TNPSC Thervupettagam

அரசியல் செயல்பாடுகளுக்கு விடுமுறைக் காலமே இல்லை

June 1 , 2020 1690 days 737 0
  • கரோனா ஊரடங்கின் அழுத்தத்திலிருந்து மெல்ல அரசியல் செயல்பாடுகள் வெளியே வரும் சமிக்ஞைகள் ஒருவழியாக வெளிப்படலாகின்றன.
  • உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தை ஜூன் 3-ம் தேதி அன்று நடத்தத் தீர்மானித்திருப்பது வரவேற்புக்குரிய முடிவு.
  • இதையே தொடக்கமாகக் கொண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

காணொலி வழியே நாடாளுமன்றக் கூட்டங்கள்

  • நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டங்களையும் நாடாளுமன்றக் கூட்டங்களையும் இணைய வழியில் நடத்துவதைப் பற்றியேனும் யோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் உள்துறை விவகாரங்களுக்கான நிலைக் குழுவின் தலைவருமான ஆனந்த் ஷர்மா தொடர்ந்து வலியுறுத்திவந்ததை அடுத்து இக்கூட்டத்துக்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது.
  • ஏற்கெனவே, 34 நாடுகளில் காணொலி வழியே நாடாளுமன்றக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகையில், இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டங்களையும் அவ்வாறே நடத்தலாம் என்று கூறியிருந்தார் ஆனந்த் ஷர்மா.
  • இதேபோல, தொழிலாளர் நலக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவர் மஹ்தாப், மக்களவைத் தலைவருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார்.
  • காணொலி முறையிலேனும் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தைத் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சசி தரூரும் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்திவருகிறார்.
  • சமீபத்தில், மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கைய நாயுடுவும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் நாடாளுமன்ற அவைகளைக் கூட்டுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி சமீபத்தில் சந்தித்துப் பேசியபோதே, ஆக்கபூர்வமான கருத்துகள் வெளிப்பட்டன.
  • இச்சந்திப்பில், பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘ஊரடங்கின் காரணமாக ஜனநாயகத்தை நிறுத்திவைக்க முடியாது’ என்று கூறினார்.
  • வாய்ப்புள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஊரடங்கு விதிமுறைகளின் காரணமாகக் கலந்துகொள்ள வாய்ப்பில்லாதவர்கள் காணொலி வசதிகளின் வாயிலாக விவாதங்களில் பங்கேற்கவும் திட்டமிட்டுவருவதாகவும்கூட கூறினார்.
  • அதுவே சரியானது. இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரும் நெருக்கடியை நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் ஆலோசனையும் மிக முக்கியமானது. ஒரு நல்ல யோசனை பல கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்றலாம்; ஒரு கூர்மையான விமர்சனம், பெரும் தவறுகளுக்கு அணை போடலாம்; முக்கியமாக அடித்தட்டு மக்களின் குரல் ஆட்சியில் எதிரொலிக்கும்.
  • அரசியல் செயல்பாடுகளுக்கு விடுமுறையே கிடையாது; தொடரட்டும்!

நன்றி: தி இந்து (01-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்