது அரசமைப்புச் சட்டமே. அவருடைய இந்த யோசனை மேலும் இரண்டு விளக்கங்களுக்கு என்னை இட்டுச்செல்கிறது.
- அரசமைப்புச் சட்டமானது புனிதமானது, அதன் சட்டப்படியான கட்டளைகள் எப்போதுமே ஏற்று நடக்கப்பட வேண்டியவை, அடுத்தது அரசமைப்புச் சட்டமே திருத்தப்படக்கூடிய ஆபத்தும் இருக்கிறது, எனவே அதைப் பாதுகாத்தாக வேண்டும்.
- யாதவின் புதிய கருத்தாக்கமானது நம்மை புதிய அரசியல் பார்வைக்குத் தூண்டுகிறது, புதிய சிந்தனைகள் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அந்த வகையில் இந்த விவாதம் நல்ல பயனை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி: அருஞ்சொல் (15 – 09 – 2024)