TNPSC Thervupettagam

அரசியலைத் தாண்டிய ஆக்கபூர்வமான பட்ஜெட்!

July 25 , 2024 171 days 129 0
  • பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட் 2024-25), ஜூலை 23இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட், சமகால அரசியல் சூழலை எதிர்கொள்வதற்கான முனைப்பு என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சியை நோக்கிய முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையூட்டுகிறது.
  • மக்களவைத் தேர்தல் களத்தில் எதிரொலித்த வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் விதத்தில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • முன்னணி 500 நிறுவனங்களில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், புதிய வருமான வரி முறையில் தனிநபர்களுக்கான நிலைக்கழிவு உயர்த்தப்பட்டிருப்பது, தொழில்முனைவோருக்கான முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, சிறு, குறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை.
  • முதலீட்டாளர்களுக்கு ஏஞ்சல் வரி நீக்கம் உள்ளிட்டவை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலேயே முன்வைக்கப்பட்டவை என காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். சமகாலப் பிரச்சினைகளை அரசு கவனத்தில் கொண்டிருப்பது இதன் மூலம் புலனாகிறது. விவசாயத் துறைக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அறிவிப்பும் இடம்பெற்றிருக்கிறது.
  • 100 பெரிய நகரங்களில் நீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு - திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள், சேவைகள் வங்கித் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மகளிர், சிறுமிகள் மேம்பாட்டுக்கென ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரயில் விபத்துகள் அதிகரித்திருக்கும் சூழலில் ‘கவச்’ தானியங்கிப் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஓரளவு நம்பிக்கையளிக்கிறது.
  • பிஹாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவற்றை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.
  • தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்கை அதிகரிக்க விரும்பும் பாஜக அரசு, மறுபுறம் தமிழ்நாட்டின் முக்கியத் தேவைகளைப் புறக்கணித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்தப் போக்கை, திமுக மட்டுமல்லாது, பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான அதிமுக, தற்போதைய கூட்டணிக் கட்சியான பாமக ஆகியவையும் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், பாஜக ஆட்சியில் இருக்கும் ஒடிஷா, ஆளும் கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கும் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
  • சமீப ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டுகளைவிடவும், இந்த பட்ஜெட்டில்தான் நேரடி - மறைமுக வரிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. வரிகளை வசூலிப்பதில் காட்டும் முனைப்பை நலத் திட்டங்களில் அரசு இன்னும் அதிகமாக காட்ட வேண்டும். அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள் அவசியம். 100 நாள் ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் மொத்தச் செலவைவிடக் குறைவாக இருப்பதும், யுஜிசி, ஐஐஎம் உள்ளிட்டவற்றுக்கான நிதி குறைக்கப்பட்டிருப்பதும் விமர்சிக்கத்தக்கவை.
  • காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான காத்திரமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. அதிகரித்துவரும் விலைவாசியைச் சமாளிப்பதற்கான திட்டங்களும் அதிகம் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி, பிரதமர் மோடியின் ‘விகஸித் பாரத்’ திட்டத்துக்கு அனுகூலம் சேர்க்கும் வகையில் ஆக்கபூர்வமான அறிவிப்புகள் இடம் பெற்றிருப்பதால் இந்த பட்ஜெட்டை மனமார வரவேற்கலாம்!

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்