TNPSC Thervupettagam

அரசு அலுவல்களைக் கணினிமயமாக்குவதை இனியும் தாமதிக்கலாமா தமிழ்நாடு?

June 19 , 2020 1672 days 733 0
  • தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடமிருந்து ஜூன் 17 அன்று அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கை அதிர்ச்சியளிப்பதாகத்தான் இருக்கிறது.
  • கடந்த மார்ச் 25 தொடங்கி மே 17 வரையிலான ஊரடங்குக் காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அலுவலகத்துக்கு வர இயலாத அரசு ஊழியர்கள் பணிபுரிந்ததாகக் கருதப்படுவார்கள் என்று கூறும் அந்தச் சுற்றறிக்கை, மே 18-க்குப் பிறகு பகுதியளவு பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டதால், அலுவலகத்துக்கு வர இயலாதவர்கள் அனைவரும் விடுப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

சில கேள்விகள்

  • அரசு ஊழியர்களை அக்கறையுடனேயே அணுகுகிறது என்றாலும், இந்தச் சுற்றறிக்கை தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறைகள் சார்ந்து சில கேள்விகளையும், மிக முக்கியமான ஒரு நீண்ட காலப் பிரச்சினை ஒன்றையும் நம் கவனத்துக்கொண்டுவருகிறது.
  • முதலில் சில கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம். சென்னையில் பணியாற்றிவந்த ஒரு கடைநிலை ஊழியர், குமரியில் இந்த ஊரடங்குக் காலத்தில் சிக்கிக்கொண்டிருந்தால், சென்னைக்கு மீண்டும் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத சூழலில் எப்படித் தன்னுடைய பணிக்குத் திரும்ப முடியும்?
  • தனி வாகனத்தில் அவர் வந்திருக்க வேண்டும் என்றால், அதற்கான பதினைந்தாயிரம் - இருபதாயிரம் செலவு யாருடையது?
  • சரி, சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து அன்றாடம் ரயிலில் வந்து சென்ற பல நூறு பேர், இந்த ஊரடங்குக் காலத்தில் சென்னைக்கு எப்படி இயல்பாக வந்து சென்றிருக்க முடியும்?
  • எல்லாவற்றுக்கும் மேல் நேரடியாகப் பணிக்கு வரும் உடனடி அவசியமற்ற பணிகளில் இருப்பவர்களும்கூட அரசுப் பணி என்பதாலேயே தொற்று அபாயத்தை அன்றாடம் எதிர்கொள்வதற்கான நிர்ப்பந்தம் என்ன?

பெரும் தேக்கத்தை உண்டாக்கும்

  • அரசு ஊழியர் என்றாலே, கொழுத்த சம்பளத்துடன் அமர்ந்திருப்பவர்கள் என்ற பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு கொஞ்சம் வெளியே வந்து சிந்திப்போம்.
  • ஒரு அரசுத் துறையின் அதிகாரியும், கடைநிலை ஊழியரும் ஒன்றல்ல. அதிகபட்சம் மாதம் ரூ.15,000 ஊதியம் பெறும் ஓர் ஒப்பந்த ஊழியரும் அரசின் ஊழியர்தான். பல துறைகளில் கடைநிலை ஊழியர்களின் ஆரம்பச் சம்பளம் ரூ.20,000-க்கும் குறைவுதான்.
  • ஒருவேளை நல்ல சம்பளத்தில் இருந்தாலும், ஐம்பது வயதைத் தாண்டிய பெண்மணியை கரோனா ‘அரசு ஊழியர்’ என்று சொல்லித் தன் அபாயக் கட்டத்துக்கு வெளியே நிறுத்திவிடுவதில்லை.
  • நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்குப் பணியாற்றுவதில் அரசு ஊழியர்கள் முன்வரிசையில் நிற்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
  • அப்படி அவர்கள் மக்கள் பணியாற்றுவது அவர்களுடைய கடமை என்பதாலேயே அவர்களுடைய பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது பொதுச் சமூகமாகிய நம்முடைய கடமை ஆகிறது.
  • தலைமைச் செயலரின் சுற்றறிக்கை அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், இது ஒரு தார்மிகப் பொறுப்பை அரசு தட்டிக்கழிப்பதும் காருண்யமின்றி நடப்பதுமான செயல்பாடு என்பதைத் தாண்டி, அதிகபட்சம் விடுப்புகள் இழப்புடனோ, ஊதிய இழப்புடனோ முடிந்துவிடக் கூடியது.
  • ஆனால், ஒரு சமூகமாக தமிழ்நாடு எவ்வளவு பணிகளை இழக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டில் ஒரு பங்கு ஊழியர் எண்ணிக்கையுடன் பணியாற்றுவது என்பது ஒரு அலுவலகப் பணிக் கலாச்சாரத்தைப் பெரிய அளவில் முடக்கும்.
  • ஏற்கெனவே பெரும் பணிச் சுமை – ஆள் பற்றாக்குறையில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் இது பெரும் தேக்கத்தை உண்டாக்கும்.

ஏன் கணினிமயமாக்கப்படவில்லை?

  • தமிழ்நாட்டில் மட்டும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு நிர்வாகப் பணிகளில் இருக்கிறார்கள்.
  • அலுவலகங்களில் கணக்குப் பராமரிப்புப் போன்ற பணிகளை மட்டும் மேற்கொள்வோரின் எண்ணிக்கையே 10 லட்சத்தைத் தாண்டும்.
  • கேள்வி என்னவென்றால், ‘கரோனாவுக்கு இன்னும் மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தொற்றுக்கான வாய்ப்புடன்தான் ஓர் அரசு ஊழியர் அலுவலகத்துக்கு வந்தாக வேண்டும்.
  • அலுவலகம் வந்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஏன் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடாது?
  • தனியார் துறைகளில் சாத்தியமுள்ளவர்களை எல்லாம் வீட்டிலிருந்து பணியாற்றச் சொல்கிறது அரசு. தன்னுடைய துறைகளை அதற்கான முன்னுதாரணமாக ஆக்கியிருக்க வேண்டுமா, இல்லையா?’
  • முன்னெப்போதைக் காட்டிலும் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் அதிகமாகவும், ஒருங்கிணைந்தும் வெளிப்பட வேண்டும்; ஆனால், நேர் எதிரான சூழலில் நம்முடைய அரசு இயந்திரம் இருப்பதையே இந்தச் சுற்றறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • ஏன் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் இன்னும் கணினிமயமாக்கப்படவில்லை?

அரசு உணர வேண்டும்

  • தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னேறியிருப்பது எப்படி ஒரு உண்மையோ அதேபோல, கணினிமயமாக்கல் போன்ற பல விஷயங்களில் பின்தங்கியிருப்பதும் உண்மை.
  • பல மாநிலங்களில் அரசு அதிகாரிகள், தேவைப்படும் நிலையிலுள்ள ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.
  • குறிப்பாக, மத்திய அமைச்சக அலுவலகங்கள் இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் இதற்கான முன்னுதாரணமாக இயங்கின.
  • மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய தகவலறிவியல் மையம் வடிவமைத்த ‘இ-ஆபிஸ்’ என்ற மென்பொருளின் வழியாக மின்கோப்புகள் அனுப்பப்பட்டதோடு, பாதுகாப்பான முறையில் காணொலி உரையாடல்களும் நடத்தப்பட்டன.
  • கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் ஊரடங்குக் காலத்தில் பெரிய அளவில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில்தான் இந்த அலைக்கழிப்பு! இதில் ஒரு பெரிய நகைமுரண் என்றால், இரு தசாப்தங்களுக்கு முன்பே அரசு அலுவலகப் பணிகளைக் கணினிமயமாக்கும் திட்டங்களை அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னெடுத்தார்.
  • இதற்கான முன்னோட்டமாக திருவாரூர் மாவட்டம், தன்னுடைய மக்கள் சேவைகளைக் கணினிமயமாக்க நடவடிக்கை எடுத்தது அன்று நாட்டிலேயே முன்னோடி நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
  • ஆனால், மக்களுக்கு வழங்கும் சேவைகள் கணினிமயமானதே அன்றி அலுவலகப் பணிகள் முழுமையும் கணினிமயமாகும் பணி அடுத்தடுத்து வந்த ஆட்சிகளில் நடந்தேறவில்லை.
  • வெளியூர்களில் சிக்கியிருக்கும் அரசு ஊழியர்கள் பலரும் அலுவலகங்களுக்கு வர முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தபடி அவர்களுக்குப் பகிரப்படும் வேலைகளைக் கணினி - செல்பேசி வழியாக மேற்கொள்வதை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.
  • மிக முக்கியமாக இன்று அரசு அலுவலகச் செயல்பாடுகளில் - ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட - அனைத்துத் தொழில்நுட்பங்களும் பெரும் பங்கு வகிக்கிறது. என்ன கொடுமை என்றால், இவர்களுடைய பணிகள் எதுவும் அரசின் கணக்கில் வராது.
  • ஏனெனில், இது எதுவும் அதிகாரபூர்வம் கிடையாது. மேலதிகம் கணினி, இணைய வசதி, பணியாற்றுவதற்கான உத்வேகம் எல்லாமும் இருந்தாலும், எல்லாப் பணிகளையும் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு அரசு அலுவலகங்களில் கிடையாது.
  • கரோனா குறைந்தபட்சம் மேலும் சில மாதங்களுக்கேனும் நீடிக்கும் பிரச்சினை என்கிற அளவில், அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கிட இதையே தருணமாக அரசு கருதிட வேண்டும்.
  • ஒவ்வொரு நிறுவனமும் தன் ஊழியர்களை எப்படி நடத்துவது என்பதற்கான முன்னுதாரணத்தை உருவாக்கிடும் முதல் பொறுப்பு தனக்குத்தான் இருக்கிறது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும்!

நன்றி: தி இந்து (19-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்