- தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. அரசுக்கும் காவல் துறையினருக்கும் சவால் விடுக்கும் அளவுக்கு, சமூக விரோதிகள் இழைக்கும் இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
- தலைநகர் சென்னையில் ஜூலை 5இல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஜூலை 16இல் மதுரையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஜூலை 27இல் சிவகங்கை மாவட்டத்தில் பாஜக கூட்டுறவு அணியின் மாவட்டச் செயலாளர் செல்வகுமார், அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர் உஷா ராணியின் கணவர் ஜாக்சன், ஜூலை 28இல் கடலூர் நகர அதிமுக வட்டச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
- இந்தக் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகொலைகளுக்குக் குடும்பப் பகை, முன் விரோதம் போன்றவை காரணங்கள் என்று காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 595 படுகொலைகள் நடந்திருப்பதாகவும், தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
- இதை மறுத்துள்ள தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ‘தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல; கலை, அறிவுசார் மாநிலம். கொலைகள் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல’ என்று மறுத்திருக்கிறார். மேலும், ‘சட்டம்-ஒழுங்கு சீர் கெடும் அளவுக்கு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை’ என்றும் ‘குற்றங்கள் தற்செயலான எண்ணிக்கையில் ஒருசில நேரம் அதிகமாக இருக்கும், குறைவாகவும் இருக்கும். அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது’ என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
- இதுபோன்ற படுகொலைகள் நிகழும்போது அவற்றை முன்னிட்டு அரசையும் காவல் துறையையும் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சிகளின் முதன்மையான பணி. கொலைகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு படுகொலைகளை நிகழ்த்தும் சமூக விரோதிகளுக்கு அரசு குறித்தோ, காவல் துறை குறித்தோ எந்தப் பயமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதைப் புறந்தள்ளிவிட முடியாது.
- இதுபோன்ற அரசியல்வாதிகளின் கொலைகள் எந்த ஆட்சியிலும் நடைபெறக் கூடியவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அரசியல் பிரமுகர்கள் படுகொலைகள் குறித்துத் தொடர்ந்து வெளியாகும் செய்திகள், மக்கள் மனதில் ஆட்சி மீதான எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே, எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு முகங்கொடுத்து, தடுப்பு நடவடிக்கைகளையும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வாங்கித்தரும் நடைமுறையையும் அரசு துரிதப்படுத்த வேண்டும்.
- முன்விரோதம், குடும்பப் பகையால் நிகழும் படுகொலைகளைத் தடுப்பது காவல் துறையினருக்குச் சவாலானதுதான். ஆனால், கொலை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்துச் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை என்பதை மறுக்க முடியாது. அத்துடன், உளவுத் துறையின் விழிப்பான செயல்பாட்டின் மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரரீதியிலான விரோதங்களையும் அது தொடர்பான பழி தீர்க்கும் சதித் திட்டங்களையும் முன்கூட்டியே அறிந்து, குற்றம் நிகழ்வதற்கு முன் தடுப்பது பெரும்பாலும் சாத்தியமே! எனவே, ஆயுதம் தூக்கும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு காவல் துறை அடக்க வேண்டும். அரிவாள் கலாச்சாரத்தை ஒழிப்பதிலும் அரசியல் கொலைகளைத் தடுப்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிர முனைப்புக் காட்ட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 08 – 2024)