- இசை, நாடகம், சினிமா உள்ளிட்ட கலைத் துறைகளில் புகழ்பெற்று விளங்கும் கலைஞர்களைக் காலம்தோறும் அரசியல் களம் ஈர்த்து வந்துள்ளது. ஒரு கட்சியின் கொள்கையோடு தத்துவார்த்த ரீதியாக மனம் ஒன்றும் கலைஞர்கள், அதன் ஆதரவாளர்களாகவும் பிரச்சாரப் பீரங்கிகளாகவும் மாறியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அக்கட்சியின் தவிர்க்க இயலாத முன்வரிசை தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் நமது அரசியல், சினிமா வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருந்த காலத்தில், மக்களை ஈர்க்கும் நாடகக் கலைஞர் களின் சக்தியை அறிந்து, அவர்களைக் காங்கிரஸ் பேரியக்கத்துக்குள் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வெற்றி கண்டவர் தீரர் சத்தியமூர்த்தி.
- அப்படிப்பட்ட காங்கிரஸ், அகில இந்திய அளவில் நடிகர் ராஜ் கபூரை இந்தியாவின் திரையுலக ‘டார்லிங்’ ஆக முன்னிறுத்தியது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் சுதந்திரத்துக்குப் பின்னர் கலைஞர்கள் விஷயத்தில் காட்டிய அலட்சியமும் தென்னிந்திய அரசியல் களத்தில் அதன் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. இதைச் சரியான தருணத்தில் உணர்ந்த ‘தியாகச் செம்மல்’ சின்ன அண்ணாமலை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை காங்கிரஸின் தென்னிந்தியத் திரை ‘ஐகா’னாகத் தூக்கிப் பிடித்தார். அதற்காக அவர் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தைத் தொடங்கி, அதற்கு 7 ஆண்டுகள் தலைவராக இருந்து வழிநடத்தினார்.
- அதனோடு நடிகர் திலகத்தின், கலை, அரசியல் வாழ்வையும் தமிழ்நாட்டின் அரசியலையும் அங்குலம் அங்குலமாக அலசும் ‘சிவாஜி ரசிகன்’ என்கிற பத்திரிகையைத் தொடங்கி, 50 பைசா விலையில் 1.50 லட்சம் பிரதிகள் விற்றுக் காட்டினார். விற்பனையில் வந்த லாபம் அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்தார். தென்னிந்திய இதழியல் உலகில் ஒரு முன்னணி நடிகருக்கென்று தொடங்கப்பட்ட பத்திரிகை இவ்வளவு பெரிய விற்பனையோடு, அரசியல் அரங்கிலும் கொந்தளிப்புகளை உருவாக்கும் உள்ளடக்கங்களுடன் வெளிவந்த ஒன்றாகத் திகழ்ந்தது இன் றைய தலைமுறை அறியாத வரலாறு.
தேர்தலும் பின்னடைவும்
- திராவிட இயக்கமும் அதிலிருந்து கிளைத்த திமுகவும் முன்னெடுத்த அரசியலும் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரமும் 1950இல் தொடங்கி காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்தத் தொடங்கின. மேடைப் பேச்சு, திராவிட நாடகங்கள், திராவிட சினிமா என திமுக சூறாவளியாகச் சுழன்றடித்ததில் இளைஞர்கள் திராவிட அரசியலின்பால் ஈர்க்கப்பட்டார்கள். மேடைப் பேச்சில் புயலையே வீச வைக்கும் பெரும்படையே திமுகவிடம் இருந்தது. காங்கிரஸ் மேடைகளிலோ ஈர்ப்பு மிக்க பேச்சாளர்கள் குறைவு. அவர்களில் நகைச்சுவை, எள்ளல் கலந்த அதிரடிப் பேச்சு பாணிக்குப் பெயர் பெற்றிருந்த சின்ன அண்ணாமலையின் பங்களிப்பும், தமிழ் உணர்ச்சிக் கூட்டும் ம.பொ.சியின் பேச்சு பாணியும் காங்கிரஸ் தரப்புக்குப் போதவில்லை. எம்.ஜி.ஆர்., ஈர்க்கும் பேச்சாளர் இல்லை என்றாலும் அவரது திரைக் கவர்ச்சி திமுகவுக்குக் கூடுதல் ஈர்ப்பாக அமைந்தது.
- ஆனால், காங்கிரஸ் கட்சியின்பால் ஈர்ப்புகொண்டு, மத்தியில் பாகிஸ்தான் யுத்த நிதிக்கும் மாநிலத்தில் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்துக்கும் என காமராஜரின் பல மக்கள் நலத் திட்டங்களுக்கும் நன்கொடைகளை லட்சங்களில் அள்ளிக் கொடுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரை காங்கிரஸ் தனது கட்சியின் கலைமுகமாக பயன்படுத்திக்கொள்ளத் தவறிப்போனது. இப்படிப்பட்ட சமயத்தில்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் திமுகவுக்கு ‘ஜாக்பாட்’ஆக அமைந்துவிட, கூடுதலாக ராஜாஜியின் சுதந்திரா கட்சிக் கூட்டணியும் சேர்ந்துகொள்ள 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது.
மன்றம் உருவான சூழல்
- அந்தத் தேர்தலில் காமராஜரும் தோற்று, காங்கிரஸும் தோற்றபின், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சிறிது எஞ்சியிருந்த உற்சாகமும் பறிபோனது. பலர் திமுகவில் இணைந்து கொண்டார்கள். இந்தச் சமயத்தில் காங்கிரஸுக்குள் இளைஞர்களை ஈர்த்து அதை வலிமைப்படுத்தும் ஒரு வழிமுறையைத் தேடினார் சின்ன அண்ணாமலை. அப்போது அவருக்குக் கைகொடுத்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நட்சத்திரப் புகழ். அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் தொடங்கிய சூழலைப் பற்றி, தனது ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ சுயசரிதையில் எழுதும்போது: “ஒருநாள் நான் மதுரை சென்றிருந்தேன்.
- மதுரையின் முன்னாள் துணை மேயராக பதவி வகித்த எனது நண்பர் ஆனந்தன் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் தமிழ்நாட்டில் காங்கிரஸின் நிலை பற்றியும் காங்கிரஸுக்குப் புதிய இளைஞர்களைக் கொண்டுவருவது பற்றியும் ஆலோசனை செய்தேன். அவர், ‘தமிழ்நாடு முழுவதும் நடிகர் திலகத்துக்கு எண்ணற்ற இளைஞர்கள் மன்றம் வைத்திருக்கி றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தனித்தனியாக இருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்த்தால் காங்கிரஸுக்குப் புதிய பலம் கொண்டு வர லாம். மதுரையில் மட்டும் இப்படி 60 மன்றங்கள் இருக்கின்றன’ என்றார்.
- அவர்கள் அனைவரையும் மறுநாளே அழைத்தோம். 500 பேர் அரை மணி நேரத்தில் ஒன்றுகூடினர். அவர்கள் அனைவரிடமும் பேசினேன். பிறகு தமிழகம் முழுக்க 40 நாள் பயணம் செய்து சிவாஜி ரசிகர்களைச் சந்தித்தேன். 1969, ஆகஸ்ட் மாதம் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் பிறந்தது. அதில் இணைந்த நடிகர் திலகத்தின் ரசிகர்கள் நான் எண்ணியதுபோலவே பின்னர் காங்கிரஸிலும் தங்களை இணைத்துக் கொண்டார்கள்” என்று பதிவுசெய்திருக்கிறார். இப்படித் தான் 15 ஆயிரம் மன்றங்களை ஒருங்கிணைத்தார் சின்ன அண்ணமலை. 1971இல் 1.50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அகில இந்திய சிவாஜி ரசிகர்மன்றம், காங்கிரஸுக்கு பலம் சேர்க்கும் அமைப்பாக மாறியது.
மிரள வைத்த உள்ளடக்கம்
- மன்றம் தொடங்கிய மூன்றாவது மாதம், 1969 அக்டோபர் முதல் தேதி அன்று நடிகர் திலகத்தின் 43வது பிறந்த நாள் விழாவையும், அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் முதல் பேரவைக் கூட்டத்தையும் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடத்தினார் சின்ன அண்ணாமலை. தமிழகம் முழுவதுமிருந்து 50 ஆயிரம் ரசிகர்கள் தலைநகரில் திரண்டு ஊர்வலம் நடத்த, சென்னை மிரண்டது. இந்தக் கூட்டத்தில் காமராஜரும் கலந்துகொண்டு பேசினார். உலக அரங்கில் தமிழ் சினிமாவின் பெருமிதமாக இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் புகழ் சேர்க்கும் ஒரு பத்திரிகையை, தீவிர காங்கிரஸ் அரசியலராக இருந்த சின்ன அண்ணாமலை தொடங்கி, அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தியதாலோ என்னவோ, அதன் உள்ளடக்கம் என்பது, காரசாரமான அரசியல் விமர்சனத்துக்கும் பெயர் பெற்று விளங்கியது.
- அண்ணாவுக்குப் பின் முதல்வரான கலைஞர். மு.கருணாநிதியின் ஆட்சி, அவருக்குப் பின் முதல்வரான எம்.ஜி.ஆரின் ஆட்சி, கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு ஆகியவற்றை நேரடியாகத் தாக்கும் காரசாரமான கருத்துப் படங்கள், அதிரடி அரசியல் விமர்சனக் கட்டுரைகள், காட்டம் குறையாத தலையங்கம் என ‘சிவாஜி ரசிகன்’ பத்திரிகையின் அழகான அட்டைப் படங்கள் தவிர, பெரும்பாலான உள்ளடக்கங்கள் தீப்பிடிக்காத குறைதான். சின்ன அண்ணாமலையில் தீவிர விமர்சனத்தில் சிக்கிய அன்றைக்கு இருந்த தலைவர்கள் அதை எதிர்க்கருத்தாக ஏற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு இப்படியொரு பத்திரிகையோ விமர்சன சகிப்புத்தன்மையோ சாத்தியமே இல்லை.
இதழியல் வாழ்க்கை
- விடுதலைப் போராட்ட வீரராகக் களம் கண்டபடி, ஏ.கே.செட்டியாரின் புகழ்பெற்ற ‘குமரி மலர்’ இதழில் சிலகாலம் பணியாற்றிய சின்ன அண்ணாமலை, சாவியை ஆசிரியராகக் கொண்டு 1946இல் வெள்ளிமணி என்கிற வார இதழைத் தொடங்கினார். அதில் 'சங்கரபதிக் கோட்டை’ என்கிற தொடரை எழுதினார். கல்கியுடன் இணைந்து இந்தியா முழுக்கப் பயணம் மேற்கொண்டு அந்த அனுபவங்களை ‘காணக் கண் கோடி வேண்டும்’ என்கிற தலைப்பில் எழுதினார். “இவை இரண்டுக்கும் ஏ.கே.செட்டியாரும் கல்கியும் எனக்குக் கொடுத்த ஊக்கமே காரணம்” என்பதைக் குறிப்பிட்டுள்ள சின்ன அண்ணாமலையிடம், காந்திஜி தனது ‘ஹரிஜன்’ ஆங்கில இதழைத் தமிழில் பதிப்பித்து நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார். சின்ன அண்ணாமலைத் தொடங்கி நடத்திய தமிழ்ப் பண்ணை ஒரு முன்னோடிப் பதிப்பகம். ‘சங்கப் பலகை’ என்கிற இலக்கிய இதழையும் நடத்திய அவரது இதழியல் வாழ்க்கை விரித்து ஆய்வுசெய்யப்பட வேண்டிய ஒன்று.
நன்றி: இந்து தமிழ் திசை (24 - 11 – 2023)