TNPSC Thervupettagam

அரசியல் வன்முறை என்னும் ஆபத்தான ஆயுதம்

July 13 , 2023 362 days 214 0
  • மேற்கு வங்கத்தில் ஜூலை 8 அன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ‘மேற்கு வங்க மக்கள் மனதில் திரிணமூல் காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது’ என மம்தா பெருமிதம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தத் தேர்தலையொட்டி நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஏராளமானோர் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.
  • கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த அரசியல் வன்முறைச் சம்பவங்களில் மேற்கு வங்கத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வாக்குப்பதிவு நாளில் மட்டும் 17 பேர் கொல்லப் பட்டனர். பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது, எதிர்க்கட்சி முகவர்கள் துரத்தியடிக்கப் பட்டு, ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது எனத் தேர்தல் வன்முறையில் சாத்தியமுள்ள அனைத்தும் அரங்கேறியிருக்கின்றன.
  • அரசியல் வன்முறையில் முதன்மை இடம் வகிக்கும் மாநிலம் மேற்கு வங்கம். வங்கப் பிரிவினை, தேசப் பிரிவினை எனப் பல்வேறு தருணங்களில் பெரும் கலவரங்களைச் சந்தித்த மண் அது. மார்க்சிஸ்ட் கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருந்தபோதும் அரசியல் சார்ந்த குற்றச்செயல்கள் நடைபெற்றிருக்கின்றன. மம்தா பானர்ஜியும் வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த வரலாறு கொண்டவர்தான். வன்முறை அரசியலுக்கு முடிவுகட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்குவந்தவர் அவர்.
  • ஆனால், அவரது கட்சியே பெரிய அளவில் அராஜகத்தில் ஈடுபட்டுவருவது மிகப் பெரிய முரண். மேற்கு வங்கத்தில் நிலைபெற முயற்சிக்கும் பாஜகவுக்கும் வன்முறைச் சம்பவங்களில் பங்குள்ளது. சமீபத்திய வன்முறைகளில் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.
  • வன்முறைக்குக் காரணம் என அரசியல் கட்சிகள் பரஸ்பரம் விரல் நீட்டுகின்றன. திரிணமூல் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கியிருக்கிறது. மறுபுறம், பாஜகவும் திரிணமூல் காங்கிரஸும் ரகசிய உடன்படிக்கையில் இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. பாதுகாப்புப் படைகளை வேண்டுமென்றே தாமதமாக அனுப்பியதாக மத்திய உள் துறைமீது அம்மாநிலக் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி குற்றம் சாட்டியிருக்கிறார்.
  • கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மத்தியப் பாதுகாப்புப் படைகள் வாக்காளர்களை வற்புறுத்தியதாகக் குற்றம்சாட்டிவந்த திரிணமூல் காங்கிரஸ், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அந்தப் படைகள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தது. கொல்கத்தா உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர்தான் மத்தியப் படைகள் அங்கு அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் பரவலாக நடைபெற்ற வன்முறையை அப்படைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
  • மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் வெற்றிகள் மூலம், ஊரகப் பகுதிகளில் செல்வாக்கை வளர்த்தெடுக்க முடியும் என்பதால், வெற்றியை உறுதிப்படுத்த உச்சகட்ட வன்முறையில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன. வறுமை, வேலைவாய்ப்பின்மை காரணமாக, ஏராளமான இளைஞர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து வன்முறை, அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். இப்படி அரசியல்ரீதியான மோதல்களில் இழப்புகளையும் வலிகளையும் சந்திப்பது ஏழை எளியோர்தான்.
  • அரசியலில் வன்முறை ஓர் ஆயுதமாகக் கைக்கொள்ளப்படுவது ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்து. மேற்கு வங்க அரசு மட்டுமல்ல, அரசியல் கட்சிகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை இது. அரசியல் வன்முறைக்கான அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து களைய வேண்டியது மிக மிக அவசியம்!

நன்றி: தி இந்து (13 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்