அரசியல் பங்களிப்பு அவசியம்
- பாரிஸ் ஒலிம்பிக்கில் சர்வதேச அளவில் கவனம் பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசியலில் நுழைந்ததும் தேர்தலில் நின்றதும் வெற்றி பெற்றதும் அண்மையில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தின. அவர் மல்யுத்தப் போட்டியில் தோல்வியுற்றதை அரசியல் ரீதியான காரணங்களோடு தொடர்புபடுத்தி நம் மன உலகம் அவரை நோக்கி ஆதரவாக இரண்டு கைகளையும் நீட்டியதை நாம் மறுக்க முடியாது.
- போட்டியில் பங்கேற்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் நம்மை அதிர்ச்சிடைய வைத்தன. என்னைத் தனிப்பட்ட முறையில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்கிற செய்திதான். இவருக்கு முன் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாருமே வெற்றிபெற்ற பெண்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டவர்கள். ஹேமமாலினி தொடங்கி பி.டி. உஷா வரைக்கும் அவர்களுடைய அரசியல் வெற்றி இன்றுவரை விவாதப் பொருளாகவே இருந்துவருகிறது. அரசியல் களத்தில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். அதேநேரம் இரோம் ஷர்மிளாவின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் அரசியலில் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதையும் நாம் அறிவோம்.
அரசியலில் பெண்கள்
- இந்தியாவில் பெண்கள் அரசியலுக்கு வருவது என்பது மிகக் கடினமானதாகத்தான் இன்று வரை இருக்கிறது. அரசியல் கட்சிகளில் ஏராளமான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். முதலமைச்சராகவோ பிரதமராகவோகூடப் பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சாமானியக் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் அரசியலுக்கு வருவது என்பது எவ்வளவு பெரிய போராட்டம். ஒரு பெண், ‘நான் அரசியலில் ஈடுபடப் போகிறேன்’ என்று சொன்னவுடன் அந்தக் குடும்பத்தில் இருந்து எத்தகைய எதிர்வினைகள் வரும் என்பதைக் காட்டிலும் அவளுக்கு ஒரு சிறு ஆமோதிப்புகூட வராது என்பதே வேதனையானது.
ஒப்புக் கொள்ளாத சமூகம்
- ஒரு காலக்கட்டத்தில் பெண்கள் தொகுதிகளாகச் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதுதான் கணவருக்குப் பின்னால் ஒதுங்கிப் பதுங்கி நின்ற பெண்கள் களத்திற்கு வந்தார்கள். அவர்களுக்கென்று தனி அடையாளம் கிடையாது. அவர்களுக்கென்று தனி முகங்கள் கிடையாது. அவர்களுக்கென்று தனிக் கொள்கைகள் கிடையாது. அவர் அந்தப் பதவியைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளலாமே தவிர, பதவிக்கான செயல்பாடுகள் அனைத்தையும் அவருடைய கணவர்தான் பார்த்துக்கொள்வார். ஒரு பெண் வீட்டில் செய்யும் வேலையை அவள் உடல் நலமில்லாதபோது அவளுடைய ஆண் துணை செய்யும்போதுதான் அந்தப் பெண் அதுவரை மிக லகுவாக அந்த வேலையைச் செய்திருப்பது புரியும். எப்போதுமே கீழ்மைப் பார்வையோடும் கற்பிதத்தோடும் அணுகப்படும் பெண்கள், அலுவலகத்தில் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். எனினும், ஒரு பெண்ணின் வாகனம் ஓட்டும் திறமையைக்கூடச் சந்தேகப்பட்டு எள்ளலுக்கு உள்ளாக்கும் சமூகம்தான் நம்முடையது. அப்படியிருக்கும்போது ஒரு பெண் அரசியலில் சிறந்து விளங்குவார் என்பதை இந்தச் சமூகம் எப்படி ஒப்புக்கொள்ளும்?
சாதித்த பெண்கள் குழு
- 2024 மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் 73 பேர் மட்டுமே. 2019ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் ஐந்து பெண்கள் குறைந்துள்ளனர். பெண்களுக்கு அரசியல் அறிவும் ஞானமும் இருக்கிறது என்று இந்தச் சமூகம் ஒப்புக்கொள்ளவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நான் பணியாற்றியபோது தலைமைப் பொறுப்பில் இருந்தவர், பெண்கள் குழுவான எங்களுக்கு ஓர் அரசியல் சமூக நிகழ்ச்சியைக் கொடுத்ததார். அப்போது அந்தத் தொலைக்காட்சியில் பணியாற்றிய பலரும் எங்களைச் சந்தேகக் கண்ணுடன்தான் பார்த்தனர். ஆனால், அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் பல்வேறு விஷயங்களைப் பேசி, தீர்வை நோக்கி நகரச் செய்தது.
- ஊடகங்களில் பெண்கள் பொறுப்புக்கு வரும்போதோ பணிக்கு அமர்த்தப்படும்போதோ அவர்களுக்குச் சமையல், மனநலம், கோலம் போடுதல் போன்ற பகுதிகளை மட்டுமே பொறுப்பாகக் கொடுப்பார்கள். எனக்கும் அது நேர்ந்திருக்கிறது. ஆனால், முதன்முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்த ஆவணப் படங்களை நாங்கள் வெளியிட்டபோது எங்களைக் குறித்த ஒரு நம்பிக்கை எங்களுக்கே வந்தது.
எதிர்ப்புகள் பலவிதம்
- தாழையூத்து கிருஷ்ணவேணியை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. மறக்கவும் கூடாது. திருநெல்வேலியில் பிறந்து தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவியேற்றபோது நாற்காலியில் உட்கார்ந்த ஒரே காரணத்துக்காக அவர் கொடூரமாக வெட்டப்பட்டார். சாதிய ஒடுக்குமுறை காரணமாக நிகழ்ந்த அந்த வன்செயலோடு அவரது அரசியல் பயணம் தடைபட்டது. அவர் எப்படி இருக்கிறார் என்றுகூட இன்றுவரை பெரும்பாலான ஊடகங்களோ சமூகமோ தனிப்பட்ட நபர்களோ அவர் சார்ந்த கட்சியோ வருத்தப்படுகிறதா என்று தெரியவில்லை. ஒரு பெண் அதிகாரத்துக்கு வரும்போது அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வன்முறையின் மூலமாக அவளை அடக்க நினைப்பது கோழைத்தனம் என்பது கிருஷ்ணவேணியைத் தாக்கியவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஜெயித்துவிட்டதாக இந்தத் தருணத்தில்கூட நினைத்துக் கொண்டிருக்கலாம். இது ஒரு பக்கம் இருக்க நீண்ட போராட்டத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டுப் பதவியை வந்தடையும் பெண்கள் அதே அதிகாரத்தைக் கைக்கொண்டு ஆண்களையோ மற்ற பெண்களையோ அடக்க முற்படுவதும் உண்டு. அந்த இடத்தில் பெண்களுக்கு ஆணாதிக்க மனநிலை வந்துவிடுவதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
- அரசியலில் ஜோதிமணியின் வளர்ச்சி எப்போதும் மிகுந்த வியப்பைத் தரும். இந்திரா என்னும் எழுத்தாளராக எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். தண்ணீர்ப் பஞ்சத்தின்போது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தன் ஊர் மக்களுக்கு அவர் தண்ணீர் பெற்றுத்தந்த புள்ளியில் இருந்து அவரது அரசியல் பயணம் ஆரம்பமானது என நினைக்கிறேன். இன்று நாடாளுமன்றத்தில் ஜோதிமணியாக ஒலிக்கும் அவரது குரல் சாமானிய மனிதர்களில் இருந்து ஒரு பெண் அரசியலில் ஈடுபட முடியும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது. அதேநேரம், அரசியலில் ஈடுபடும் பெண்களைப் பலரும் வசைபாடுவது தொடர்கதையாக இருக்கிறது.
- பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் குறித்த உருவக்கேலி மிக ஆபாசமானதாகவும் அயர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. தொப்பையைச் சுமந்துகொண்டு அலையும் அரசியல்வாதிகளில் ஆண்களை யாரும் உருவக்கேலி செய்வதே இல்லை. உடலாக மட்டுமே எல்லாத் தளங்களிலும் பெண்கள் பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமே தேவையில்லை. மேடையில் ஒரு பெண் மாற்றுக் கருத்தை முன்வைக்கும்போது அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கட்சிப் பிரமுகர் ஒருவர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கையை ஓங்கிக்கொண்டு வருவதை எப்படி நாம் ஆதரிக்க முடியும்? ஒரு பெண் உதட்டுச்சாயம் அணிந்திருந்தார் என்பதற்காகப் பணி மாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தை ஒருபோதும் நாம் ஆமோதிக்கவே முடியாது.
- அனைத்தையும் மீறிப் பெண்களின் அரசியல் ஈடுபாடு மட்டுமே சட்டம் - அரசியல்சாசனம் சார்ந்த மாற்றங்களைப் பெண்ணுலகில் கொண்டுவரும். கருத்தியலில் முரண்கள் இருப்பினும், அரசியல் களத்தில் செயல்படும் சில துடிப்பான பெண்களை நாம் ஆதரித்தே ஆக வேண்டும். அதுவே நம் கடமை.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)